பல நாடுகளில் காவல் துறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) சேவைகளின் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது.
குடும்ப வன்முறையை எதிர்கொண்ட சாரா, உடனடி உதவிக்காக தனது மொபைல் பேசியிலிருந்து அவசர எண்ணை அழைத்தார்.
தனது முன்னாள் கணவர் வீட்டுக்குள் நுழைய வன்முறையை பிரயோகிப்பதைக் கண்டு அவர் திகிலடைந்தார்.
கால் சென்டர் நபரிடம் சாரா பேசும்போது ஏ.ஐ. மென்பொருள் அமைப்பு அவருடைய அழைப்பை படியெடுக்கிறது. அவர் பேசுவது அனைத்தும் பிரிட்டன் காவல் துறையின் தரவுத்தளத்தில் சேமிக்கப்படும்.
சாரா தனது முன்னாள் கணவரின் முழுப்பெயர் மற்றும் பிறந்த தேதியை சொன்னவுடன், ஏ.ஐ. மென்பொருள் சாரா அளித்த விவரங்களுடன் தரவுத்தளத்தைத் தேடி அவரது முன்னாள் கணவரின் விவரங்களைக் கண்டறியும்.
அதில், சாராவின் முன்னாள் கணவருக்கு துப்பாக்கி உரிமம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தவுடன் விரைவிலேயே அவருக்கு உதவச் சென்றனர்.
மேலே கூறப்பட்ட சம்பவம் உண்மையில் நடக்கவில்லை. ஆனால், 2023-ம் ஆண்டில், ஏ.ஐ. அவசர அழைப்பு மென்பொருள் சேவையின் மூன்று மாத சோதனை ஓட்டத்தின் போது ஹம்பர்சைட் காவல்துறை அத்தகைய ஒரு முன்மாதிரி சோதனையை நடத்தியது.
ஏ.ஐ. ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் இணை-இயக்குனர் கமிலா
உருவாக்கிய இந்த மென்பொருளின் உதவியுடன், காவல்துறை ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான அழைப்புகளை ஏற்கவும் அவற்றை பகுப்பாய்வு செய்து திறமையாகவும் விரைவாகவும் செயல்பட உதவும் என்று அந்நிறுவனம் கூறுகிறது.
இந்த மென்பொருளை உருவாக்க, ஹம்பர்சைடில் இரண்டாண்டு காலப் பகுதியை உள்ளடக்கிய குடும்ப வன்முறை வழக்குகள் பற்றிய தரவு சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது.
நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி கமிலா கூறுகையில், “நாங்கள் உருவாக்கிய ஏ.ஐ. மென்பொருள், ஆபரேட்டர்களுக்கு உதவியாளராக செயல்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் உழைப்பையும் மிச்சப்படுத்துகிறது. அந்த நேரத்தில் அவர்கள் திறமையாக வேலை செய்ய உதவுகிறது,'' என்றார்.
இந்த மென்பொருள் பெரியளவிலான தரவை பகுப்பாய்வு செய்கிறது. ஒவ்வொரு அழைப்புக்கும் ஆடியோ பதிவை படியெடுத்து, பகுப்பாய்வு செய்து அதன் அடிப்படையில் அந்த அழைப்பின் முன்னுரிமையை தீர்மானிக்கிறது. அதற்கேற்ப மதிப்பெண்களையும் வழங்குகிறது. அதன் முடிவைப் பொறுத்து, காவல்துறை அதிகாரிகள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளைப் பெறுவர்.
குறைந்த, நடுத்தர மற்றும் அதிக மதிப்பெண்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதிக மதிப்பெண் என்றால் காவல் துறை அதிகாரி ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்குள் அழைப்பு வந்த இடத்தை அடைய வேண்டும்.
அன்ட்ரைட் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த மென்பொருள் ஆபரேட்டர்களின் நேரத்தை மூன்றில் ஒரு பங்கு வரை சேமிக்கும். மேலும், ஒவ்வொரு அழைப்புக்கும் ஒதுக்கப்படும் நேரம் குறைக்கப்படுகிறது என்கிறார் கமிலா.
