காடுகளின் சரிவுகளில் மரங்கள், தாவரங்களுக்கு இடையே ஏறக்குறைய ஒரு மணிநேரம் கடந்து, குகையின் நுழைவாயிலை அடைந்தோம். உள்ளூர் காஷி மொழியில் 'க்ரெம் புரி' என்று அழைக்கப்படும் அந்த குகையை தமிழில் மொழிபெயர்த்தால் 'தேவதைகளின் குகை' என்று பொருள் வருகிறது.
கடல் மட்டத்திலிருந்து 4,025 அடி (1227 மீ) ஆழமான செங்குத்தான பள்ளத்தாக்கின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த 'தேவதைகளின் குகை'. 24.5 கிமீ நீளமும் (15 மைல்), 13 சதுர கிமீ பரப்பளவையும் உள்ளடக்கிய இந்த குகை, ஜிப்ரால்டரைவிட இருமடங்கு பெரியது.
பூமியிலேயே மிக அதிக மழை பெய்யும் பகுதியாக அறியப்பெற்ற மாசிம்ராம் பசுமை சமவெளிகளில் 13 சதுர கிமீ பரப்பளவில் ஜிப்ரால்டர் விரிந்து பரந்துள்ளது.
வெனிசுவேலாவின் 18.7 கிமீ நீளம் கொண்ட 'இவாவரி யியூடா' என்ற குகையே இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை உலகின் மிக நீண்ட குகையாக கருதப்பட்டது.
71 வயதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் பிரையன் டி. கார்ப்ரான் குகைகளைப் பற்றிய பல விஷயங்களை அறிந்திருக்கிறார். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டாக இந்த அழகிய மலை மாநிலத்தில் குகைகளை தேடும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.
1992ம் ஆண்டு அவர் ஆய்வுகள் மேற்கொள்ளத் தொடங்கியபோது, மேகாலயாவில் ஒரு டஜன் குகைகள் மட்டுமே இருந்தன.
26 ஆண்டுகளில் 28 தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அவர், 30 ஆய்வாளர்கள் கொண்ட வலுவான சர்வதேச குழு ஒன்றை உருவாகியுள்ளார்.
புவியியலாளர்கள், நீர்வாழ் உயிரின நிபுணர்கள், உயிரியலாளர்கள், தொல்லியல் துறையை சேர்ந்தவர்கள் என பல்வேறு துறையை சேர்ந்த இந்த ஆராய்ச்சிக் குழு, மாநிலத்தில் 1,650 குகைகளை கண்டறிந்துள்ளது.
தற்போது உலகின் மிகவும் சிக்கலான குகை அமைப்புக்கள் கொண்ட இடமாக அறியப்படும் மேகாலயா மாநிலத்தில் நாட்டிலேயே மிக அதிகமான குகைகள் உள்ளது தெரியவந்துள்ளது. சரி, இப்போது தேவதைகளின் குகைக்குள் செல்ல நாங்கள் தயாராகிவிட்டோம்.
வழிகாட்டுவதற்காக விளக்குகளை கொண்ட கடினமான தொப்பிகளை அணிந்த நாங்கள், இருளில் நுழைந்தோம். இடப்புறம் கீழ்ப்பகுதியில் சிறிய நடைபாதை உள்ளது. இந்த மூடப்பட்ட, இருண்ட குகை மீள முடியா அச்சத்தை (கிளாஸ்ட்ரோஃபோபியா) ஏற்படுத்தும்.
துளைகள் மூலம் உள்ளே செல்ல விரும்பினால், குகை ஆராய்ச்சி உடையை (cave suits) அணிந்திருக்க வேண்டும். அப்போது குகையின் வாயிலில் இருந்து தவழ்ந்தவாறே செல்லலாம். நான் அந்த பிரத்யேக உடையை அணியாததால், அந்த சந்தர்ப்பத்தை இழந்து விட்டேன்.
பிரதான நடைபாதையில், இரண்டு பெரிய பாறைகள் ஒன்றாக காணப்பட்டன. முன்னோக்கி செல்வதற்கு, அவற்றின்மீது ஏற வேண்டும் அல்லது அவற்றிற்கு நடுவே நீந்திச் செல்ல வேண்டும்.
