Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு விலைவாசி எப்படி உள்ளது?

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (22:32 IST)
எரிபொருள், எரிவாயு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடந்த ஆண்டு இதேநேரம் கடுமையான தட்டுப்பாடு நிலவியது. 10 முதல் 12 மணித்தியாலங்களுக்கு மேல் மின்சார தடையை எதிர்நோக்கி கடுமையான சிரமத்தை மக்கள் கடந்த ஆண்டு இதே காலப் பகுதியில் சந்தித்திருந்தனர்.
 
எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு பல கிலோமீற்றர் தொலைவிற்கு நீண்ட வரிசைகளில் மக்கள் கடந்த ஆண்டு இதே காலப் பகுதியில் காத்திருந்தார்கள்.
 
சுதந்திர இலங்கை என்றுமே எதிர்நோக்காத பாரிய பொருளாதார நெருக்கடியை, கடந்த ஆண்டு இதேகாலப் பகுதியில் நாடு எதிர்நோக்கியிருந்தது.
 
பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாத மக்கள், வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்த ஆரம்பித்தார்கள்.
 
இந்த போராட்டம் இலங்கை வரலாற்றில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.
 
 
லட்சக்கணக்கான மக்கள் கொழும்பில் ஒன்று கூடி, தமது எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.
 
அதன்பின்னர், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்று, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் ஊடாக, கடந்த ஆண்டு இதே காலப் பகுதியில் காணப்பட்ட நிலைமை, இந்த ஆண்டு இதே காலப் பகுதியில் மாற்றம் பெற்றுள்ளது.
 
இலங்கையின் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்க ஆட்சி செய்த 1970ம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையில் பஞ்சம் நிலவியதாக கூறப்பட்டாலும், அதை விடவும் பாரிய நெருக்கடிகளை கடந்த ஆண்டு இலங்கை சந்தித்து, தற்போது அதிலிருந்து சற்று மீண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
 
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவியதுடன், பொருட்களுக்கான விலைகள் பல மடங்குகளாக அதிகரித்திருந்தன.
 
கடந்த ஆண்டு இதே காலப் பகுதியில் இலங்கையிலுள்ள எரிவாயு நிறுவனங்களாக லிட்ரோ மற்றும் லாஃப் ஆகியன எரிவாயு விநியோகத்தை முற்று முழுதாக இடைநிறுத்தியிருந்தன.
 
அதன்பின்னரான காலத்தில் 12.5 கிலோகிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் 5000 ரூபாவை நெருங்கியிருந்தன.
 
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கடந்த ஆண்டு இதேகாலப் பகுதியில் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டிருந்ததுடன், விறகுகளில் சமையலை செய்யும் உணவகங்கள் மாத்திரமே திறந்திருந்தன.
 
குறிப்பாக பிரதான நகரங்களிலுள்ள உணவகங்கள் பெரும்பாலும் மூடப்பட்டிருந்ததை கடந்த ஆண்டின் இதே காலப் பகுதியில் அவதானிக்க முடிந்தது.
 
எனினும், தற்போது எரிவாயுவின் விலைகளை குறைப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 
இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் தற்போதைய விலை 3,738 ரூபாவாகும்.
 
அதேபோன்று, 12.5 கிலோகிராம் எடையுடைய லாஃப் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் தற்போதைய விலை 3,990 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.
 
கடந்த ஆண்டு இதே காலப் பகுதியில் எரிபொருள் தட்டுப்பாடு காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருகின்றது.
 
கடந்த ஆண்டு இதே காலப் பகுதியில் ஒக்டேன் 95 ரக ஒரு லிட்டர் பெட்ரோல் 373 ரூபாவிற்கும், ஒக்டேன் 92 ரக ஒரு லிட்டர் பெட்ரோல் 338 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது.
 
எனினும், ஓரிரு மாதங்களில் ஒக்டேன் 95 ரக ஒரு லிட்டர் பெட்ரோல் 550 ரூபாவிற்கும், ஒக்டேன் 92 ரக ஒரு லிட்டர் பெட்ரோல் 470 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது.
 