தமிழ்நாட்டில் 'சங்கி' என்ற சொல் பரவலாகப் பயன்படுத்தப்படும் காரணமும் பின்னணியும்
"இந்த மென்பொருள் ஆபரேட்டர்களின் நேரத்தை மூன்றில் ஒரு பங்கு வரை சேமிக்கும்."
இந்த ஏ.ஐ தொழில்நுட்பத்தை பலகட்ட சோதனை செய்த பிறகு, இதன் அடுத்த கட்டம் நேரடி கண்காணிப்பு தான். இதற்காக ஏற்கனவே அன்ட்ரைட் நிறுவனம் அவசர சேவைகள் மற்றும் காவல்துறையை அணுகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு காவல்துறை விசாரணைகள் மற்றும் வழக்குகளின் தீர்வை கண்டறிதலில் உதவும் திறன் உள்ளது. குறிப்பாக இதனால் மனிதர்களை விட வேகமாக தரவுகளை அலசி ஆராய முடியும்.
ஆனால், சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக தவறுகளும் நடக்கும். உதாரணத்திற்கு, அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்ட ஏ.ஐ. அடிப்படையில் முகத்தை அடையாளம் காணக் கூடிய தொழில்நுட்பத்தால் கறுப்பின மக்களை அடையாளம் காண முடியவில்லை. மேலும் ஏ.ஐ தொழில்நுட்பம் செய்த தவறால் சில நிரபராதிகளும் கூட கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ மற்றும் சியாட்டில் போன்ற நகரங்களில் அதன் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், அமெரிக்காவின் அட்லாண்டிக் பகுதிகளில் காவல்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
ஆனால் ஆல்பர்ட் கானுக்கு இதுபோன்ற பல மாற்றங்கள் மகிழ்ச்சி அளிக்கவில்லை. இவர் அமெரிக்க கண்காணிப்பு தொழில்நுட்ப மேற்பார்வைத் திட்டத்தின் (Surveillance Technology Oversight Project - STOP) கண்காணிப்புக்கு எதிரான அழுத்தம் கொடுக்கும் குழுவின் தலைவர் ஆவார்.
இதுகுறித்து பேசும்போது, “முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் மீது அதிக பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த தொழில்நுட்பமோ பல வழக்குகளில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றாலும் கூட, கறுப்பின மக்கள், லத்தீன் மக்கள் மற்றும் ஆசியர்களுக்கு எதிரான அணுகுமுறையோடு செயல்படுகிறது. இதனாலேயே இந்த தொழில்நுட்பம் ஒன்றும் செய்யாதவர்களையும் கூட தவறு செய்தவர்கள் என்ற முடிவுக்கு வந்து விடுகிறது” என்கிறார் அவர்.
அட்லாண்டிக் பகுதிகளில் காவல்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
மூன்று முக்கியமான கோணங்களில் செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
ஒன்று நேரலையில் முகத்தை அடையாளம் காணுதல். இதன் மூலம் ஒரு நபரின் முகத்தை படம் பிடித்து, தன்னிடம் உள்ள தரவுகளில் அதை சோதனை செய்து, உடனடியாக அந்த நபர் குறித்த விவரங்களை அது தருகிறது.
இரண்டாவது, பழைய வரலாற்றில் இருந்து அந்த முகத்தை அடையாளம் காணுதல். தரவு தளத்தில் உள்ள ஆயிரக்கணக்கான படங்களுடன் ஒருவரின் முகத்தை பொருத்திப் பார்த்து அதை அடையாளம் காணுதல்.
மூன்றாவது, ஆப்பரேட்டர் மற்றும் முக அடையாளம் மூலம் சந்தேகத்திற்கிடமான நபரின் முழு விவரங்களை தெரிந்து கொள்வது. இதில் ஆபரேட்டர் குறிப்பிடும் நபரின் போட்டோவை தரவுத்தளத்தில் தேடி அவர் குறித்த முழு விவரங்களை கொடுக்கும்.
2023 அக்டோபர் மாதம், இங்கிலாந்து காவல்துறை அமைச்சர் கிறிஸ் பிலிப்ஸ், “இங்கிலாந்து காவல்படையில் அடுத்த இரண்டு வருடத்திற்குள் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை இரண்டு மடங்கு அதிகரிக்க போகிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
அதே சமயம், இங்கிலாந்தின் நேஷனல் பிஸிக்கல் லேப் (NPL) மாநகர மற்றும் சவுத் வேல்ஸ் காவல் துறையினரால் பயன்படுத்தப்பட்ட மூன்று வெவ்வேறு ஏ.ஐ மாதிரிகளை சோதித்து பார்த்தது.
