Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லியோ டிரெய்லர்: நடிகர் விஜய் ஆபாச வசனம் பேசுவதால் சமூகத்திற்கு என்ன ஆபத்து?

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (21:05 IST)
லியோ பட முன்னோட்டத்தில் நடிகர் விஜய் ஆபாச வார்த்தை அடங்கிய வசனத்தைப் பேசியிருப்பது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
 
முன்னணி நடிகரான விஜய் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டாமா எனப் பலரும் அந்த வசனத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பின்னணி என்ன?
 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. அதை முன்னிட்டு படத்தின் முன்னோட்டம் நேற்று (அக்டோபர் 5) வெளியானது.
 
ஏற்கெனவே இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதால், படத்தின் முன்னோட்டத்தை விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர்.
 
அந்த வகையில், வெளியான சற்று நேரத்திலேயே ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்து சமூக ஊடகங்களில் டிரெண்டானது லியோ ட்ரெய்லர்.
 
இது ஒருபுறமிருக்க, மற்றொரு பக்கம் விஜய் பேசிய ஆபாச வார்த்தை குறித்து விவாதமும் எழுந்தது. குழந்தைகள், பெண்களைப் பெரிய அளவில் ரசிகர் பட்டாளமாகக் கொண்டு, உச்ச நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் விஜய் இதுபோன்ற வார்த்தைகளைப் பேசலாமா எனப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
 
முன்னதாக, விஜய் புகை பிடிப்பது போல இருக்கும் லியோ போஸ்டர் வெளியான போதும் இதே போன்ற சர்ச்சை எழுந்தது. புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பது இளைய சமூகத்திற்கு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் கண்டித்திருந்தனர்.
 
புகை பிடிக்கும் காட்சிகளில் விஜய் நடிப்பதற்கே பெரும் எதிர்ப்பு எழும் சூழலில், தற்போது பட முன்னோட்டத்தில் ஆபாச வார்த்தையைப் பேசியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, விஜய்யின் சமூகப் பொறுப்பு குறித்துப் பலரையும் கேள்வி எழுப்பச் செய்துள்ளது.
 
மேலும், தன்னை குழந்தைகளுக்கான குடும்பங்களுக்கான ஹீரோவாக முன்னிறுத்திக் கொள்ளும் விஜய் இத்தகைய ஆபாச வசனங்களைப் பேசுவது ஏற்புடையதல்ல என்றும் சமூக ஊடகங்களில் பெண் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
 
'சமூகப் பொறுப்பு வேண்டும்'
இன்றைய காலகட்டத்தில் திரைக்கலைஞர்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டிய தேவை இருப்பதாகக் கூறுகிறார் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கவின்மலர்.
 
''நடிகர் விஜய்க்கு பெண்கள், குழந்தைகள் ரசிகர்கள் ஏராளம். அப்படி இருக்கும்போது இதுபோன்ற வசனங்களை அவர் தவிர்க்க வேண்டும். இன்றைய குழந்தைகள் எதையும் வேகமாக கற்றுக்கொள்ளும் திறன் கொண்டவர்களாக இருக்கும் சூழலில், இது அவர்களிடம் நாமே ஆபாச வார்த்தையைத் திணிப்பது போன்றது.
 
வார்த்தையின் ஆழமான அர்த்தம் அவர்களுக்குப் புரியாவிட்டாலும், ஒருவரைத் திட்ட அதைப் பயன்படுத்தலாம் என்ற அளவில் புரிந்துகொள்ளலாம்.
 
ஒரு நடிகர் நடனம் ஆடுவதைப் பார்த்து குழந்தைகளும் அதேபோல ஆடுகிறார்களே, அதுபோலத்தான் இதுவும். எனவே திரைக்கலைஞர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். மக்களிடம் என்ன கொண்டு சேர்க்கிறோம் என்ற புரிதல் இல்லாமல் நம் கலைஞர்கள் இருப்பது கவலையளிக்கிறது,'' என்கிறார் கவின்மலர்.
 
கவின்மலர் கூறும் கருத்துகளை ஒத்த விமர்சனங்களும் பொதுவெளியில் முன்வைக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, இத்தகைய வார்த்தைகளை கதாநாயகனாக வரும் விஜய் பேசுவது, அத்தகைய ஆபாச வார்த்தைகளை இயல்பாக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும் இது குழந்தைகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
 
 
''படங்களில் 'கெட்ட வார்த்தை' பயன்படுத்தப்படுவது எல்லா காலங்களிலும் இருந்து வருகிறது. திரையரங்கு, தொலைக்காட்சிக்கு சென்சார் உள்ளதால் ம்யூட் செய்யப்படுகிறது.
 
இணையத்திற்கு சென்சார் தேவை இல்லை என்பதால் தற்போது அப்படியே பயன்படுத்துகின்றனர். ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது எனச் சொல்வதற்கு ஒருசாராருக்கு சுதந்திரம் உள்ளது போல, அதைப் பயன்படுத்துவதற்கான சுதந்திரம் மற்றொரு சாராருக்கும் உள்ளது.
 
படத்தின் சூழல் என்ன என்பதைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். லியோ ட்ரெய்லரை பார்க்கும்போது விஜய் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது போலத் தெரிகிறது. கேங்ஸ்டர் என்ன மொழியில் பேசுவாரோ, அதே மொழியில் விஜய் பேசியுள்ளார்.
 
யூ தணிக்கை கொண்ட படங்களில் நடித்த ஹீரோ இந்த மாதிரி நடிக்கலாமா என்று கேட்டால் அது விஜய்யின் தனிப்பட்ட முடிவு. இப்படித்தான் நடிக்க வேண்டும், இப்படித்தான் கதையெழுத வேண்டும் என்று யாரும் யாரையும் சொல்லக் கூடாது,'' என்கிறார் எஸ்.ஆர்.பிரபு.
 
லியோ முன்னோட்டம் யூ டியூப் தளத்தில் வெளியான அதேநேரத்தில், தமிழ்நாட்டின் சில திரையரங்குகளிலும் திரையிடப்பட்டது. திரையரங்கிலும் தணிக்கை செய்யப்படாத ட்ரெய்லரே ஒளிபரப்பப்பட்டது.
 
பொதுவாக திரையரங்கில் திரையிடப்படும் படங்கள், முன்னோட்டங்கள் Qube போன்ற ஒளிபரப்பு சேவை வழங்குநர்கள் மூலம் ஒளிபரப்படும். ஆனால், நேற்று யூ டியூப் தளத்தில் வெளியான தணிக்கை செய்யப்படாத முன்னோட்டத்தை திரையரங்குகளே நேரடியாக ஒளிபரப்பியதாகத் தெரிகிறது.
 
தணிக்கை செய்யப்படாத ஒன்றை திரையிட்டால் அது விதிமீறல் என்கிறார் தணிக்கை வாரிய முன்னாள் உறுப்பினர் எஸ்.வி.சேகர்.
 
''திரையரங்கில் ஒன்றை நீங்கள் திரையிட வேண்டும் என்றால் கட்டாயம் தணிக்கை பெற்றிருக்க வேண்டும். ஆனால், லியோ diரைலரை எப்படி திரையிட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. தணிக்கை பெறாமல் திரையிட்டால் அது விதிமீறல்,'' என்கிறார் அவர்.
 
தணிக்கை என்பது அரசு விதிக்கும் கட்டுப்பாடு. கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் ஆபாச வார்த்தைகளைத் தவிர்ப்பதைவிட தனிமனித பொறுப்புடன் அதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார் எஸ்.வி.சேகர்.
 
''நான் தணிக்கை வாரியத்தில் இருந்தபோது எல்லோரும் பேசுகிற வார்த்தைதானே, அதை ஏன் நீக்கச் சொல்கிறீர்கள் என்று சில தயாரிப்பாளர்கள் கேட்பார்கள். தெருமுனையில் 50 டெசிபிள் சத்தத்தில் கெட்டவார்த்தை பேசுகிறோம் என்றால் திரையரங்கில் அது 5,000 டெசிபிள் சத்தத்தில் இருக்கும்.
 
தெருமுனையில் சிகரெட் பிடிப்பவரைப் பார்த்து சிகரெட் பிடிப்பவர்களைவிட திரையரங்கில் நடிகரைப் பார்த்து முயல்பவர்கள்தான் அதிகம். எனவே அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்பும் விஜய் இதையெல்லாம் தவிர்ப்பதுதான் நல்லது,'' என்கிறார் எஸ்.வி.சேகர்.
 
சமகால திரைப்படங்களில் ஆபாச வார்த்தை அதிகரித்திருப்பதைப் போல வன்முறையும் அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவிக்கிறார் கவின்மலர்.
 
"லியோ ட்ரெய்லராக இருந்தாலும் சரி, சமீபத்தில் வந்த ஜெயிலர் படமாக இருந்தாலும் சரி, அளவுக்கு அதிகமான வன்முறைகள் உள்ளன. இது குழந்தைகள் மத்தியில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைத்தாலே பயமாக உள்ளது," என்று கவின்மலர் அச்சம் தெரிவிக்கிறார்.
 
"பொதுவாக உணவு கொடுக்கும் போது நாம் அதட்டுவதைக் கண்டே குழந்தைகள் பயப்படும். அப்படியிருக்கும்போது, இந்த வன்முறைகளைப் பார்க்கும்போது அவர்கள் மனதில் என்ன தாக்கம் ஏற்படும் என்பதை கலைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
 
பார்வையாளர்களுக்கு வன்முறையைக் கடத்த வேண்டும் என்பதுதான் நோக்கம் என்றால் அதை சற்று புத்திசாலித்தனமாக, பொறுப்போடு யோசித்தால் வித்தியாசமான முறையில் காட்ட முடியும். ஆனால், நம் கலைஞர்கள் அதற்கு சோம்பேறித்தனப்படுவதாக நினைக்கிறேன்,'' என்கிறார் கவின்மலர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

3.60 கோடி லிட்டர் தண்ணீர் திருடிய தனியார் கல்லூரி: ரூ.2 கோடி அபராதம்!

234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெல்லும்.. திமுக கூட்டணி 2026 வரை நீடிக்காது: பிரேமலதா..!

விவசாயக் கடன் தள்ளுபடி.. பென்சன் வரம்பு உயர்வு.. 25 லட்சம் வேலைவாய்ப்பு! - மகாராஷ்டிரா பாஜக வாக்குறுதிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments