Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கமல்ஹாசன்: நடிகர் முதல் அரசியல்வாதி வரை ஒரு "தசாவதாரம்"

கமல்ஹாசன்: நடிகர் முதல் அரசியல்வாதி வரை ஒரு
, வெள்ளி, 19 மார்ச் 2021 (08:06 IST)
ஆறு வயதில் துவங்கி தற்போதுவரை 220க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் கமல்ஹாசன், நடிகர் என்ற வகையில் நான்கு தேசிய விருதுகள், தயாரிப்பாளராக ஒரு தேசிய விருது, பத்துக்கும் மேற்பட்ட தமிழக அரசின் விருதுகள் ஆகியவற்றைப் பெற்றவர். இந்திய அரசு வழங்கும் உயரிய சிவிலியன் விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்மபூஷண் பட்டங்களையும் பெற்றவர். தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் தவிர, இந்தி, வங்க மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார் கமல்ஹாசன்.
 
ஆனால், 2018ல் அவர் புதிதாக அரசியல் கட்சி ஒன்றைத் துவங்கி தேர்தலைச் சந்தித்து கணிசமான வாக்குகளைப் பெற்றாலும் குறிப்பிடத்தக்க வெற்றி எதையும் பெறவில்லை. இருந்தபோதும் தற்போது அடுத்த தேர்தலுக்குத் தயாராகியிருக்கிறார் கமல்ஹாசன்.
 
பரமக்குடியில் பிறந்து சென்னையில் வளர்ந்து, திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய கமல் தற்போது கோவை தெற்குத் தொகுதியில் வாக்குகளைக் கோரி வருகிறார். அவருடைய அரசியல் பயணம் மிகக் குறுகியது என்றாலும், திரையுலகப் பயணம் அசாத்தியமானது.
 
பரமக்குடி முதல் பார்த்தால் பசி தீரும் வரை
 
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியின் பிரபல வழக்கறிஞர் சீனிவாசன். இவரது மனைவி ராஜலட்சுமி. இந்தத் தம்பதிக்கு ஏற்கனவே சாருஹாசன், சந்திரஹாசன், நளினி என மூன்று குழந்தைகள் இருக்க, நான்காவது மகனாக 1954ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி பிறந்தார் கமல்ஹாசன்.
 
பள்ளிப்படிப்பு பரமக்குடியில் துவங்கியது. பிறகு தன் அண்ணன் சாருஹாசனுடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார் கமல். இந்தத் தருணத்தில்தான் ஏ.வி.எம். ஸ்டுடியோ அதிபர் ஏ.வி. மெய்யப்பச்செட்டியாரின் கண்ணில்படவே, களத்தூர் கண்ணம்மா படத்தில் ஒப்பந்தமானார் கமல்.
 
1960ல் ஜெமினி கணேசன் - சாவித்ரி நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. இந்தப் படத்தில் நடித்ததற்காக அந்த ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கமலுக்கு வழங்கப்பட்டது.
 
அடுத்தடுத்து படங்களிலும் நடிக்க ஒப்பந்தமானார் கமல். களத்தூர் கண்ணம்மாவிற்குப் பிறகு, பார்த்தால் பசி தீரும், பாத காணிக்கை, கண்ணும் காலும் (மலையாளம்), ஆனந்த ஜோதி, வானம்பாடி ஆகிய படங்களில் நடித்தார். 1960ல் குழந்தை நட்சத்திரமாகத் துவங்கிய அவரது சினிமா பயணம், 63ல் முடிவுக்கு வந்தது.
 
திரையுலகில் கிடைத்த 'பிரேக்'
பிறகு, திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் தன் படிப்பைத் தொடர்ந்தார் கமல். அங்கு எட்டாம் வகுப்புவரை முடித்த பிறகு, புரசைவாக்கம் எம்.சி.டி. முத்தையா செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தார்.
 
