திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நகைக்கடை ஒன்றில் நடந்த கொள்ளை தமிழகத்தில் பெரும்பாலானவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் திருச்சி மாவட்டத்தின் புறநகர் பகுதியில் ஒரு வங்கியின் லாக்கரை உடைத்து 470 சவரன் தங்கம் மற்றும் 19 லட்ச ருபாய் பணத்தை கொள்ளையர்கள் திருடியிருக்கிறார்கள்.
இந்நிலையில் திருச்சியின் மையப்பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்துநிலையம் அருகே அமைந்துள்ள பிரபல நகைக்கடையில் ஓட்டை போட்டு திருடர்கள் உள்ளே சென்று திருடியுள்ளனர்.
லலிதா ஜுவெல்லரியில் மூன்று தளங்கள் உள்ளன. தரைத்தளத்தில் விலையுயர்ந்த தங்கம், வைரம் மற்றும் பிளாட்டின ஆபரணங்கள் உள்ளன. கடையில் வலதுபுறம் காலி மனையும் பின்பகுதியில் புனித வளனார் கல்லூரி மேல் நிலைப்பள்ளியும் இருக்கிறது.
அக்டோபர் 1 - இரவு இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இரவு சுமார் 2 மணியில் இருந்து 4.40 மணி வரை கொள்ளையர்கள் நகைக் கடைக்குள் இருந்தது சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரியவந்திருக்கிறது.
சுமார் 13 கோடியே 9 லட்சம் ருபாய் மதிப்புள்ள 28 கிலோ தங்கம் மற்றும் 180 கேரட் வைர நகைககள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. 7 தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள தங்கும் விடுதிகளில் யார் யார் குறிப்பிட்ட தேதிகளில் தங்கியிருந்திருக்கிறார்கள், காலி செய்திருக்கிறார்கள் என்பது உள்ளிட்ட விவரங்களை சேகரித்து தேடி வருவதாக திருச்சி காவல்துறை மாநகர ஆணையர் அமல்ராஜ் தெரிவித்திருக்கிறார்.