உலக கோப்பை கால்பந்துப் போட்டியை நேரலை ஒளிபரப்பு செய்துகொண்டிருந்த ஒரு ஆண் நிருபரை பெண் ரசிகைகள் கன்னத்தில் முத்தமிட்டதை பாலியல் துன்புறுத்தல் என்று சொல்லமுடியுமா என சீனாவில் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் விவாதித்துவருகின்றனர்.
தென் கொரியத் தொலைக்காட்சியான எம்.பி.என்.னைச் சேர்ந்த ஜியோன் க்வாங்-ரியூல் எனும் செய்தியாளர் ஜூன் 28 அன்று ரஷ்யாவில் நேரலை ஒளிபரப்பு செய்துகொண்டிருக்கும்போது இரண்டு முறை ரஷ்ய பெண் ரசிகைகள் அவரை முத்தமிட்டனர். அந்த நிருபர் அந்த முத்த சம்பவத்தை சிரித்துக் கடக்க முயன்றார். ஆனால், தொலைக்காட்சி நேரலை செய்துகொண்டிருந்த பெண் நிருபர் ஒருவருக்கு முத்தம் தர முயன்ற சம்பவம் விமர்சனத்துக்கு உள்ளான சில தினங்களில் இந்த சம்பவம் நடந்ததால் ஜியோன் சங்கடப்பட்டார்.
பெண் நிருபருக்கு முத்தமிட முயன்ற ஆண் ரசிகர்களின் செயல்கள் விமர்சிக்கப்பட்டதுபோல ஆண் நிருபருக்கு ரஷ்யப் பெண் ரசிகர்கள் முத்தமிட்டது ஏன் விமர்சிக்கப்படவில்லை என்று சீனாவின் மிகப்பெரிய சமூக ஊடகமான வெய்போவில் விவாதம் நடந்தது. ''இது முந்தைய செய்திக்கு முற்றிலும் மாறான செய்தி'' என ஒரு வெய்போ பயனர் தெரிவித்தார்.
'' ஏன் இது பாலியல் துன்புறுத்தல் ஆகாது?'' என ஒருவர் கேட்டிருந்தார். அவரது பின்னூட்டத்துக்கு நூற்றுக்கணக்கான லைக்குகள் குவிந்தது. '' பார்க்க அழகாக இருக்கும் ஒருவர் முத்தமிட்டால் அது பாலியல் துன்புறுத்தலாகாது'' என ஒருவர் கிண்டலான தொனியில் எழுதியிருந்தார். ஆண் பெண் இடையில் சமத்துவம் வேண்டும் என சில பயனர்கள் கூறினார்கள். மேலும் இந்த நிகழ்வுக்கான எதிர்வினைகள் சமத்துவமின்மை இன்னும் நிலவுவதை காட்டுகிறது அவர்கள் கூறினர். பெண்களை குறிக்க மட்டும் அழகு என்ற சொல்லைப் பயன்படுத்தும் ஊடகங்களோடு சிலர் முரண்பட்டனர்.
முத்தம் சீனாவில் விவாதத்துக்கான பொருளாக இருந்தபோதிலும், தென் கொரியாவில் இந்த நிகழ்வு பெரிதாக கவனம் பெறவில்லை. எம்பிஎன் மற்றும் சில ஊடகங்கள் மட்டுமே இந்த நிகழ்வு குறித்து பேசின.
இருப்பினும், ஒரு தென் கொரிய ட்விட்டர் பயனர் இந்த விவாதத்தில் தனது கருத்தை ஒரு பதிவு மூலம் வெளியிட்டிருந்தார். ''உங்கள் பாலினம் எதுவாக இருப்பினும் நீங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளீர்கள். ஒரு எம்பிஎன் நிருபர் உலககோப்பை குறித்து செய்தி சேகரிக்கச் சென்றார். அவர் இரண்டு பெண்களால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானார்'' என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக பாலியல் தாக்குதல் குறித்த விஷயங்கள் வெய்போவில் பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியுள்ளன. அதிகாரிகள் இவ்விவகாரங்களை முக்கியமானதாக கருதவில்லை என பலர் குற்றம் சாட்டினர். கடந்த வாரம் ஒரு காணொளி வெளியானது. அதில் ஆண், பெண், இளம் வயதினர் மற்றும் முதியவர்கள் அனைவருமே பாலியல் தாக்குதலுக்கு ஆளாகக்கூடும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இக்காணொளி வைரல் ஆனது மட்டுமின்றி சமூக வலைதளத்தில் மற்றொரு விவாதத்தையும் கிளப்பியிருந்தது.