பதின்ம வயதை எட்டியிருந்த கமலின் ஆர்வம் முழுக்க நடிப்பின் மீதே இருக்க டி.கே.எஸ். நாடகக் குழுவில் சேர்ந்தார் அவர். அதே நேரத்தில் நடன வகுப்பிலும் சேர்ந்தார். படிப்பு பத்தாம் வகுப்போடு நின்று போனது.
 
இதற்குப் பிறகு தன் நண்பர்களுடன் சேர்ந்து சிவாலயா என்ற நடனக் குழுவைத் துவங்கினார் கமல். ஆனால், சில மாதங்களிலேயே நடனக்குழு கலைந்துவிட்டது. அந்தத் தருணத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடன வடிவமைப்பாளராக இருந்த தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராகச் சேர்ந்தார் கமல்.
 
இதற்குப் பிறகு 1970ல் தேவர் பிலிம்ஸ் தயாரித்த மாணவன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் மீண்டும் திரையில் தோன்றினார் கமல். அதற்குப் பிறகு, அன்னை வேளாங்கண்ணி, குறத்தி மகன் படங்களில் சிறிய வேடங்களில் நடித்த கமலுக்கு, அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன் படங்களின் மூலம் 'பிரேக்' கொடுத்தார் இயக்குனர் பாலச்சந்தர்.
 
இதற்குப் பிறகு மளமளவென பட வாய்ப்புகள் கமலுக்கு வந்து குவிந்தன. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய படங்களிலும் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார் அவர். 74ல் வெளிவந்த அவள் ஒரு தொடர்கதை, 75ல் வெளிவந்த அபூர்வ ராகங்கள் ஆகியவை கமல்ஹாசனுக்கு தனித்த அடையாளத்தை அளித்தன.
 
இதற்குப் பிறகு திரும்பிப் பார்க்கவே நேரமில்லாத அளவுக்கு படங்களை நடித்துக் குவித்தார் கமல்.
 
மலையாளத்தில் மட்டும் 35க்கும் மேற்பட்ட படங்களிலும் 15க்கும் மேற்பட்ட இந்திப் படங்களிலும் நடித்திருக்கிறார் கமல். ஏழுக்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை, மூன்று படங்களுக்கு கதை - திரைக்கதை, இரண்டு படங்களுக்கு திரைக்கதை - வசனம், சுமார் பத்து படங்களுக்கு திரைக்கதை, எட்டுக்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன ஆசிரியர், நான்கு படங்களுக்கு இயக்குனர், 70க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர், திரைப்பட பாடலாசிரியர் என திரையுலகின் பல துறைகளிலும் கால் பதித்து சாதனை படைத்தவர் கமல்.
 
அரசியலை நோக்கிய மன மாற்றம்
 
ரஜினியும் கமல்ஹாசனும் வெற்றிகரமாக நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் நடிகராக இருந்து அரசியலில் இறங்கி எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார். ஆகவே, வெற்றிகரமான அடுத்த தலைமுறை நடிகர்களான கமலும் ரஜினியும் எம்.ஜி.ஆரைப் போல அரசியலில் ஈடுபடுவார்களா என்பது தவிர்க்க முடியாத கேள்வியாக இருந்துவந்தது.
 
தொன்னூறுகளின் மத்தியப் பகுதியிலிருந்து இந்தக் கேள்விகளுக்கு மறைமுகமாக ரஜினிகாந்த் தீனிபோட்டுவந்தாலும், கமல் அதிலிருந்து விலகியே இருந்தார். ஆனால், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இறந்து, எதிர்க்கட்சி தலைவரும் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியுமான மு. கருணாநிதியும் செயலிழந்த நிலையில் இருந்தபோது, கமல்ஹாசனிடம் மனமாற்றம் ஏற்பட்டிருக்கக்கூடும்.
 
