கிரிஷ் கர்னாட்: ஓய்ந்தது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், மொழி உரிமைக்கும் ஒலித்த குரல்
, திங்கள், 10 ஜூன் 2019 (21:25 IST)
நாடக ஆசிரியர், நடிகர், இயக்குனர்,இலக்கியவாதி, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகங்கள் கொண்ட கிரிஷ் கர்னாட், தனது 81 வது வயதில் இன்று காலமானார். தமிழ் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரமாக வலம் வந்த இவர், வில்லன் நடிகர் என்ற வட்டத்திற்குள் சுருக்கிவிடக் கூடியவர் அல்ல, இந்திய சினிமா உலகில் ஒரு குறிப்பிடத் தகுந்த இடத்தைப் பெற்றவர்.
பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் போன்ற அரசு விருதுகளையும், பிலிம் பேர் போன்ற திரைத்துறைகள் சார்ந்து பல விருதுகளும் பெற்றவர். இதிகாச, வரலாற்று கதைகளை நவீன சிக்கல்களோடு தொடர்புபடுத்தி நிறைய நாடகங்களை எழுதியவர். இந்திய இலக்கிய உலகில் மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படும் ஞான பீட விருதினை பெற்ற எழுத்தாளர்.
மஹாராஷ்டிராவில் உள்ள மாதேரன் என்னும் மலைப்பிரதேசத்தில் பிறந்தவர். பள்ளிப்பருவம் வரை மராட்டிய மாநிலத்தில் படித்த கிரிஷ் பின்பு கர்நாடகாவிற்கு வந்தவர். கர்நாடக பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் புள்ளியலில் இளங்கலைப்பட்டமும் , ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் தத்துவப்படிப்பில் முதுகலைப்பட்டமும் பெற்றார்.
1963ம் ஆண்டில் ஆக்ஸ் போர்ட் யூனியனின் தலைவராக இருந்தார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக பதிப்பகத்தில் எழுத்தாளராகவும் இருந்தார். கர்நாடகாவிற்கு வந்த பிறகு நாடக குழுக்களோடு இணைந்து செயல்பட ஆரம்பித்த இவர், கன்னட மொழியில் பல நாடகங்களை எழுதியுள்ளார். 1961ல் தனது 23வது வயதில் யயாதி என்னும் நாடகத்தினை எழுதி வெளியிட்டார். இவரது திப்பு சுல்தான் கதை இன்று வரை புகழ் பெற்றதாய் இருக்கிறது. இவரது எழுத்துக்கள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
1970 ல் , சம்ஸ்காரா என்னும் கன்னட சினிமாவில் தொடங்கியது இவரது திரைப்பயணம், அப்படத்தின் திரைக்கதை ஆசிரியராகவும் இருந்தார் கிரிஷ் கர்னாட். திரைப்படம் குடியரசுத்தலைவரின் தங்கத் தாமரை விருதினை பெற்றது. அதன் பிறகு பல தென்னிந்திய மொழிகளிலும், இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில், ரட்சகன், நான் அடிமை இல்லை, காதலன், மின்சாரக் கனவு மற்றும் சில படங்களில் நடித்துள்ளார்.
இந்தியில் 2012ல் வெளியான ஏக்தா டைகர் திரைப்படத்தில் டாகட்ர் செனாய் என்னும் பெயரில் தலைமை உளவுத் துறை அதிகாரியாக நடித்து இருந்தார், அப்படத்தின் இரண்டாம் பாகமான டைகர் ஜிந்தா ஹை 2017ல் வெளியானது. அதிலும் டாக்டர் செனாய் ஆக நடித்துள்ளார் கிரிஷ் கர்னாட், இதுவே இவரது கடைசித் திரைப்படம் ஆனது.
கிரிஷ் கர்னாட், ஒற்றை தேசக் கொள்கைகளுக்கு எதிரானவர். இந்துத்துவா அமைப்புகளையும் , செயல்பாடுகளையும் தொடர்ந்து விமர்சித்து வந்தவர். இந்தியா என்பது பல வேறு பண்பாடுகளையும், பல மொழி பேசும் மக்களையும் கொண்டது, அந்த பன்முகதன்மையினையும், மொழிகளையும் இழக்க முடியாது என்ற கருத்தினை வலியுறுத்தி வந்தார். எழுத்தாளர் கல்புர்கி கொலையினை தொடர்ந்து , கருத்துரிமைக்காக தொடர்ந்து குரல் வந்தார். கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட பொழுது, இவரும் வலதுசாரி அமைப்புகளால் குறிவைக்கப்பட்டிருந்தார் என்று கூறப்பட்டது.
வலது சாரி இந்துத்துவ அமைப்புகள், இந்துத்துவாவிற்கு எதிராக செயல்படுகின்ற எழுத்தாளர்களை குறிவைத்துள்ளதாகவும், அதில் முக்கியமாக இடம் பெற்றுள்ள நபர் கிரிஷ் கர்னாட் எனவும் செய்திகள் வெளியாயின. ஆனால், அச்சுறுத்தல்களுக்கு நான் பயப்பட மாட்டேன் என்று கூறும் விதமாக , கௌரி லங்கேஷின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டத்திற்கு 'Me Too Urban Naxal' என்று பொறிக்கப்பட்ட அட்டையினை கழுத்தில் அணிந்து கலந்து கொண்டார்.
கிரிஷ் கர்னாட் வாழ்ந்த சிர்ஸியில் வசிக்கும், செயல்பாட்டாளர் பாண்டு ரங்கே ஹெக்டே , கிரிஷ் கர்னாட்டின் எழுத்துக்கள் குறித்து பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். கிரிஷ் கர்னாட் , எப்பொழுதும் தனது எழுத்துப் பயணத்தின் அடித்தளம் அமைந்த இடம் இதுதான் என்று சிர்ஸியினை பற்றி கூறுவார். இங்குள்ள வட்டார நாடக குழுக்களின் மூலமாகவே அவரது நாடக பயணங்கள் வலுவடைந்தது. அவரது எழுத்துக்கள் புதிய சிந்தனைகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்து இருக்கும், வரலாற்று புதினங்கள், நாட்டார் வழக்குகளில் உள்ள கதாபாத்திரங்களை எடுத்து , நவீன சூழல்களில் பொருத்தி ஆழமான கருத்துக்களை எளிய வடிவில் , மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வல்லவர். அவரது எழுத்துக்கள் மிக எளிமையானவை, எளிய மனிதர்கள் பயன்படுத்தும் மொழியினையே அதிகம் பயன்படுத்துவார்.பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதில் வலிமையான கருத்துடையவர் கிரிஷ் கர்னாட் . அவர், மிக சிறப்பான ஆங்கிலப்புலமையுடையவர் எனினும் , பெரும்பான்மை படைப்புகள் கன்னடத்தில் தான் இருக்கும். மராத்தி சமேதானத்திலும் தலைவராக இருந்துள்ளார்.
பண்பாட்டு பன்முகத்தன்மையும் , பன்மொழிதன்மையும் தான் இந்தியாவின் அடித்தளமாய் இருக்க வேண்டும் என்று கிரிஷ் கர்னாட் அடிக்கடி கூறுவார் என்கிறார் பாண்டு ரங்கே ஹெக்டே.
கிரிஷ் கர்னாட்டின் மறைவிற்கு கர்னாடக அரசு ஒரு நாள் விடுமுறையும், மூன்று நாள்கள் அரசுமுறைத் துக்கமும் அறிவித்துள்ளது.