Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 21 May 2025
webdunia

'கொம்பு வெச்ச சிங்கம்' - வெள்ளையன் காளையின் வீறுநடை அவனியாபுரத்தில் தொடர்கிறது!

Advertiesment
Avaniyapuram
, ஞாயிறு, 15 ஜனவரி 2023 (11:41 IST)
ஜல்லிக்கட்டு என்றதுமே நம் நினைவுக்கு வருவது மதுரை மாவட்டம்தான். அந்த மதுரை சுற்றுவட்டார மக்களுக்கு ஜல்லிக்கட்டு என்றதும் சட்டென்று மனக்கண் முன் வரும் வெள்ளையன் காளையின் வெற்றிப்பயணம் மூன்றாவது ஆண்டாகத் தொடர்கிறது. 
 
உலகப் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டுகளில் முதலாவதாக நடக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கி ஆரவாரமாக நடைபெறுகிறது. அதில், மூன்றாவது சுற்றில் 212-வது டோக்கன் எண்ணில் களம் கண்ட வெள்ளையன், வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வெளியே வந்த விதமே, அங்கே குழுமியிருந்த வீரர்களை கிலி கொள்ளச் செய்தது.
 
கண்களில் கோபம் கொப்பளிக்க நின்ற வெள்ளையன், தன்னை நெருங்கிய வீரர்களை விரட்டி விட்டு, யாருக்கும் அடங்காத கதாநாயகனாக கம்பீரமாக களத்தை விட்டு வெளியேறியது.
 
இந்த வெள்ளையன் காளையை மதுரை மாவட்டம் அவனியாபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான வித்யா பாஸ்கரன் என்பவர் வளர்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளில் மதுரை சுற்று வட்டாரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுகளில் இந்த வெள்ளையன்தான் கதாநாயகன். 
 
வாடிவாசலில் இருந்து இந்த வெள்ளையன் வெளியே வந்தால் அந்த மைதானமே அதிரும். களத்தில் நின்று விளையாடக் கூடியது. சுற்றி நிற்கும் வீரர்களை நெருங்கவே விடாது. மீறி யாரேனும் மேலே பாய்ந்து திமிலைப் பற்ற எத்தனித்தால், சற்றும் தாமதிக்காது உடலை சிலிர்த்து நொடிப் பொழுதில் அவரை கீழே தரையில் வீழ்த்திவிடக் கூடியது. எத்தனை வீரர்கள் சூழ்ந்து நின்றாலும் சற்றும் கலங்காது, துணிச்சலாக அவர்களுக்கு நடுவே புகுந்து விளையாடும் இந்த வெள்ளையனுக்கென்றே தனி ரசிக்ர் பட்டாளமே இருக்கிறது. வாடிவாசலில் இருந்து வெள்ளையன் சீறிப் பாய்வதைப் பார்க்கவே கண்கோடி வேண்டும் என்று அவர்கள் புகழாரம் சூட்டுகிறார்கள். 
 
இந்த ஆண்டிலும் ஜல்லிக்கட்டில் வீரர்களை பந்தாட வெள்ளையன் தயாராகி வருகிறது. "வெள்ளையன் கடந்த 2 ஆண்டுகளாக 50, 60 ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்று அத்தனையிலும் வாகை சூடி வந்திருக்கிறது. வெள்ளையன் களம் கண்டால் அங்கே  தோல்வி என்பதே இல்லை. 
Avaniyapuram
வெள்ளையன் களத்தில் இருந்து வேகமாக வெளியேறும் ரகம் அல்ல. அங்கேயே நின்று விளையாடக் கூடிய பெரிய ஆட்டக்காரன். ஆகவே, வெள்ளையனை ரசிக்கவே பெரும் ரசிகர் பட்டாளம் காத்துக் கொண்டிருக்கும்" என்கிறார் காளையின் உரிமையாளர் வித்யா பாஸ்கரனின் மகன் சங்குல் காந்தி.
 