ரஜினிகாந்த்தைப் பொறுத்தவரை சமீபகாலத்தில்தான் அரசியலைப் பற்றி நேரடியாகப் பேசினார் என்றாலும் அவர் தன் திரைப்படங்களின் மூலம் தன் அரசியல் பிரவேசம் குறித்த கருத்துகளை நீண்ட காலமாகவே தெரிவித்துவந்ததாக அவரது ரசிகர்கள் கருதினார்கள். அவரும் அதற்கேற்றபடி பூடகமான அரசியல் கருத்துகளைத் தெரிவித்துவந்தார். ஆனால், கமல்ஹாசன் சமீப சில ஆண்டுகளுக்கு முன்புவரை அரசியல் தொடர்பாக எதையும் பேசியவரில்லை.
 
சில பத்தாண்டுகளுக்கு முன்பாக ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில், நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா எனக் கேள்வியெழுப்பப்பட்டபோது, "தான் அரசியலுக்குப் பொருத்தமானவரில்லை" என்று பதிலளித்திருந்தார். தினத்தந்தி நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து, எனக்கு தோள் கொடுங்கள் என்று அழைத்தால் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டபோது, "அரசியலுக்கு வர மாட்டேன் என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டேன்" என்று பதிலளித்தார் கமல். ஆனால், காலம் வேறு கணக்குகளை வைத்திருந்தது.
 
விஸ்ரூபத்தில் வந்த பிரச்சனைகளும் கமல் எடுத்த அவதாரமும்
 
2013ஆம் கமல் நடித்து வெளிவந்த விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதில் பிரச்சனை ஏற்பட்டபோது, அவர் வெளிப்படையாக பேச ஆரம்பித்தார். 2013ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்ட நிலையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான அவதூறான காட்சிகள் இருப்பதால் படத்தை வெளியிடக்கூடாது என இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. அந்தப் படத்துக்கு தமிழ்நாடு அரசு 15 நாட்கள் தடை விதித்தது.
 
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், "தமிழ்நாடு அரசு விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்து இருப்பது என்னை மட்டுமல்ல. நாட்டையே அவமதிக்கும் செயல். மிரட்டல் தொடர்ந்தால் நாட்டைவிட்டு வெளியேறுவது பற்றி பரிசீலிப்பேன்" என்று குறிப்பிட்டார். இதற்குப் பிறகு, கமல்ஹாசனும் இஸ்லாமிய அமைப்புகளும் சந்தித்துப்பேசிய பிறகு, பிரச்சனை ஒருவாறு முடிவுக்கு வந்தது. சில காட்சிகள் நீக்கப்பட்டு, அதே ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி படம் வெளியானது.
 
இதற்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த கமல்ஹாசன், 2017ஆம் ஆண்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஆரம்பித்தார். அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்போது, நடப்பு அரசியலைக் குறித்தும் சிலவற்றைப் பேசினார். இது கொஞ்சம் கொஞ்சமாக பரபரப்பை ஏற்படுத்த ஆரம்பித்தது. ஊழல் புகார்களைச் சுமத்தினார்.
 
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அமைச்சர்கள், "ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களைத் தெரிவிக்க வேண்டும். அரசைப் பற்றி அவதூறாகப் பேசினால் வழக்குப் பதிவுசெய்யப்படும்" என்று தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்த கமல்ஹாசன், "அரசு நிர்வாகத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அந்தந்த துறை அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரியில் பதிவுசெய்யுங்கள்" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதையடுத்து, தமிழக அரசின் இணையத்தளத்தில் இருந்த அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரிகள் அகற்றப்பட்டன.
 
இருந்தபோதும் கமல் அரசியல் குறித்துப் பேசுவதும் அதற்கு அமைச்சர்கள் குறிப்பாக டி. ஜெயக்குமார் பதிலளிப்பதும் வாடிக்கையாகிப்போனது. இந்த நிலையில், விரைவிலேயே அரசியல் கட்சி ஒன்றைத் துவங்கப்போவதாக அறிவித்தார் கமல்ஹாசன்.
 
கட்சி தொடங்கிய கமல்ஹாசன்
 
அதன்படி, 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி மதுரையில் ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தை நடத்திய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றைத் துவங்கினார். இந்தக் கட்சியின் துவக்க விழாவில் தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
 
திரையுலகில் கமல்ஹாசனின் சக நடிகர்களாக இருந்த ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் அரசியலுக்கு வருவதாக அறிவித்தனர். 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். ஆனால், அந்த திசையில் அவர் தொடர்ந்து பயணிக்கவில்லை. ஆனால், 2017ஆம் ஆண்டின் மத்தியில் தனது அரசியல் பயணம் குறித்து பூடகமாகப் பேச ஆரம்பித்த கமல், கட்சி தொடங்கி, அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார்.
 
2019ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தையும் வெல்லவில்லை என்றாலும் சுமார் 15 லட்சத்து 75 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. சில தொகுதிகளில் மூன்றாவது இடத்தையும் வட சென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை ஆகிய மூன்று தொகுதிகளிலும் 10 சதவீதத்துக்கு மேலான வாக்குகளையும் பெற்றது அந்தக் கட்சி.
 
ஆனால், கமல் கட்சி துவங்கியதிலிருந்து அவரது கொள்கை எதனை அடிப்படையாக வைத்தது என்ற குழப்பம் நீடித்துக்கொண்டே இருக்கிறது. கட்சி துவங்கிய தருணத்தில் கட்சியின் கொள்கை குறித்துப் பேசியபோது "என்னுடைய கொள்கை இடதுமல்ல, வலதுமல்ல, மையத்தில் இருப்போம்" என்றார். அதன் பொருள் பலருக்கும் விளங்கவில்லை.
 
"பிக் பாஸ்" நிகழ்ச்சியில் பேசும்போது "விந்திய மலைக்கு இந்தப் பக்கம் இருக்கும் தென்னிந்தியா சுயமரியாதை இந்தியா" என்று பேசி திராவிடக் கட்சியினரை உற்சாகப்படுத்தினார். திடீரென 'கருப்புக்குள் காவியும் அடக்கம்' என்று சொல்லி அதிரவும் வைத்தார்.
 
மதுரையில் கட்சி துவங்கிய தினத்தில் "ஊழல்தான் எல்லா தீமைகளுக்கும் காரணம் என்பதால் அதை ஒழிப்பதற்கே முன்னுரிமை" என்றும் "நல்ல தரமான கல்வி எல்லோருக்கும் கிடைக்கப் பாடுபடுவேன்" என்றும் "சாதிமதம் அறவே நீக்கப்படும்" என்றும் பேசினார் கமல். இலவசம் கிடையாது என்றார்.
 
இதற்குப் பிறகு, கமல்ஹாசனின் பேச்சுகளில் ஊழல் ஒழிப்பு என்ற அம்சமே பிரதானமான விஷயமாக இடம்பெற்றுவருகிறது. செய்தியாளர் சந்திப்புகள், அவரது ட்விட்டர் பக்கம் ஆகியவற்றில் பூடகமான முறையில் கமல் தெரிவிக்கும் கருத்துகள் அவரை முழுமையாக கணிக்க முடியாமல் வைத்திருக்கின்றன.
 
ஆனால், தேர்தல் பிரச்சாரத்தில் இதே போன்ற பூடமான முறையில் பேசுவது வாக்காளர்களிடம் எடுபடுமா என்பதை வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் எதிரொலிக்கும்.
 
சொந்த வாழ்க்கை
 
கமல்ஹாசன் இரு முறை திருமணம் செய்திருக்கிறார். மேல் நாட்டு மருமகள் படத்தில் நடித்தபோது சந்தித்த வாணி கணபதியை 1978ல் திருமணம் செய்தார். இதற்கு சில ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து செய்தனர். இதற்குப் பிறகு பாலிவுட் திரைக்கலைஞரான சரிகாவை திருமணம் செய்தார் கமல். இந்தத் தம்பதிக்கு ஸ்ருதி, அக்ஷரா என இரு மகள்கள் உண்டு. சில ஆண்டுகளில் இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், திரைக்கலைஞர் கௌதமியுடன் இணைந்து வாழ்ந்தார் கமல். தற்போது இருவரும் பிரிந்துவிட்டனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை: கோவையில் இன்று கமல்ஹாசன் வெளியீடு!