Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 25 May 2025
webdunia

ஆஸ்கர் மேடையில் அரங்கேறும் முதல் இந்திய பாடல்: 'நாட்டு நாட்டு' பாடல் விருதை வென்று சாதிக்குமா?

Advertiesment
Nattu Nattu
, ஞாயிறு, 12 மார்ச் 2023 (14:30 IST)
140 கோடி இந்தியர்களின் பார்வையும் இப்போது ஆஸ்கர் விழா மேடை நோக்கி திரும்பியிருக்கிறது. பரிந்துரைப் பட்டியலில் உள்ள ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் விருதை வென்று அசத்துமா? என்பதே அனைவரின் ஒரே எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பாகுபலி புகழ் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்ற முதல் இந்திய திரைப்பட பாடலாகும்.

படத்தில் இந்தப் பாடலை பாடிய பின்னணிப் பாடகர்கள் ஆஸ்கர் விழா மேடையிலும் பாடி அசத்த இருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சி இந்தியாவில் நாளை காலை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.

அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர். படம் கடந்த ஆண்டு வெளியான பிறகு நாட்டு நாட்டு பாடல் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. பாடலுக்கு நடனமாடி ஏராளமானோர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும் மற்ற சமூக வலைதளங்களிலும் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். துள்ளலான இசையும், ஒருங்கிணைந்த சிறப்பான நடனமும் பார்வையாளர்கள் மத்தியில் இந்த பாடலை சூப்பர் ஹிட்டாக்கின.

கீரவாணி இசையில், சந்திரபோஸ் வரிகளில் உருவான நாட்டு நாட்டு பாடல் கடந்த ஜனவரியில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்று வரலாறு படைத்தது. உலகப் புகழ் பெற்ற ரிஹானா, டெய்லர் ஸ்விப்ட், லேடி ககா போன்ற ஜாம்பவான்களை இந்த பாடல் பின்னுக்குத் தள்ளியது. அடுத்த சில நாட்களிலேயே, சிறந்த பாடலுக்கான கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதை அந்தப் பாடல் வென்றது.

இந்த வெற்றி ஆஸ்கர் விழா மேடையிலும் தொடரும் என்று பாடலை உருவாக்கிய படைப்பாளிகள் நம்புகின்றனர்.

"இது வெறும் இசை, நடனம் மட்டுமல்ல. ஆர்.ஆர்.ஆர். படத்தின் ஒட்டுமொத்த கதைச் சுருக்கமே இந்த 10 நிமிட நாட்டு நாட்டு பாடல் என்று கூறலாம்" என்று வேனிட்டி ஃபேர் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடிய 2 புரட்சியாளர்கள் குறித்த கற்பனைக் கதையை ஆர்.ஆர்.ஆர். படம் சொல்கிறது. இந்த வரலாற்று புனைவுக் கதையில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரிட்டிஷ் அதிகாரிகளை 2 சுதந்திரப் போராட்ட வீரர்கள் நடனத்தின் மூலம் மண்டியிடச் செய்யும் வகையில் ஒரு சண்டைக் காட்சியாகவே நாட்டு நாட்டு பாடலை கற்பனை செய்திருந்ததாக ராஜமௌலி கூறுகிறார்.

"படத்தின் கதைக்குள் இருந்த ஒரு கதைதான் இந்த பாடல்" என்று அவர் கூறுகிறார்.

2020-ம் ஆண்டில், ஆர்.ஆர்.ஆர். படம் தயாரிப்பில் இருந்த போது, படத்தின் கதாநாயகர்களான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோரின் நடனத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் பாடல் ஒன்று வேண்டும் என்று இசையமைப்பாளர் கீரவாணியிடம் ராஜமௌலி கூறியுள்ளார்.

Nattu Nattu

உடனே கீரவாணி தமது நேசத்திற்குரிய பாடலாசிரியர் சந்திரபோஸிடம், "நீ விரும்பியதை எழுது. ஆனால், கதை 1920-களில் நடக்கிறது. அந்த நேரத்திற்கேற்ற வார்த்தைகளை பயன்படுத்துங்கள்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மெட்டு ஏதும் இல்லாமலேயே பாட்டெழுத அமர்ந்த சந்திரபோஸ், நடனத்தை குறிக்கும் தெலுங்கு வார்த்தையான நாட்டு நாட்டுவை பாடலின் தொடக்க வரிகளாக அமைத்துள்ளார்.

பிபிசி தெலுங்கிடம் பேசிய அவர், கீரவாணிக்கு மிகவும் விருப்பமான துள்ளல் இசைக்கு ஏற்றபடியே பாடல் எழுதியதாக கூறினார். ஆந்திரா, தெலங்கானா ஆகிய தெலுங்கு பேசும் மாநிலங்களில் உள்ள நாட்டுப்புறப் பாடல்களில் துள்ளல் இசையே அதிகம் பயன்படுத்தப்படும்.