"ஜல்லிக்கட்டு என்றாலே அங்கே வெள்ளையன்தான் ஸ்டார். வெள்ளையன் வருவது தெரிந்தாலே அங்கே கூட்டம் கூடிவிடும். இளைஞர்கள் பலரும் வெள்ளையனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள், வீடியோ பதிவு செய்வார்கள். பொங்கல் வந்துவிட்டாலே எங்களுக்கு திருவிழாக் காலம்தான்," என்று சங்குல் காந்தி பெருமிதத்துடன் கூறுகிறார். 
 
ஜல்லிக்கட்டில் கதாநாயகனாக திகழும் வெள்ளையனை வித்யா பாஸ்கரன் குடும்பத்தினர், வீட்டில் ஒருவராகவே கருதி வளர்க்கின்றனர். இந்த ஜல்லிக்கட்டிலும் வாகை சூட ஏதுவாக சிறப்பான பயிற்சியுடன் வெள்ளையன் தயாராகி இருக்கிறது. சிறப்பான, சத்தான உணவுடன் கூடிய கவனிப்பு மட்டுமின்றி, மணல் மேட்டில் கொம்பால் குத்தி பயிற்சி, நடை பயிற்சி, நீச்சல் பயிற்சி என்று உடலுக்கு மேலும் வலுவேற்றி ஜல்லிக்கட்டிற்காக சிலிர்த்து நிற்கிறது இந்த வெள்ளையன். 
 
சிவங்கை மாவட்டம்  கொம்புக்காரனேந்தலை பூர்வீகமாகக் கொண்ட வித்யா பாஸ்கரன், ராணுவத்தில் 20 ஆண்டுகள் பணியாற்றியவர். பின்னர், மதுரை அவனியாபுரத்தில் குடியேறிய அவர், அங்கே வீட்டிற்கு ஒரு ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பதைக் கண்டு தானும் ஜல்லிக்கட்டு காளை வளர்க்க தீர்மானித்துள்ளார். 
 
"எங்கள் தந்தையும் ஜல்லிக்கட்டு காளை வளர்த்துள்ளார். சிறுவயதில் நான் வசித்த சிவகங்கை சுற்றுவட்டாரத்தில் ஆடி மாதத்தில் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போன்றவை நடைபெறும். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு அவனியாபுரத்தில் குடியேறிய எனக்கு அங்கே வீட்டிற்கு ஒரு ஜல்லிக்கட்டு காளை வளர்க்கப்படுவதை பார்த்ததும் நாமும் அதுபோல் வளர்க்க வேண்டும் என்று தோன்றியது," என்கிறார் அவர். 
 
"2 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையனை வாங்கினோம். போதிய பயிற்சியுடன் அதனை தயார் செய்து ஜல்லிக்கட்டில் களமிறக்கிய போது அத்தனையிலும் வெற்றி கிடைத்தது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று அடக்க வந்த வீரர்களை பந்தாடி அடங்காத காளையாக வலம் வருகிறது.
 
தங்க நாணயம், பீரோ என ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் வழங்கப்படும் பரிசுகளை வெள்ளையன் வென்று வந்துள்ளது. இந்த ஆண்டும் கடந்த ஒரு மாதமாக ஜல்லிக்கட்டிற்கென சிறப்புப் பயிற்சிகளைப் பெற்று களத்தில் விளையாட வெள்ளையன் தயாராக இருக்கிறது," என்று வித்யா பாஸ்கரன் தெரிவித்தார். 
Avaniyapuram
ஜல்லிக்கட்டில் வீரர்களை தெறிக்க விடும் வெள்ளையன், இந்த ஆண்டும் அதனைத் தொடரும் துடிப்புடன் சிலிர்த்து நிற்கிறது. 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

#தமிழ்நாடு_வாழ்க தமிழர் தரணியாள!’’ பொங்கல் வாழ்த்து கூறிய முதல்வர் முக. ஸ்டாலின்