ஜெர்மனியில் இறுதிச்சடங்கிற்கு வந்திருந்தவர்களுக்கு தவறுதலாக "ஹாஷ் கேக்" அதாவது போதையூட்டும் கேக் பரிமாறப்பட்டுள்ளது என்று உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனியில் விதாகென் என்ற இடத்திலுள்ள உணவகம் ஒன்றில் இந்தப் போதையூட்டும் கேக்கை சாப்பிட்ட 13 பேருக்கு குமட்டல் மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டது.
இந்த உணவகத்தில் வேலைசெய்யும் பெண் தொழிலாளி ஒருவரின் மகளிடம் கேக் செய்யும் பணி ஒப்படைக்கப்பட்டதாகவும், 18 வயதான இந்த இளம் பெண் வேறொரு நிகழ்வுக்காக செய்து வைத்திருந்த ஒரு "ஹாஷ் கேக்கை", அவரது தாயார் தவறுதலாக பரிமாறி விட்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இறுதிச்சடங்கின்போது காபியோடு, கேக் பரிமாறுவது ஜெர்மனியில் ஒரு பாரம்பரிய வழக்கமாகும்.
இந்த தொழிலாளியின் மகள் விசாரிக்கப்பட்டு வருவதாக அருகிலுள்ள ரோஸ்டாக் நகர போலீஸார் தெரிவிக்கின்றனர்.