பெட்ரோலுக்கு காணப்பட்ட தட்டுப்பாடு காரணமாக கருப்பு சந்தையில் சுமார் 3000 ரூபாவிற்கு பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டதை அந்த காலப் பகுதியில் எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
 
ஆனால், தற்போது ஒக்டேன் 95 ரக ஒரு லிட்டர் பெட்ரோல் 375 ரூபாவிற்கும், ஒக்டேன் 92 ரக ஒரு லிட்டர் பெட்ரோல் 340 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 
அதேவேளை, கடந்த ஆண்டு இதே காலப் பகுதியில் ஒரு லிட்டர் ஆட்டோ டீசல் 289 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதுடன், அந்த தொகையானது ஓரிரு மாதங்களில் 460 ரூபா வரை அதிகரிக்கப்பட்டது.
 
மேலும், 2022ம் ஆண்டு இதே காலப் பகுதியில் ஒரு லிட்டர் சூப்பர் டீசல் 329 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதுடன், அந்த தொகையானது ஓரிரு மாதங்களில் 520 ரூபா வரை அதிகரிக்கப்பட்டது.
 
எனினும், டீசலுக்கு அந்த காலப் பகுதியில் முழுமையாக தட்டுப்பாடு நிலவியதன் காரணமாக, பொது போக்குவரத்துக்கள் முழுமையாக பாதிக்கப்பட்டதுடன், பொருட்கள் சேவை விநியோகங்களும் பாதிக்கப்பட்டிருந்தன.
 
எனினும், ஒரு லிட்டர் ஆட்டோ டீசல் 325 ரூபாவிற்கும், ஒரு லிட்டர் சூப்பர் டீசல் 465 ரூபாவிற்கும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
 
2022ம் ஆண்டு இதே காலப் பகுதியில் 87 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் மண்ணெண்ணை, 365 ரூபா வரை அதிகரிக்கப்பட்டு பின்னரான காலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
 
ஆனால், ஒரு லிட்டர் மண்ணெண்ணையின் விலை தற்போது 295 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு இதே காலப் பகுதியில் சுமார் 10 முதல் 12 மணித்தியாலங்களை கடந்த மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது நாட்டில் மின்வெட்டு அமல்படுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது.
 
24 மணித்தியாலங்களும் தடையின்றி மின்சாரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், மின்கட்டணம், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் பல மடங்காக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
 
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
 
எனினும், ஓரிரு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
 
2022ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக் காலப் பகுதியில் பிபிசி தமிழ் சந்தை நிலவரம் தொடர்பில் ஆராய்ந்திருந்தது.
 
அந்த சந்தர்ப்பத்தில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை விபரங்கள் இவ்வாறு காணப்பட்டன.
 
ஆனால், இந்த ஆண்டு இதே காலப் பகுதியில் இலங்கை சந்தையில் காணப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்பிலும் பிபிசி தமிழ் ஆராய்ந்தது.
 
 
பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டாலும், அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதை நாளாந்தம் அவதானிக்க முடிகின்றது.
 
தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அமைப்புக்கள் என பலரும் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்தும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
 
ஒரே தடவையில் பல மடங்காக பொருட்களின் விலைகளை அதிகரித்த அரசாங்கம், விலைகளை குறைக்கும் போது மிகவும் குறைந்த விலை குறைப்புக்களையே மேற்கொண்டு வருவதாக குற்றஞ்சுமத்துகின்றனர்.
 
அத்துடன், அரசாங்கத்தின் வரி வருமானத்தை அதிகரித்து கொள்வதற்காக, அரசாங்கம் தற்போது அமல்படுத்தியுள்ள வரி அறவீட்டு நடைமுறையானது அசாதாரணமானது என தெரிவித்து, அரச மற்றும் தனியார் துறையினர் தொடர்ந்தும் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்;.
 
அதேவேளை, அரச சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாக தெரிவித்தும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
 
மேலும், பயங்கரவாதத்திற்கு எதிராக அரசாங்கம் கொண்டு வர முயற்சிக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அமல்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐப்பசி மாத பௌர்ணமி : சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.. எத்தனை நாட்கள்?

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் வழுக்கி விழுந்து உயிரிழப்பு? - அதிர்ச்சியில் வாசகர்கள்!

டிரம்ப் அமைச்சரவை.. எலான் மஸ்க்கிற்கு பதவி.. இந்திய வம்சாவளி பெண்ணுக்கு பதவி மறுப்பு..!

ஆபாச படங்களை பார்த்து மருமகளிடம் தவறாக நடந்து கொண்ட மாமனார்.. அதிர்ச்சி சம்பவம்..!

கரப்பான்பூச்சி மாதிரி ஊர்ந்து போன உங்க பெயரை வைக்கலாமா? - எடப்பாடியாரை தாக்கிய மு.க.ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments