Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை கோட்டாபய ராஜபக்ஷ: மக்கள் மாளிகையான அதிபர் மாளிகை!

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (00:29 IST)
இலங்கை கோட்டாபய ராஜபக்ஷ: மக்கள் மாளிகையான அதிபர் மாளிகை - 'எங்கள் பணத்தில் அவர் சொகுசாக இருந்திருக்கிறார்'
 
பதவி விலகப் போவதாக அறிவித்திருக்கும் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எங்கிருக்கிறார் என்று உறுதியாகத் தெரியவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகத் தயார் என்று அறிவித்துவிட்டார். அனைத்துக் கட்சி அரசு அமையுமானால், அதற்கு வழிவிட்டு ஒட்டுமொத்தமாக ராஜிநாமா செய்யப் போவதாக அமைச்சர்களும் கூறியிருக்கிறார்கள்.
 
அதே நேரத்தில் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய அரசை அமைப்பதற்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் அதிபருக்கும், பிரதமருக்கும் எதிரான மக்கள் போராட்டம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது பெரும் பெரும் புதிராக இருக்கிறது.
 
இப்படியொரு சூழலில் இலங்கையின் அதிபர் மாளிகை முன் எப்போதையும் விட இப்போதுதான் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் அந்த இல்லத்தில் இல்லை. அவருக்குப் பாதுகாப்பாக இருந்தவர்களும், பணியாளர்களும்கூட இப்போது வெளியேறிவிட்டார்கள். மக்கள் மாத்திரமே அங்கு இருக்கிறார்கள்.
 
கடந்த 9-ஆம் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்த பிறகு சுற்றுலாத் தலத்துக்கு வருவது போல மக்கள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள். மாளிகைக்குள் நுழைவதற்கு மிக நீண்ட வரிசை காணப்படுகிறது. வீட்டில் இருந்து உணவுப் பொருள்களை எடுத்து வந்து அதிபர் மாளிகையின் புல்வெளியில் அமர்ந்து உண்ணும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது.
 
 
"என்ன ஆனாலும் பரவாயில்லை என்று அதிகாலை 2 மணிக்கு எழுந்து வந்திருக்கிறோம். பஸ்கூட கிடைக்காமல், நீண்ட நேரம் காத்திருந்து, நடந்து வந்து தொற்றிக் கொண்டு கொழும்பு வந்து சேர்ந்தோம். பின்னர் நீண்டதூரம் நடந்து இங்கு வந்திருக்கிறோம். பிள்ளைகளுக்கு இது நினைவுகூரத்தக்கதாக இருக்கும் என்பதால்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம்." என்றார் ஹார்ட்டன் நகரில் இருந்து வந்திருக்கும் சங்கீதா.
 
மக்கள் மாளிகை
மாளிகையில் சில மரப் பொருள்கள், கண்ணாடிகள் போன்றவை சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்போது 'இந்த மாளிகை மக்களின் சொத்து. அதனால் எதையும் சேதப்படுத்த வேண்டாம்' என்று கோரும் ஒரு அறிவிப்பு தொங்கவிடப்பட்டிருக்கிறது.
 
அதிபர் மாளிகையின் இருக்கைகளில் அமர்ந்தும் முக்கியமான பகுதிகளில் நின்றும் மக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
கண்டி நகரில் இருந்து சில ஆயிரம் பேர் ரயில்களில் வந்திருப்பதாக அங்கிருந்து அதிபர் மாளிகையைப் பார்க்க வந்த வேல்ராஜா கூறினார்.
 
மக்கள் மாளிகை
"இந்தச் சாலையில் பல முறை போயிருக்கிறோம். அதிபர் மாளிகைப் பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டோம். செல்ஃபி எடுத்தால்கூட பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள். இப்போது வந்து பார்ப்பது மிகவும் சந்தோஷம். உள்ளே என்ன இருக்கிறதென்று பார்ப்பதற்கு மக்கள் மிகவும் ஆர்வமா இருகிறார்கள்" என்றார் அவர்.
 
பலருக்கு அதிபர் மாளிகையைப் பார்ப்பதென்பது உணர்வுப்பூர்வமானதாக இருக்கிறது என்பதை அவர் கடந்த வந்த தொலைவைக் கொண்டும், ஐந்தாறு மணி நேரம் வெயிலில் காத்திருக்கும் பொறுமையைக் கண்டும் புரிந்து கொள்ளலாம்.
 