தெலங்கானாவில் குழந்தைப் பருவத்தைக் கழித்த சந்திரபோஸ், ஜோவர் ரொட்டியுடன் மிளகாய் என்பது போன்ற பல நாட்டுப்புறக் குறிப்புகளை இந்த பாடலில் பயன்படுத்தியுள்ளார்.

பாடலின் பெரும்பகுதி இரண்டே நாட்களில் முடிந்துவிட்டதாக சந்திரபோஸ் கூறினார். ஆனால், பாடலின் எஞ்சிய பகுதிகள் கூடி வர 19 மாதங்களாகிவிட்டன என்கிறார் அவர்.
பாடலுக்கு 95 நடன அசைவுகளை அமைத்துக் கொடுத்த நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித்தையே நாட்டு நாட்டுப் பாடலின் வெற்றிக்கான பெருமை சேரும் என்று ராஜமௌலியும், கீரவாணியும் கூறுகின்றனர்.

"ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகிய இருவருக்குமே தனித்தனி ஸ்டைல்கள் உள்ளன. ஆகவே, இருவருக்கும் பொருந்தக் கூடிய ஒன்றை அவர் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது" என்று ராஜமௌலி கூறினார். இந்த ஆடையில் அவர்கள் ஏதாவது செய்ய முடியுமா? என்று ராஜமௌலியிடம் ராம்சரண் கேட்ட பிறகு, இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தை மேலும் மேம்படுத்த வேண்டியிருந்தது.

போட்டிபோட்டு நடனமாடும் நடனக் கலைஞர்கள் சோர்வடைந்து ஒருவர் பின் ஒருவராக கீழே சரிய, கடைசியில் கதாநாயகர்கள் மட்டுமே எஞ்சி நிற்பதாக உச்சம் பெறும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.

அதன் பின்னர், ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் ஒருவரை ஒருவர் நோக்க, இருவருக்கும் இடையே நடனத்தில் போட்டி நடக்கிறது. இந்த பாடல் மூலம் படத்தின் கருவான நட்பு, போட்டி மற்றும் ஒற்றுமை ஆகிய அனைத்தையும் சொல்லிவிட முயன்றதாக ராஜமௌலி கூறினார்.

பின்னர் நடந்தது எல்லாம் வரலாறு.

கடந்த ஆண்டு ஆர்.ஆர்.ஆர். படம் வெளியானதில்இருந்து இன்று வரையிலும் இந்த பாடலின் நடன அசைவுகளை அப்படியே செய்ய ரசிகர்கள் தொடர்ந்து முயன்ற வண்ணம் உள்ளனர். லாஸ் ஏஞ்சலஸ் நகரில் படம் திரையிடப்பட்ட போது, இந்த பாடல் வருகையில் பார்வையாளர்கள் பலரும் மேடைக்கு சென்று நடனமாடியதைப் பார்க்க முடிந்தது.

உக்ரைனில் உள்ள மாரின்ஸ்கிய் அரண்மனையில் இந்த பாடல் படமாக்கப்பட்ட போலும், இந்திய கிராமச் சூழலை பிரதிபலிக்க வேண்டும் என்பதே என் குறிக்கோளாக இருந்தது என்கிறார் ராஜமௌலி. போரின் விளிம்பில் உள்ள நாட்டில் படப்பிடிப்பு நடத்தியதால் தன்னை பைத்தியக்காரன் என்று சிலர் விமர்சித்ததாக முந்தைய பல பேட்டிகளில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

150 நடன கலைஞர்கள், 200 படப்பிடிப்புக் குழுவினர் நாளொன்றுக்கு 12 மணி நேரம் உழைத்து 15 நாட்களில் இந்த பாடலை படம்பிடித்துள்ளனர்.

படப்பிடிப்பின் போது தாம் ஒவ்வொரு முறை ஓகே சொல்லும் போதும் ராஜமௌலி மேலும் ஒரு முறை அந்த காட்சியை படம்பிடிக்கக் கேட்டதாக நடன இயக்குநர் ரக்ஷித் கூறினார்.

"பாடலின் ஒவ்வொரு ஃபிரேமும் மிகச் சரியாக ஒருங்கிணைந்திருக்க வேண்டும் என்பதில் ராஜமௌலி உறுதியாக இருந்தார்" என்று நேர்காணல் ஒன்றில் ராம்சரண் கூறியிருந்தார்.

நாட்டு நாட்டு பாடல் வெளியாகி கிட்டத்தட்ட ஓராண்டாகிவிட்ட போதிலும், பார்வையாளர்களிடையே இன்றும் கூட வரவேற்பு அதிகமாகவே இருக்கிறது. ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றதும், விருது நிகழ்ச்சியில் பாடப்படுவதும் எப்போதும் இல்லாத உச்சபட்ச உற்சாகத்தை தந்துள்ளது.

"இந்த பாடல் எங்களுடையது அல்ல. இது பொதுமக்களுடையது. பலதரப்பட்ட வயதினரும், பல்வேறு கலாசார பின்னணி கொண்டவர்களும் கூட இந்த பாடலை கொண்டாடுகிறார்கள்" என்று ராம்சரண் கூறுகிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் 2 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ; டிரைவரே கிடையாது!