சென்னையில் கடந்தாண்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு ஆறு வயது சிறுமி ஹாசினி கொல்லப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது.
இது வரை இந்த வழக்கில் என்ன நடந்துள்ளது என்பது குறித்த பத்து முக்கிய தகவல்கள்:
சென்னை ஆலந்தூரில் தன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஹாசினி திடீரென காணாமல் போனார். இச்சம்பவம் நடந்தது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்.
தஷ்வந்த் என்ற பொறியாளர் ஹாசினியை கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி பிறகு உடலை எரித்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. ஹாசினி குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.
தஷ்வந்த் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. இதனையடுத்து அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், பெற்றோருடன் சென்னையில் வசித்து வந்த தஷ்வந்த் கடந்த டிசம்பர் மாதம் அவரது தாய் சரளாவை கொலை செய்தது தெரிய வந்தது. நகைக்காக தன் தாயை தஷ்வந்த் கொன்றதாக காவல்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து தலைமறைவான தஷ்வந்தை, தனிப்படை போலிஸார் மும்பையில் கைது செய்தனர். மும்பையில் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லும் வழியில் போலீசாரிடம் இருந்து தஷ்வந்த் தப்பியோடினார்.
தப்பி ஓடிய அவரை மீண்டும் கைது செய்த போலீஸ், தாய் சரளாவை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைத்தது.
ஹாசினி கொலை வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் இன்று குற்றவாளி தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.