நான் புத்திசாலித்தனமாக இரண்டு வழிகளிலும் முயற்சி செய்தேன், ஆனால் என்னுடைய காலணிகள் பாறைகள் இடையே சிக்கிக் கொண்டன. தண்ணீரில் மூழ்கியுள்ள பாறைகளைத் தாண்டிச் செல்கிறோம், அங்கு நீரோட்டம் மெதுவாக உள்ளது. மழைக்காலத்தில் நீரோட்டம் வேகமாகிவிடும்.
சுவரில் ஒரு பெரிய சிலந்தி இருப்பதை கண்டறிந்தார் பிரையன் கர்ப்ரான். அதுமட்டுமல்ல பாறையின் சுவர்களில் படிந்திருப்பது சுறாவின் பல் அச்சாக இருக்கலாம் என்று புவியியலாளர்கள் கருதுகின்றனர்.
"இந்தக் குகை பல ரகசியங்களை தன்னுள் மறைத்து வைத்துள்ளது" என்கிறார் அவர்.
ஒரு பெரிய வலையமைப்பில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான குறுகிய பாதைகளும், நீண்ட வழித்தடங்களையும் கொண்ட இந்த தேவதைகளின் குகை நம்பமுடியாத தனித்துவமான தோற்றத்தைக் கொண்டுள்ளது.
இந்த குகையில் வழக்கமாக பிற குகைகளில் காணப்படுவது போன்ற ஸ்டாலாக்டைட்டுகள் மற்றும் ஸ்டாலாக்மைட்டுகள் (Stlacktait & Stlagmait) கணப்படுகின்றன. அதாவது நிலத்தின் மேற்பரப்பில் இருந்து கனிமங்கள், நீர் போன்றவை குகையின் உச்சியில் கசிந்து ஏற்படும் தோற்றம் விதானம் போன்று இருக்கும், அதை ஸ்டாலாக்டைட் என்கிறோம். அதேபோல் நிலத்தின் கீழ்பரப்பில் இருந்து கசிவதால் ஏற்படும் தோற்றம் ஸ்டாலாக்மைட் எனப்படும்.
தவளைகள், மீன்கள், பிரம்மாண்ட சிலந்திகள் மற்றும் வெளவால்கள் என ஏராளமான உயிரினங்களும் இங்கு காணப்படுகின்றன.
"இந்த குகைகளை ஆய்வு செய்வது மிகவும் கடினமான சவால்" என்கிறார் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த குகை மற்றும் குகை வரைபட நிபுணர் தாமஸ் அர்பென்ஸ்.
நிலத்தடி பயணம் மேற்கொள்பவர்களுக்கு வழங்கப்படும் குகையின் வரைபடத்தை உன்னிப்பாக கவனித்தால், குகை, அதன் பாதைகள், மேடு-பள்ளங்கள், பாறைகள் மற்றும் பெரிய பாறைகளின் எல்லைகளில் சர்வேயர் பெயர்களையும், குறிப்புகளையும் காணலாம்.
உதாரணமாக, பள்ளத்தாக்கில் நடுப்பகுதியில் அமைந்துள்ள 'கிரேட் வொயிட் ஷார்க்' என்ற சாம்பல் பாறையை காணலாம். பார்ப்பதற்கு சுறா போன்ற தோற்றத்தில் இருக்கும்.
மணற்பாறைகளில் நடப்பது உண்மையிலுமே மிகப்பெரிய சவால். குறுகிய ஆபத்தான அச்சுறுத்தும் இடங்களில் தவழ்ந்து செல்லும் அனுபவம் கற்பனை செய்தே பார்க்க முடியாதது. அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிப்பதும் சாத்தியமல்ல என்றே தோன்றுகிறது.
ஸ்லீப்பி லஞ்ச் (Sleepy Lunch) என்று பெயரிடப்பட்ட இடத்தில் ஆய்வாளர்கள் மதிய உணவு இடைவேளைக்காக தங்கினார்கள், அதில் ஒருவர் உண்மையிலுமே உறக்கம் வருவதை உணர்ந்தார்.
இந்த தேவதைகளின் குகைகளில் மனிதர்கள் வாழ்ந்தார்களா?
குகைகளை தேடி கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுள்ள இத்தாலிய விஞ்ஞானி பிரான்செஸ்கோ சாவ்ரோ, சில சுறா பற்களை அடையாளம் கண்டதாகச் செல்கிறார்.
