Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் கடைசி நேரத்தில் வாக்களிக்க அனுமதி மறுக்கப்படுவதை தவிர்ப்பது எப்படி?

Webdunia
வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (17:25 IST)
ஒவ்வொரு தேர்தலுக்கும் வாக்குப்பதிவு நடக்கும்போதும், தங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் வாக்களிக்க அனுமதி மறுக்கப்படுவது தொடர்ந்து நடக்கின்றது. இது தற்போது நடந்துவரும் பொதுத் தேர்தலிலும் நடந்துள்ளது.
இதைத் தவிர்க்க என்ன வழி? வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிந்துகொண்டு, தங்கள் வாக்களிக்கும் உரிமையை வாக்காளர்கள் நிலைநாட்டிக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று விளக்குகிறது இந்தக் கட்டுரை.
 
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான பொதுத்தேர்தலில் ஒரு பகுதியாக இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வேலூர் தொகுதி தவிர, நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்துள்ளது.
 
பெரிய அளவிலான சட்டம் - ஒழுங்கு பிரச்சனையோ, குளறுபடிகளோ எதுவும் அதிகம் இல்லாமல் தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறினார்.
 
வாக்களிக்க அனுமதி மறுப்பு - போராட்டங்கள்
எனினும், சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால், வாக்களிக்க அனுமதிக்கப்படாத வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டைகளைக் கைகளில் ஏந்திக்கொண்டு போரட்டம் நடத்தினர்.
 
சென்னையில் உள்ள வேப்பேரி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட சில இடங்களில் ஒரே பகுதி அல்லது ஒரே வாக்குச்சாவடிகளில் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும்கூட வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இல்லை என்பதால் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
 
சில திரைப்படப் பிரபலங்களும் தங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், பட்டியலில் பெயர் இல்லை என்று கூறி வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரிகள் தங்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்று தெரிவித்தது சமூக ஊடகங்களிலும், மைய ஊடகங்களிலும் செய்தியானது.
 
வாக்குப்பதிவு தொடங்கிய காலை முதலே சில மணிநேரங்களுக்கு ஒரு முறை செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி, பெயர் விடுபட்டது குறித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடந்துவரும் போராட்டங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சத்யபிரத சாகு, வரைவு வாக்காளர் பட்டியல் முன்கூட்டியே வெளியிடப்படுகிறது, தங்கள் பெயர் அதில் உள்ளதா இல்லையா என்பதை முன்கூட்டியே பார்த்திருந்தால் இவை தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.
 
இந்தத் தேர்தலில் அவர்கள் வாக்களிக்க முடியாது; அடுத்த தேர்தலில் விடுபட்ட பெயர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா?
வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை இணையம் மூலமாக சில நிமிடங்களிலேயே உறுதிசெய்து கொள்ளலாம்.
 
தேசிய வாக்காளர் சேவை இனையதளமான https://nvsp.in அல்லது வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களைத் தேடுவதற்கான https://electoralsearch.in ஆகிய இணையதளங்களில் உங்கள் பெயர், வயது, மாநிலம், மாவட்டம், சட்டமன்றத் தொகுதி உள்ளிட்ட தரவுகளைக் கொண்டு தேடி, உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
 
ஒரு வேளை உங்கள் பெயர் இல்லையென்றால் https://nvsp.in இணையதளத்தின் முகப்புப் பக்கத்திலேயே உள்ள படிவம் எண் 6ஐ நிரப்பி உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
 
வேறு தொகுதிக்கு மாறுவது, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்வது, உங்கள் விண்ணப்பித்தின் நிலையை அறிவது என அனைத்தும் மேற்கண்ட இணையதளம் மூலம் சாத்தியம்.
 
இறுதி வாக்காளர் பட்டியலைத் தயார் செய்வதில் உண்டான குளறுபடி அல்லது சில அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுவதுபோல முறைகேடு ஆகிய எந்தக் காரணங்களாலோ உங்கள் மக்களாட்சியின் உரிமையும் கடமையுமாக விளங்கும் தேர்தல் வாக்களிப்பை நிறைவேற்ற இயலவில்லை என்று நீங்கள் வருத்தம் கொள்வதை சில நிமிடங்கள் மட்டுமே அதற்காக ஒதுக்குவதால் தவிர்க்க முடியும்.
 
ஒவ்வொரு தேர்தலும் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையத்தால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
 
அந்தந்த வாக்குச்சாவடிகளில் அவை பொது மக்களின் பார்வைக்காக ஒட்டப்படும். அதில் தங்கள்பெயர் இடம்பெற்றுள்ளதா இல்லையா என்பதை அவற்றில் வாக்காளர்கள் தெரிந்துகொள்ளலாம்.
 
 
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான அடுத்த சில நாட்களிலேயே அனைத்து வாக்குச்சவாடிகளிலும் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் பிழைத் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறும்.
 
அவற்றின்மூலம் விடுபட்ட தங்கள் பெயர்களை வாக்காளர்கள் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது பெயர் ஏற்கனவே பட்டியலில் இருந்தாலும், வேறு எதாவது மாற்றம் செய்துகொள்ள விரும்பினால் அவற்றைச் செய்து கொள்ளலாம்.
 
"வாக்காளர் அதே முகவரியில்தான் வசிக்கிறாரா என்பதை உறுதி செய்துகொள்ள வீடுவீடாக அதிகாரிகள் வந்து சோதனை செய்வார்கள். அப்போது அவர்கள் வீடுகளில் இல்லையென்றால், அக்கம்பக்கத்தில் விசாரித்து உறுதிசெய்துகொள்ள வேண்டும். அவர்கள் இல்லை என்றதகவல் கிடைத்தால், அதை உறுதி செய்துகொண்ட பின்னரே வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க வேண்டும் என்ற விதி உள்ளது," என்றார்.
 
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டபின் அதில் நமது பெயரும் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்று வாக்காளர்களுக்குத் தாமாகவே தோன்ற வேண்டும். இந்தப் பட்டியல் வெளியானபின் பெயர்கள் சேர்க்கவும் மாற்றம் செய்யவும் மூன்று மாதம் அவகாசம் இருக்கும். அதற்குள் வரைவுப் பட்டியலைச் சரிபார்த்துக்கொண்டால் பெயர்கள் விடுபடுவதைத் தவிர்க்கலாம் என்கிறார் கோபால்சாமி.
 
வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்போது ஊடங்கங்களில் செய்தி வெளியிடப்படும். இந்த இரு பட்டியல்களை வெளியாகும் கால இடைவெளியில் வாக்காளர்கள் விண்ணப்பம் மற்றும் மாற்றம் செய்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments