சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் 1.18 பில்லியன் தொலைபேசி சந்தாதாரர்கள் உள்ளனர். 765 மில்லியன் இணையசேவை சந்தாதாரர்களோடு, உலகின் மிகப்பெரிய இணைய பயனர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. மலிவு விலை மற்றும் பரவலாகக் கிடைக்கும் தன்மை ஆகியவற்றால் தூண்டப்பட்டு, வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது.
இருப்பினும், இந்த எண்கள் அவற்றுக்குள் இருக்கும் இடர்பாட்டைப் பற்றிச் சொல்வதில்லை. இந்த வாரம், சந்தையிலுள்ள பழைமையான மற்றும் மூன்றாவது பெரிய நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியா, அதன் உடனடி சரிவைத் தவிர்ப்பதற்காகப் பின் வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அரசு தற்போது அதன் மூன்றில் ஒரு பங்கினை எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. சுமார் 36% நலிவடைந்த ஆப்பரேட்டரின் பங்குகள், மீதமுள்ளவை அதன் கூட்டு நிறுவன பங்காளர்களான பிரிட்டனுக்குச் சொந்தமான வோடஃபோன் குழுமம் (28.5%) மற்றும் இந்தியாவின் ஆதித்யா பிர்லா குழுமத்திற்கு (17.8%) விட்டுச் செல்கிறது.
வோடஃபோன் ஐடியா பல ஆண்டுகளாகவே பணம் மற்றும் வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. கடந்த ஐந்து வருடங்களில் அந்நிறுவனம் லாபம் ஈட்டவில்லை. கடந்த ஆண்டு அதன் 10% வாடிக்கையாளர்களை இழந்தபிறகு 253 மில்லியன் பேர் உள்ளார்கள். கடந்த ஆண்டு, நிறுவனத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, நீதிமன்றங்களில் இருந்து நிவாரணம் வழங்கப்படாவிட்டால், ஆபரேட்டர் கடையை மூடிவிடுவார் என்று கூறியிருந்தார்.
"பெரும்பான்மை பங்குகளை விட்டுக்கொடுப்பது என்பது கடைசி முயற்சியாகும். இது இந்திய சந்தையில் விட்டுக்கொடுப்பதைப் பற்றியதும் தான்," என்று கன்வர்ஜென்ஸ் கேடலிஸ்ட் என்ற ஆலோசனை நிறுவனத்தின் பங்குதாரரான ஜெயந்த் கொல்லா கூறினார்.
வோடஃபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய மூன்று தனியார் ஆபரேட்டர்கள், இந்தியாவின் அலைபேசி சந்தையில் சுமார் 90% பன்கு வகிக்கின்றனர். மீதமுள்ளவை பெரும்பாலும் சில்லறை அலைபேசி சந்தையில் சிறிய நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.
"வோடஃபோன் ஐடியா ஒரு வங்கியாகவோ அல்லது நிதி நிறுவனமாகவோ இருந்திருந்தால், அது இப்போது தோல்வியடைய முடியாத அளவுக்குப் பெரிய முத்திரை கிடைத்திருக்கும். ஆனால், விஷயம் என்னவெனில், நிறுவனம் தோல்வியடைய முடியாத அளவுக்குப் பெரியது," என்று பொருளாதார வல்லுநர் விவேக் கவுல் கூறுகிறார்.
வோடஃபோன் ஐடியாவின் சரிவு, நிலைமையை மிகவும் மோசமாக்கியிருக்கலாம். இந்தியாவில் சிரமத்தில் உள்ள வங்கிகள், மோசமான கடன்களின் புதிய புயலுக்குள்ளே புதைந்திருக்கும். மிக முக்கியமாக, இந்தியாவில் தொலைத்தொடர்புகள் ஏகபோகமாகவோ அல்லது இரண்டே சப்ளையர்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாகவோ மாறிவிடும்.
"ஒரு பில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட நாட்டில், நான்கு ஆபரேட்டர்கள் இருப்பது ஏற்றது. பங்குகளை எடுப்பதன் மூலம், தொழில்துறை கட்டமைப்பைப் பராமரிக்க அரசாங்கம் ஒரு நிவாரணத் தொகுப்பை வழங்கியுள்ளது. மேலும், இது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு நேர்மறையான சமிக்ஞையை அனுப்புகிறது," என்கிறார் ஐ.சி.ஆர்.ஏ என்ற முதலீடு மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனத்தின் உதவித் தலைவர், அங்கித் ஜெயின்.
இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையானது, 2017-ஆம் ஆண்டு முதல், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ சந்தையில் நுழைந்து, கட்டணங்களைக் குறைத்து, அழைப்புகளுக்கான சந்தையை டேட்டாவுக்கான சந்தையாக மாற்றியதன் மூலம் கடுமையான விலைப் போரைத் தொடங்கியது.
முடிவில்லாத விலைப் போர் மற்றும் ஆபரேட்டர்கள் அரசுக்குச் செலுத்தவேண்டிய நிலுவைத் தொகைகள், நிலுவையிலுள்ள ஸ்பெக்ட்ரம் தொகைகள் மற்றும் அரசுடன் பகிர்ந்து கொள்ளப்படும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஈட்டிய வருவாயில் ஒரு குறிப்பிட்ட விகிதத்திற்கு லாபம் சுருங்கியது. "குறைந்த விலைகள் மற்றும் அதிக கடன் காரணமாக லாபம் குறைந்து, அனைத்தும் கீழ்நோக்கிச் சென்றன," என்கிறார் ஜெயின்.
கடந்த செப்டம்பரில், பணம் இல்லாத ஆபரேட்டர்களுக்கு நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கும் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதற்கும் ஸ்பெக்ட்ரம் வாங்குவதற்கும் போதுமான பணத்தைச் சேமிக்க உதவுவதற்காக, நான்கு வருட கால அவகாசத்தை அரசு வழங்கியது. நவம்பர் மாதத்தில், ஆபரேட்டர்கள் தாங்கள் வழங்கும் 10 இலக்க மொபைல் திட்டங்களில் கட்டணங்களை 20% உயர்த்தியுள்ளனர். இது விலைப் போரை ஓரளவுக்குத் தளர்த்தியது. இப்போது ஆபரேட்டர்கள் பலன்களைக் காட்டவேண்டும்.
அரசின் நடவடிக்கை குறித்து முதலீட்டாளர்கள் ஆர்வமாக இருப்பதாகத் தெரியவில்லை என்ற அறிவிப்பிற்குப் பிறகு வோடஃபோன் ஐடியா பங்குகள் கிட்டத்தட்ட 21% சரிந்தன. அந்தச் சரிவு ஓராண்டில் மிக அதிகமாக இருந்தது. அக்டோபர் மாதத்தில், நஷ்டத்தில் இயங்கும் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியாவை, நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான டாடா குழுமத்திற்கு அரசு விற்றது. ஆகவே, நஷ்டமடையும் தொழில்களில் முதலீடுகளை மறுப்பது என்ற அரசின் கொள்கையால் இது நடப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.
அரசு ஏற்கெனவே நஷ்டத்தை ஏற்படுத்தும் தொலைத்தொடர்பு நிறுவனத்தை நடத்தும்போது, இன்னொரு நிறுவனத்தையும் எடுத்துக்கொண்டு என்ன செய்யும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். மற்றவர்கள், வோடஃபோன் பின்வாங்குவது அரசுக்கு அதன் தொலைத்தொடர்பு தகுதிச் சான்று மற்றும் சொத்துகளை மேம்படுத்த உதவும் என்று நம்புகிறார்கள். பின்னர் அதை வைத்து முதலீட்டாளருக்கு விற்கவும் முடியும்.
பல வழிகளில், வோடஃபோன் கதை இந்திய சந்தையைப் பற்றிய சில விஷயங்களைக் கூறுகிறது. கட்டணங்கள் உயரும்போது, மலிவான டேட்டாவின் நாட்கள் முடிந்துவிடலாம். ஆனால், நாடு விலை உணர்திறன் சந்தையாகவே இருக்கும். ஒரு புதிய நிறுவனத்திற்கு, இந்தியா முழுவதும் இருப்பதற்கான லட்சியம், ஏற்கெனவே இருக்கும் விலைகளைக் குறைக்க அதிகப் பணம் மற்றும் போதுமான பங்குதாரர்களின் ஆதரவு தேவைப்படும்.
நினைவுகூர்ந்து பார்த்தால், பத்து ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவில் 15 ஆபரேட்டர்கள் இருந்தனர். இன்று முதன்மையான நான்கு ஆபரேட்டர்கள் மட்டுமே உள்ளனர்.