இந்திய நாளிதழ்களில் இன்று (சனிக்கிழமை) வெளியான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார். அதில், "17-ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைத் தோற்கடித்து மதச்சார்பற்ற மாற்று அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்துவது என்று சூளுரைத்துள்ளோம்.
விலைவாசியைக் கணக்கில் கொண்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் 200 நாள்கள் வேலையும், ரூ.400 குறைந்தபட்ச கூலியும் கிடைக்கும் விதத்தில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்.
பெரு முதலாளிகள், பில்லியன் கோடீஸ்வரர்கள் மீது கூடுதல் வரி விதிப்பு என்ற முறையில் மாற்றம் செய்யப்படும். செல்வ வரியை மீண்டும் கொண்டு வருவோம். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்" உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அந்த கட்சி அறிவித்துள்ளது.