நண்பகல் நேரத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு நீண்டிருந்த வரிசையில் மக்கள் காத்திருந்தார்கள்.
 
காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களே மாளிகையை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொண்டு வருகிறார்கள். மக்களின் வருகையை ஒழுங்குபடுத்தும் பணியை அவர்கள் செய்து வருகிறார்கள். ஷிப்ட் முறையில் பணியாற்றுவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
 
மக்கள் மாளிகை
காலி முகத்திடல் போராட்டத்தைப் போலவே இங்கும் தண்ணீரும் உணவுப் பொருள்களும் வாகனங்களில் வந்திறங்குகின்றன. தொழில் அதிபர்கள் சிலர் தங்களுக்கு உதவுவதாக போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள்.
 
"நாங்கள் அமைதியாகத்தான் போராட்டத்தைத் தொடங்கினோம். பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிய பிறகுதான் உணர்வெழுச்சியில் அதிபர் மாளிகையில் நுழைந்தோம். அதைக் கைப்பற்றுவது எங்களது நோக்கமாக எப்போதும் இருக்கவில்லை" என்றார் போராட்டக்காரர்களில் ஒருவரான ஜவஹர்லால் நேரு.
 
அதிபர் பதவி விலகினால் இந்தக் கட்டடத்தைவிட்டு போராட்டக்காரர்கள் வெளியேறிவிடுவார்கள் என்று பேசப்படும் நிலையில் அவர்களின் திட்டம் வேறுமாதிரியாக இருக்கிறது.
 
மக்கள் மாளிகை
கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினாலும் அதிபர் மாளிகையைவிட்டு உடனடியாக மக்கள் வெளியேறப் போவதில்லை என்கிறார் ஜவஹர்லால் நேரு.
 
தீவிரமாகப் போராட்டத்தில் ஈடுபடுவோரைத் தவிர சாதாரணமான மக்களுக்கும் ஆட்சியாளர்கள் மீது கோபம் இருப்பதை, இங்கு வருவோரின் குரல்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
 
வெலிகாம நகரில் இருந்து வந்திருக்கும் ஷர்மிளாவின் பேச்சில் இந்தக் கோபம் தென்பட்டது.
 
"நாங்கள் கஷ்டத்தில் இருக்கும்போது, அவர் சொகுசுசாக இருந்திருக்கிறார். மக்களின் இவ்வளவு கஷ்டத்துக்கும் காரணம் அவர்தான். எங்கள் ஜனாதிபதி ஜனாதிபதியாகவே இல்லை." என்றார் அவர். சில மாதங்களே ஆன கைக்குழந்தையுடன் அவர் நீண்ட பயணத்தை மேற்கொண்டு இங்கு வந்திருக்கிறார்.
 
தற்போது பாதுகாப்புக்கு இருந்த பெரும்பாலானவர்கள் இப்போது இல்லை. ஒரு சில ராணுவ வீரர்கள் மாத்திரம் மாளிகைக்கு உள்ளேயும் வெளியேயும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களும் வெறும் பார்வையாளர்கள் போலவே தென்படுகிறார்கள்.
 
மக்கள் மாளிகை
இங்கிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள அதிபரின் செயலகம் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பூட்டிக் கிடந்தது. அதன் வாயிலில்தான் அதிபர் கோட்டாபயவுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது இந்த அலுவலகத்துக்குள்ளும் மக்கள் மாத்திரமே இருக்கிறார்கள். அதிபர் மாளிகைக்கு வருவோர் பெரும்பாலும் இதையும் பார்த்துவிட்டுச் செல்கிறார்கள்.
 
பொருளாதார நெருக்கடிகளும், போராட்டங்களும் தொடர்ந்தாலும் அதிபர் மாளிகையை பார்த்துச் செல்வோர் வாழ்வின் முக்கியமான ஒன்றைச் சாதித்து விட்ட பெருமிதத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பர்ஸ் திருடு போகவே இல்லை: பாஜக விளக்கம்..!

இந்த ஆண்டு மிகச்சிறந்த மழை காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

மதுரை காவல்நிலையம் அருகே துண்டிக்கப்பட்ட தலை.. உடல் எங்கே? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments