Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெஸ்ஸாலினா வரலாறு: கட்டுக்கடங்காத காதல் இச்சைகளுக்காக அறியப்பட்ட மகாராணியின் கதை

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (11:10 IST)
சூழ்ச்சி, சதித்திட்டங்கள் போன்றவை இன்றைய உலக அரசியலில் மட்டும் காணப்படுபவை அல்ல. பண்டைய ரோமானியப் பேரரசிலும் இது போன்ற ஏராளமான கொடூரமான சூழ்ச்சிகளும், சதித்திட்டங்களும் இருந்துள்ளன.
 
ஆனால் இரக்கமற்ற அரசியல், சந்தேகத்திற்கிடமான மரணங்கள் மற்றும் அதிக சதித்திட்டங்கள் நிறைந்த உலகில் கூட, மகாராணி வலேரியா மெஸ்ஸாலினா தனித்து நிற்கிறார்.
 
அதிகாரத்தில் ஒட்டிக்கொள்வதற்காக அவருடைய சூழ்ச்சிகள் மற்றும் சதித்திட்டங்களை அரங்கேற்றி பெயர் பெற்றவராக விளங்கினார் என்பது மட்டுமல்ல, எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய தீராத காம இச்சைக்காகவும் அவர் பெரிதும் அறியப்பட்டவதாக விளங்கினார். இன்றும் அதற்காகவே நினைவுகூரப்படுகிறார்.
 
பண்டைய ரோமானிய எழுத்தாளரும், படைத்தளபதியுமான பிலினி தி எல்டர் தமது நூலான இயற்கை வரலாற்றில் உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் எடுத்துக்கொண்டால் மனிதன் மட்டுமே தீராத காம இச்சையுடன் கூடிய விலங்காக இருக்கிறான் எனத் தெரிவித்துள்ளார்.
 
மகாராணி மெஸ்ஸாலினா இதை நிரூபித்துக் காட்டியதாகவும் இந்த எழுத்தாளர் அவரது நூலில் குறிப்பிட்டுள்ளார். 24 மணிநேரமும் எந்தப் பெண் ஒரு ஆணுடன் தொடர்பில் இருக்க முடியும் என அவரது காலத்தில் வாழ்ந்த பாலியல் தொழிலாளர்களுடன் போட்டியில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்.
 
"பெண் பாலியல் தொழிலாளர்களை விட அதிக எண்ணிக்கையில், 25 ஆண்களுடன் ஒரு நாளில் உறவு கொண்டு அவர் இப்போட்டியில் வெற்றி பெற்றார்," என அவர் தமது பத்தாவது புத்தகத்தில் 83 வது பிரிவில் தெரிவித்துள்ளார்.
 
இது போன்ற கதைகளைக் கேட்கும் போது, உண்மையில் மெஸ்ஸாலினா எப்பேற்பட்ட ஒரு பெண் எனக் கண்டுபிடிப்பது கடினமான செயலாகவே இருக்கிறது.
 
இருப்பினும், "மெஸ்ஸாலினா: பாலியல் தொழில் மற்றும் அவதூறுகளை எதிர்கொண்ட மகாராணி" என்ற புத்தகத்தை எழுதிய கார்கில்- மார்ட்டின் என்ற எழுத்தாளர் மட்டுமே அவரைப் பற்றி ஓரளவுக்குச் சரியான புரிதல்களுடன் கூடிய விவரங்களைத் தெரிவித்துள்ளார்.
 
எதிர்பார்க்க முடிந்திராத அதிகாரத்தின் உச்சம்
வட ஆப்பிரிக்கா வரை தனது அதிகாரத்தை விரிவுபடுத்திய க்ளாடியஸ் என்ற மகாராஜாவின் மூன்றாவது மனைவியான மெஸ்ஸாலினா, ஒரு கட்டத்தில் முன்னெப்போதும் எதிர்பார்த்திராத அளவுக்கு அதிகாரத்தின் உச்சத்தை அடைந்தார்.
 
உண்மையில் மெஸ்ஸாலினா எப்போது பிறந்தார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், அவர் கிளாடியஸுடன் திருமண வாழ்க்கையில் இணைந்த போது அவருக்கு 15 அல்லது 18 வயதாக இருந்திருக்கும் என மதிப்பிடப்படுகிறது. கிளாடியஸின் வயது அப்போதே 50ஐ நெருங்கிக் கொண்டிருந்தது.
 
மெஸ்ஸாலினா மிகவும் புகழ்பெற்ற, மதிப்பும் மரியாதையும் மிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் மற்றும் அவரது கணவர் அரச குடும்பத்தின் ஒரு அங்கமாக விளங்கினார் என்ற போதிலும், அவர் ஒரு மகாராணியாக மாறுவார் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
 
கிளாடியஸ் ஒரு மகாராஜாவாக இருந்தாலும், அவர் வயதானவர், எப்போதும் புலம்பிக் கொண்டிருப்பவர், விகாரமான முகத்தைக் கொண்டவர், நாகரிகமற்ற நடத்தையைக் கொண்டவர் என்ற பல உண்மைகள் அவரை அனைவரிடம் இருந்தும் பிரித்துவைத்த காரணமாக அமைந்தன.
 
சிறு வயதில் அவர் நீண்ட காலத்துக்கு வெறும் வரலாற்றுப் புத்தகங்களை மட்டுமே எழுதிவந்த நிலையில், அவருக்கு ஆட்சியில் எந்த அதிகாரமும் இருக்கவில்லை. ஆனால், அவருடைய அண்ணன் மகனான மகாராஜா காலிகுலா, அவரை முக்கிய அரச பதவியில் அமர்த்திய பின் தான் அவருக்கு முதன்முதலாக அரசியல் அதிகாரங்கள் அவருக்குக் கிடைத்தன.
 
ஆனால், கி.பி. 41-ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி காலிகுலா எதிர்பாராத வேளையில் படுகொலை செய்யப்பட்ட பின், அவருக்கு அதிகாரம் தானாகவே தேடிவந்தது.
 
அடுத்த நாளே அவர் அந்நாட்டின் மகாராஜாவாக படைப்பிரிவுகளால் அறிவிக்கப்பட்டார்.
அந்த நேரத்தில் ரோமில் புதிய ஆட்சி அதிகார நடைமுறைகளே இருந்தன.
 
ரோமாபுரி சாம்ராஜ்யத்தின் முதல் வம்சமான ஜுலியோ- கிளாடியன் வம்சத்தின் நான்காவது மகாராஜாதான் கிளாடியஸ். கிமு 27 வரை இந்தப் பேரரசு ஆட்சி அதிகாரங்களைச் செலுத்திவந்தது.
 
ஆனால் அதற்கு முன்பு, ரோமாபுரி ஒரு குடியரசு முறையிலேயே ஆட்சி செய்யப்பட்டுவந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிமான்களும், சட்டமியற்றுபவர்களும் ஆட்சி நடத்திவந்தனர்.
 
ஆனால் ஜுலியஸ் சீசருக்கும், போம்ப்பி தி கிரேட்டுக்கும் இடையே அரை நூற்றாண்டு காலம் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதியில் அகஸ்டஸ் ஒரு அமைதிக்கான திட்டத்தை அளித்தார். அத்திட்டத்தின் படி, அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் அமைதி, வளம் மற்றும் நிலைத்தன்மை பெறமுடியும் என்றும் விளக்கினார்.
 
இது தான் ரோம் அரசியலில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது. சட்டமன்றங்கள் மற்றும் பொது மன்றத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அரசியல் நடவடிக்கைகள் அரச குடும்பத்துக்கு இடம் மாறின.
 
அதன் பின் அரசியல் ஏற்பட்ட மாற்றங்கள் நன்றாக அறிந்துகொள்ளும் வகையில் ஆவணப்படுத்தப்பட்டு வந்தன. அரசவையில் இருக்கும் ஒரு நபரின் மதிப்பு அவரது அறிவு மற்றும் திறமையினால் தீர்மானிக்கப்படும் என்ற நிலை மாறி, மகாராஜாவுக்கு எவ்வளவு அருகில் அவர் அமர்ந்திருக்கிறாரோ, அந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்ற நிலை உருவானது.
 
காலிகுலாவிடமிருந்து இதையெல்லாம் மெஸ்ஸாலினா தெரிந்துகொண்டார். ரோமானியர்கள் எவரும் மகாராஜாவுக்கு எவ்வளவு அருகில் இருக்கிறார்களோ அந்த அளவுக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்கும் என்பதை அவர் அப்போது தெளிவாகப் புரிந்திருந்தார்.
 
ரோமாபுரி பேரரசில் அரசியல் என்பது மிகவும் கொடூரமான ஒன்றாக இருந்தது.
 
கிளாடியஸ், மெஸ்ஸாலினா தம்பதியினர் தாங்கள் எதிர்கொள்ளப்போகும் ஆபத்துக்களைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர். ஏனென்றால், அவர்களுடைய முன்னோர்கள் அவர்களுடைய அரண்மனையில் எதிர்கொண்ட கொடூரமான ஆபத்துக்களைப் பற்றி நன்றாக அவர்களுக்குத் தெரிந்திருந்தது.
 
காலிகுலா கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அவர் யாரையோ படுகொலை செய்து, அந்த உடலை கறிசமைத்து உண்டதாகவும் வதந்திகள் சுற்றிக்கொண்டிருந்தன.
 
காலிகுலாவுடன் அவரது மனைவியும், மகளும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
 
பிபிசி வரலாற்றுப் பிரிவிடம் பேசிய கார்கில் மார்ட்டின், எதிர்காலத்தில் அவர்களால் ஏற்படும் ஆபத்துக்களை உணர்ந்த எதிரிகள் அவர்களையும் கொன்றுவிட்டதாகத் தெரிவித்தார்.
 
இது போன்ற கொடூர சம்பவங்கள் நடந்த போது, மெஸ்ஸாலினா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். அந்த தம்பதியினரின் வாரிசான பிரிட்டானிக்கஸ் அவரது கருவில் வளர்ந்துகொண்டிருந்தார்.
 
"அதனால் தான் மெஸ்ஸாலினாவுக்கு அதிகாரம் கிடைத்த முதல் நாளிலிருந்து, அந்தக் கருவைக் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டார். அவர் மகாராணியாக இருந்த காலம் முழுவதும் அதே பாதுகாப்பு உணர்வுடன் அவர் செயல்பட்டார்," என்கிறார் மார்ட்டின்.
 
மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்த பெருநிலப்பரப்பின் அதிகாரம் மிக்க பெண்ணாக அவர் சுமார் பத்து ஆண்டுகளுக்கு நீடித்தார்.
 
அவருடைய அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக எதையும் செய்யத் தயாராகவே அவர் இருந்தார்.
 
அவருடைய அரசியல் எதிரிகளை ஒடுக்க, பல்வேறு அரசியல் சூழ்ச்சிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
 
கி.பி. 48-ஆம் ஆண்டு வரை அவர் தனது அதிகாரங்களைத் தக்கவைத்ததில் மிகப்பெரும் வெற்றியாளராக விளங்கினார். ஆனால், அதன் பின் ஒரு மாபெரும் திருப்பமாக அவரும் படுகொலை செய்யப்பட்டார்.
 
அவருடைய மரணத்துக்குப் பின் அவரது நினைவுகளையும், அடையாளங்களையும் அழிக்கும் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டன. அவருடைய சிலைகளும் உடைக்கப்பட்டன. கல்வெட்டுக்கள் மற்றும் ஆவணங்களில் இருந்து, அவருடைய பெயரும் நீக்கப்பட்டன.
 
அடுத்த பல தசாப்தங்களுக்கு அவரைப் பற்றிய கதைகள் பலவாறு அரச குடும்பத்தினராலும், பொதுமக்களாலும் பரிமாறப்பட்டு வந்தன. இறுதியில் அவர் காம இச்சை மிகுந்த பெண் என்ற அடையாளம் உருவாக்கப்பட்டது.
 
அவர் ஒரு மிகவும் அழகான பெண் எனவும், எந்த ஒரு ஆண் மகன் அவரைப் பார்த்தாலும் ஒரே பார்வையில் அவரை வீழ்த்திவிடுபவர் என்றும் அவருடைய அழகான உதடுகள் மற்றும் புன்னகை யால் அனைவரும் மிக அதிகமாக ஈர்க்கப்பட்டனர் என்றும் அவரைப் பற்றிப் பேசப்படுகிறது. பல இலக்கியப் படைப்புக்களில் அவர் ஒரு கதாநாயகியாக உருவெடுத்தார். டெசிமோ ஜுனியோ ஜுவெனல் என்ற கவிஞர் அவரை 'அரச விலைமாது' எனக்குறிப்பிட்டார்.
 
"அவருடைய கணவர் தூங்கச் சென்ற உடன் பாலியல் விடுதிகளுக்கு செல்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படிச் சென்ற போது அவர் மாறுவேடத்தில் சென்றுள்ளார். பாலியல் விடுதிகளில் அவருடைய வாடிக்கையாளர்களான ஆண்களுடன் நிர்வாணமாகத் தூங்குவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்," என அவரது படைப்புக்களில் தெரிவித்துள்ளார்.
 
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு அவருடைய காம இச்சை குறித்த கதைகள் அதிகம் பேசப்பட்டு வந்தன.
 
பண்டைய ரோமாபுரி குறித்த வரலாற்று ஆசிரியர்களால் தவறாக விமர்சிக்கப்பட்ட பெண் என்ற குறுகிய வட்டத்துக்குள் நாம் மெஸ்ஸாலினாவை மட்டும் அடக்கிவிட முடியாது. அவரைப் போலவே மேலும் பலர் இருந்தனர். ஆனால் வரலாற்றாசிரியர்களின் கூற்றுப் படி, மெஸ்ஸாலினாவை இந்த விஷயத்தில் யாரும் வென்றுவிட முடியாது என்றே தெரியவருகிறது. மெஸ்ஸாலினா ஒரு வழக்கத்துக்கு மாறான பெண் என்றே அவர்கள் எல்லா இடங்களிலும் தெரிவித்துள்ளனர்.
 
"அவர் காதல் ரீதியாகவும் ஒரு மோசமான பெண்ணாகவே சித்தரிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஒரு விஷயத்தைக் கவனிக்கவேண்டியது மிகவும் அவசியம். ரோமின் ஒரு அதிகாரம் மிக்க பெண் மீது காதல் என்ற ஒன்றை மட்டுமே வைத்துக்கொண்டு அவதூறு பரப்ப முடியாது. அதற்கு மேலும் பல தேவைகள் இருக்கின்றன."
 
உதாரணமாக மகாராஜா கிளாடியசின் நான்காவது மனைவியும், மெஸ்ஸாலினாவுக்கு அடுத்து, அரசவைக்குச் சொந்தம் கொண்டாடும் வாரிசாகவும் இருந்த அக்ரிப்பினாவும் ஒரு ஆபத்தான, கொடூரமான பெண்ணாகவே பார்க்கப்படுகிறார். ஆனால் மெஸ்ஸாலினாவை விட, முற்றிலும் வேறு வகையான தீங்குகளை இழைக்கும் பெண்ணாகவே அவர் பார்க்கப்படுகிறார்.
 
இருப்பினும், மெஸ்ஸாலினாவைப் பற்றி சொல்லப்படும் கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவை கிடையாது.
 
ரோமாபுரியின் வரலாற்று ஆசிரியர்கள் மெஸ்ஸாலினாவைப் பற்றிப் பேசும் போது, கட்டுக்கடங்காத காதலைக் குறிக்கும் ஒரு பெயராகவே அந்தப் பெயரை உச்சரிக்கின்றனர்.
 
ஜுவெனலின் கருத்துக்களை மட்டுமே வைத்துப் பார்க்காமல், வேறு சில காரணங்களும் இதையே உணர்த்துகின்றன என்கிறார் கார்கில் மார்ட்டின்.
 
அந்த காலத்தில் மேடை நாடகங்களில் நடித்த மெஸ்டர் என்பவருடன் மெஸ்ஸாலினாவுக்கு தவறான உறவு இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் கார்கில் மார்ட்டின், ரோமில் வசித்து வந்த அழகான, வசதிபடைத்த நபரான கையஸ் சிலியஸ் பிரபு என்பவருடனும் அவருக்கு தொடர்பு இருந்தது என்கிறார்.
 
கடைசியில் 48 ஆண்டு கால சுகபோக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாள் வந்தது. அந்த நாள் மெஸ்ஸாலினாவின் இறப்பில் முடிவடைந்தது.
 
"ஒரு முறை கடற்கரை நகரமான ஓஸ்டியாவுக்கு கிளாடியஸ் சென்றிருந்தார். அப்போது, மெஸ்ஸாலினாவும், கையஸ் சிலியஸும் காதல் வயப்பட்டிருந்தனர். கிளாடியஸ் இல்லாத நேரத்தில் இருவரும் திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்தனர். பின்னர் கிளாடியஸிடம் இருந்து ரோமின் ஆட்சியைப் பறிக்கத் திட்டமிட்டிருந்தனர்," என பல ஆவணங்களில் எழுதப்பட்டுள்ளன.
 
டேக்டியஸ் போன்ற ரோமாபுரி வரலாற்று ஆசிரியர்களால் இது போன்ற வியப்பூட்டும் விஷயங்கள் தான் சொல்லப்பட்டுள்ளன.
 
அந்த நாள் வந்தது. சாட்சிகளின் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக ஒரே இடத்தில் சந்திக்கின்றனர். விருந்தினர்களுடன் அமர்ந்து இருவரும் விருந்தை உண்ட பின் திருமண விழாவை நிறைவு செய்கின்றனர். பின்னர் அவர்கள் இருவரும் ஒன்றாகவே இரவைக் கழித்தனர்.
 
மெஸ்ஸாலினா தொடர்பாக புதிய கதைகள் உருவாக்கப்படவில்லை என்றும், பழைய வரலாற்றுத் தகவல்களை வைத்துத் தான் இது போன்ற கருத்துக்கள் வெளியாகின என்றும் பெரும்பாலான வரலாற்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
எதிர்பார்த்ததைப் போலவே, கிளாடியஸ் மீண்டும் ரோமாபுரிக்குத் திரும்பிய போது இந்த விஷயங்கள் அனைத்தையும் அறிந்துகொண்டார்.
 
மெஸ்ஸாலினாவுடன் இணைந்து மகாராஜாவுக்கு உதவியும், ஆலோசனையும் அளித்து வந்த நார்சிஸோ தான் அப்போதும் மகாராஜா கிளாடியஸின் ஆலோசகராக இருந்தார். எனவே, மெஸ்ஸாலினாவின் திருமணத்தின் விளைவுகளைச் சரிசெய்யும் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொண்டார்.
 
சில மணிநேரங்களில், மெஸ்ஸாலினாவின் காதலர்களான சிலியஸ், மெஸ்டர் மற்றும் எட்டு பேர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின் தூக்கிலிடப்பட்டனர்.
 
மெஸ்ஸாலினா தமது கணவருடன் பேச முயன்ற போது, நார்சிஸோ அவரைத் தடுத்துவிட்டார்.
 
இதையடுத்து, மெஸ்ஸாலினாவை அடுத்த நாள் விசாரிக்க மகாராஜா கிளாடியஸ் உத்தரவிட்டார். இருப்பினும் நார்சிஸோ அவர் மீது இரக்கப்பட்டு விடுவார் எனச் சந்தேகித்த மகாராஜா கிளாடியஸ், மெஸ்ஸாலினாவைக் கொலை செய்வதற்காக வீரர்களையும் அனுப்பிவைத்துள்ளார்.
 
அரண்மனைத் தோட்டத்துக்குள் அச்சத்தில் மூழ்கிய படி உலாவிக்கொண்டிருந்த மெஸ்ஸாலினாவுக்கு எப்படித் தப்பிச் செல்வது என்பதே தெரியவில்லை. அவரைக் கொலை செய்ய வந்த நபர்களைக் கண்டவுடன், தற்கொலை செய்யவும் முயன்றிருக்கிறார். ஆனால் அப்போது அங்கு வந்த மற்றொரு நபர், அவரது நெஞ்சில் கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
 
மெஸ்ஸாலினா கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் கிளாடியசுக்குத் தெரிந்த போது, அதைப்பற்றிய விவரங்களைக் கூட அவர் கேட்கவில்லை. மாறாக ஒரு கோப்பை ஒயின் கொடுக்குமாறு பணியாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்