அவர்களது பரிசோதனையின்படி, இந்த செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த புதிய தொழில்நுட்பத்தை மதிப்பீடு செய்ய வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை நெறிமுறைக் குழு ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த குழுவின் தலைவராக நார்த்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மரியன் ஓஸ்வால்ட் பொறுப்பு வகிப்பார்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அவர், “இந்த சோதனைக்காக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சந்தேகப்படும் நபரை போட்டோ எடுக்க வேண்டும். அதன்பிறகு இந்த தொழில்நுட்பம் எப்படி அவரது தகவல்களை தேடுகிறது என்பதை குழு சோதனை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழு எதிர்காலத்தில் நடக்கப்போகும் குற்றங்களை, ஒரு வாரத்திற்கு முன்பே 90% துல்லியமாக கணிக்கும் அல்காரிதம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
குற்றம் நடக்கும் முன்பே கண்டுபிடித்து தடுக்க முடியுமா?
குற்றங்களை தடுப்பதிலும் கூட செயற்கை நுண்ணறிவின் பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எந்தெந்த பகுதிகளில் குற்றம் அதிகம் நடக்கும்?, யாரெல்லாம் அந்த குற்றங்களில் அதிகம் ஈடுபடுகிறார்கள்? உள்ளிட்ட விவரங்களை தரவுத்தளத்தில் வைத்திருப்பதால், முன்பே இந்த தகவல்களை ஆராய்ந்து குற்றங்கள் நடப்பதை கணித்து அவற்றை தடுக்க ஏ.ஐ. தொழில்நுட்பம் முக்கியமானதாக இருக்கும்.
2002 இல் வெளியான அறிவியல் புனைகதை திரில்லர் படமான 'மைனாரிட்டி ரிப்போர்ட்' இந்தக் கருவை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அந்த கற்பனை கதையை அப்படியே உண்மையாக்கிவிட்டது.
சிகாகோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஒரு குழு எதிர்காலத்தில் நடக்கப் போகும் குற்றங்களை, ஒரு வாரத்திற்கு முன்பே 90% துல்லியமாக கணிக்கும் செயல்முறை ஒன்றை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து கூறும் கான், அந்த மென்பொருள்கள் அனைத்தும் தன்னிச்சையான வரலாற்றுத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை என்கிறார்.
“இதுபோன்ற பல மென்பொருள் செயலிகள் அமெரிக்காவில் இருப்பதாகவும், அவை அனைத்துமே எதிர்கால குற்றங்கள் குறித்து எச்சரிக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும்” அவர் கூறுகிறார்.
இவ்வளவு தொழில்நுட்பங்கள் இருந்தும் கூட, அமெரிக்காவில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகம்.
பேராசிரியர் மரியன் கூறுகையில், “எதிர்காலத்தில் வரும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான மென்பொருள்கள் பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டிருக்கும். இன்னும் விரிவாக சொல்ல வேண்டுமெனில், இந்த தொழில்நுட்பம் உண்மையில் நடக்கப் போகும் குற்றங்களை முன்கூட்டியே எச்சரிப்பதில்லை, ஆனால் மென்பொருளில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து குற்றங்கள் நடக்கலாம் என்ற சாத்தியத்தை தான் கணிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கிறார்.
மேலும், இங்கு அடையாளம் காணப்பட வேண்டிய பிரச்னை என்னவெனில், கடந்த காலங்களில் ஏற்கனவே குற்றங்களில் ஈடுபட்டவரின் தரவுகள், தற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள நபரின் தரவுகளோடு ஒப்பிடப்படுகிறது. குறைந்தபட்ச தகவல்களை வைத்துக்கொண்டு, இதர காரணங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், இவர்தான் குற்றவாளி என்ற முடிவுக்கு வர முடியாது” என்கிறார் அவர்.
இருப்பினும், குற்றங்களை தடுக்கவும், வழக்குகளுக்கு தீர்வை கண்டறியவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.