கண்டுபிடிக்கப்பட்ட சில எலும்புகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கடல்வாழ் டைனோசர்களாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இங்குள்ள குகைகளில் பல அணுகுவதற்கு மிகவும் கடினமான ஆபத்தானவைகளாக கருதப்படுகின்றன.
"இங்கு கண்டெடுக்கப்பட்டிருக்கும் பல பொருட்கள் அறிவியலாளர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்ட பிறகே, மனிதர்கள் இங்கு வாழ்ந்தார்களா என்பது தெரியவரும்" என்கிறார் செளரோ.
ஆனால் அதற்கான வாய்ப்புகள் கண்ணுக்கு எட்டிய வரையில் தெரியவில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள். ஏனெனில் ஆதி மனிதர்கள் வசிப்பதற்கு பெரிய அளவிலான குகைகளையே தேர்ந்தெடுப்பார்கள்.
அதோடு, மழைக்காலங்களில் தங்குவதற்கு இந்த இடம் பொருத்தமானது அல்ல. மேகாலயா அதிக மழை பெய்யும் இடமாக இருப்பதால், இங்குள்ள பெரும்பாலான குகைகளில் மனிதர்கள் வாழ்ந்திருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்றே சொல்லலாம்.
குகைகள் உருவாவது எப்படி?
மழைநீர் காற்றில் இருந்து கரியமில வாயுவை ஈர்ப்பதால் சுண்ணாம்புப் பாறைகள் கரைந்து வலுவிழந்துவிடும். பொதுவாக மணற்கல்லால் உருவாகும் குகைகள் அரியவை. ஏனெனில் இந்த வகை பாறைகளின் கரையும் திறன் குறைவு. தாழ்வான இடத்தில் இருக்கும் பாறைகளை கரைக்கவும், அதில் வெற்றிடத்தை உருவாக்கவும், மிக அதிகமான அளவு நீர் தேவைப்படும்.
உலகிலேயே மிக அதிகமான மழைப்பொழிவை கொண்ட மாநிலம் மேகாலயா. எனவே, இங்கு இத்தகைய மணற்குகைகள் வியத்தகு முறையில் உருவாக்கப்படுவது ஆச்சரியமளிக்கவில்லை.
தேவதைகளின் குகை போன்ற குகைகள், இந்த இடத்தின் உலகின் காலநிலை மற்றும் வாழ்க்கையை புரிந்து கொள்ள உதவுகின்றன.
"இவை புவியின் உட்பகுதியில் உள்ள சூழல் தொடர்பான பாதுகாக்கப்பட்ட தகவல்களை வழங்குகின்றன" என்று கூறுகிறார் மேகலயாவில் இருக்கும் குகைகளைத் ஆரயும் 'கிளவுட்ஸ் எக்ஸ்பேடிஷன்' அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சைமன் ப்ரூக்ஸ்.
பூமி இந்த "மேற்பரப்பு காப்பகங்கள்" கிரகத்தின் மேற்பரப்பில் ஏற்பட்ட பனிச்சரிவு, எரிமலைகளின் செயல்பாடு, வெள்ளம் போன்ற இயற்கை நிகழ்வுகளின் தடயங்களை பாதுகாக்கின்றன.
மேகாலயாவில் இருக்கும் குகைகள் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்களை ஈர்க்கின்றன. 31.1 கி.மீ நீளம் கொண்ட லயட் பிரா (Liat Prah) சுண்ணாம்பு குகை அமைப்பும் இந்த மலைத்தொடரில்தான் அமைந்துள்ளது. அதிகபட்ச உயரத்தில் இருந்து, குறைந்த உயரம் வரையிலான இந்த ஆழமான குகைகள் 317 மீட்டர் முதல் 97 மீட்டர் வரையிலானவை.
பெரும்பாலான குகைகளில் எப்போதுமே மனிதர்கள் வசித்ததே இல்லை என்பது உண்மையாக இருந்தாலும், போர்க்காலத்தில் தஞ்சம் புக சில குகைகள் பயன்பட்டால், சிலவற்றை வேட்டையாடுபவர்கள் பயன்படுத்தியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அதோடு இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கும் சில குகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.