காஷ்மீரின் டுர்டுக் கிராமத்தை அடைவது மிகவும் கடினமானது. இந்தியாவின் வடக்கு பகுதியில் லடாக்கின் நுப்ரா பள்ளத்தாக்கில் தொலைதூரப் பகுதியில் இந்தச் சிறிய கிராமம் உள்ளது.
ஷியோக் நதிக்கும் கரகோரம் மலைத்தொடர் சிகரத்திற்கு இடையில் இந்தக் கிராமம் உள்ளது. பாறைகளால் சூழப்பட்டுள்ள இந்தக் கிராமத்துக்குச் செல்வதற்கு ஒரே ஒரு சாலைதான் உள்ளது; அதுவும் லே பகுதியில் இருந்து மேடுபள்ளங்கள் நிறைந்ததாக உள்ளது.
டுர்ட்டுக்கின் வரலாறு சீரற்றதாக இருந்தாலும், பசுமையான காட்சிகள் அமைதியாக துயில் கொள்வதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. தன்னுடைய நாட்டை இழந்துவிட்ட கிராமமாக இது உள்ளது.
பால்ட்டி மக்கள் வாழும் கிராமம்
லடாக்கின் பிற பகுதிகள் லடாக்கிய திபெத்தியர்கள் வாழும் பௌத்த மதத்தவரின் பகுதியாக உள்ள நிலையில், டுர்டுக் கிராமம் ஒரு பால்ட்டி மக்கள் வாழும் கிராமமாக உள்ளது.
பால்ட்டி என குறிப்பிடப்படுபவர்கள் திபெத்திய பாரம்பரியத்தில் வந்த ஓர் இன மக்கள். பெரும்பாலும் பாகிஸ்தானின் ஸ்கர்டு பகுதியில் வசிப்பவர்கள்.
அந்தக் கிராமத்தில் வாழ்பவர்கள் இஸ்லாமியரில் சூஃபி பிரிவைச் சேர்ந்த நூர்பக்ஷியா இஸ்லாமியர்களாக, பால்ட்டி மொழி (ஒரு திபெத்திய மொழி) பேசுபவர்களாக, சல்வார் கமீஸ் அணிபவர்களாக உள்ளனர்.
அங்கிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் பாகிஸ்தான் எல்லையில் பால்ட்டிஸ்தானில் உள்ள மக்களுடன் அதிக உறவு கொண்டவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.
உண்மையில் 1971ஆம் ஆண்டு வரையில் டுர்டுக் கிராமம் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்தது.
கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே அப்போது நடந்த சண்டையில் இந்தப் பகுதியை இந்திய ராணுவம் கைப்பற்றியது.
மிக உயரமான, அடைவதற்கு கடினமான மலைப் பகுதிகளில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு உருவாக்கப்பட்டுள்ளது.
ஓர் எல்லையால் பிரிக்கப்பட்ட பகுதி
எல்லைப் பாதுகாப்பின் முக்கியத்துவம் கருதி இந்தக் கிராமத்தை இந்தியா திருப்பி ஒப்படைக்கவில்லை.
1971ல் அன்றைய நாளில் நண்பர்களை சந்திக்கவோ அல்லது வேறு வேலையாகவோ வெளியில் சென்ற அந்தப் பகுதி மக்கள் அதன் பிறகு ஆண்டுக்கணக்கில் திரும்பி வர முடியவில்லை.
அந்தப் பகுதிக்கு இந்தியா சீல் வைத்துவிட்டு, தீவிர பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இருந்தபோதிலும், கடந்த பத்தாண்டுகளில் அந்த எல்லைப் பகுதி அமைதியாக இருந்து வருகிறது.
2010ஆம் ஆண்டு டுர்டுக் பகுதி சுற்றுலாவுக்கு திறந்துவிடப்பட்டது. தனித்துவமான அந்தக் கிராமத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவும், அவர்களுடைய வாழ்க்கை முறையைக் காணவும் அனுமதிக்கப்பட்டது.
பால்ட்டி மக்கள் தங்களைச் சுற்றியுள்ள கரகோரம் பாறை பகுதியை பயன்படுத்தி, கல் வீடுகளை கட்டி, பாறைகளால் பாசனக் கால்வாய்களை உருவாக்கி பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.
பொருட்களை சேமிக்க குளிர்ச்சியான இல்லம்
அதிக உயரமான லடாக்கிலுள்ள பிற பகுதிகளைவிட குறைவான உயரத்தில், வெறும் 2,900 மீட்டர் அளவில் டுர்டுக் உள்ளது.
இந்த உயரத்தில் கோடைக்காலங்கள் அதிக வெப்பமானதாக இருக்கும். சுற்றியுள்ள பாறைகளைப் பயன்படுத்தி இயற்கையான கல் குளிர்வித்தல் முறைகளை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
இறைச்சி, வெண்ணெய் மற்றும் வெப்பமான மாதங்களில் கெட்டுப்போய்விடும் பிற பொருட்களை சேமிக்க இயற்கையான கல் குளிர்வித்தலை பயன்படுத்துகின்றனர்.
பால்ட்டி மொழியில் 'நங்ச்சுங்' என்று அதைக் குறிப்பிடுகின்றனர். 'குளிர்ச்சியான இல்லம்' என்பது அதன் பொருள்.
இந்த கல் நிலத்தடி அறைகளுக்கு இடையே இருக்கும் இடைவெளிகளில் குளிர் காற்று செல்வதால், வெளியில் இருப்பதைவிட, உள்ளே இருக்கும் பொருட்கள் வெப்பம் குறைந்ததாக இருக்கின்றன.
பசுமையின் நிழல்கள்
அந்தப் பகுதியில் பார்லிதான் அதிகம் விளைவிக்கப்படும் பயிர் என்றாலும், டுர்டுக்கின் குறைந்த உயரத்திலான அமைவிடம் வெள்ளை கோதுமை பயிரிடவும் உதவியாக உள்ளது.
இந்திய அத்திப்பழங்கள் மற்றும் வால்நட்களையும் அந்த மக்கள் பெருமளவு பயிரிடுகிறார்கள். இந்தக் கிராமம் இதற்காகப் புகழ் பெற்றுள்ளது. தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதியாக உள்ளது.
ஆண்டு முழுக்கவே பயிரிடப்படும் அல்லது சாகுபடி செய்யப்படும் வயல்களாக காட்சியளிக்கும். கர்கோரங்களின் பிரவுன் சுவர்கள், தரிசாகக் கிடக்கும் நிலங்கள் மற்றும் ஆற்றுப் பள்ளத்தாக்கில் இருந்து மாறுபட்டு இது பசுமை வெளியாகக் காட்சியளிக்கிறது.
கலாச்சார ரீதியில் நம்பிக்கை
இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சனையில் மோதல் போக்கை இன்னும் கடைபிடித்து வந்தாலும், டுர்டுக்கில் வாழ்க்கை அமைதியாகப் போய்க் கொண்டிருக்கிறது.
1971ல் கைப்பற்றப்பட்ட பிறகு, கிராம மக்களுக்கு இந்திய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, இந்தியக் குடிமக்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.
நுப்ரா பள்ளத்தாக்கில் நல்ல சாலைகள், சுகாதார சேவைகள், போக்குவரத்து வசதி அளித்து நவீனமாக்கும் முயற்சிகள் காரணமாகவும், சமீப காலமாக சுற்றுலாவாசிகள் வருகை அதிகரிப்பதாலும், டுர்டுக்கிற்கு அதிக வளமையான காலம் வந்திருப்பதாகத் தோன்றுகிறது.
இருந்தபோதிலும் இங்கு இந்தியாவில் இருப்பதைப் போன்ற உணர்வு இல்லை.
அத்திப்பழத் தோட்டங்கள், நூர்பக்ஷியா மசூதிகள், கல் வீடுகள், பாசனக் கால்வாய்கள் மற்றும் மாமிசம் வைத்த அல்லது மஸ்கட்டுடன் வழங்கப்படும் கிசிர் (வெள்ளைக் கோதுமை ரொட்டி), நிறைய வெள்ளை கோதுமை நூடுல்ஸ் சேர்த்த சூப் ஆகியவை அந்த மக்களின் அடிப்படை வேராகக் கருதப்படும் பால்ட்டி மக்களின் கலாசார நம்பிக்கையை சார்ந்தவையாக உள்ளன.
இலையுதிர்கால பல்வண்ணங்கள்
இந்தக் கிராமம் இலையுதிர்காலத்தில் மிக அருமையாக இருக்கும். வரிசையாக உள்ள மரங்களின் நிறம் மாறும். கற்கலாக தோன்றும் அந்தப் பகுதியின் காட்சி அமைப்பை பிரகாசமாக ஆக்கிவிடும்.
நுப்ரா பள்ளத்தாக்கின் மற்ற பகுதிகளில் வாழும் லடாக்கி கிராமத்தவர்கள் பாறைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையில், அவர்களுடைய படைப்புகள் டுர்டுக் மக்களின் உழைப்பில் உருவாக்கப்பட்ட கல் கட்டடங்களுடன் போட்டி போட முடியாது.
நில அதிர்வுகள் மற்றும் நிலச் சரிவுகள் நிகழும் அந்தப் பகுதியில், பால்ட்டி கற்சுவர்கள் பெருமையுடன் நிமிர்ந்து நிற்கின்றன.
செழிப்பான உலகம்
கடுமையான சூழ்நிலையிலும் அமைதியுடன் வாழ்வதற்கு இந்தப் பகுதி மக்கள் கற்றுக் கொண்டுள்ளனர். இது மட்டுமின்றி, செழிப்பாகவும் வாழ்கின்றனர்.
தங்களின் முந்தைய தாயகத்தை 'இழந்துவிட்ட போதிலும்,' தங்களுடைய கலாசார வேர்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவே அவர்கள் இன்னும் இருக்கிறார்கள். இப்போது உலகெங்கும் இருந்து விருந்தினர்களை வரவேற்பதில் நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளனர்.