Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா சென்ற இந்தியர்களுக்கு பறிபோகும் வேலைகள்: எப்படி சமாளிக்கிறார்கள்?

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2022 (07:38 IST)
அமெரிக்காவில் அண்மையில் நடந்த தொழில்நுட்பத்துறை பெருநிறுவனங்களின் ஆட்குறைப்பில், அங்கு தற்காலிக விசாவில் தங்கி பணிபுரிந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலையிழந்துள்ளனர். அவர்கள் அங்கு தொடர்ந்து தங்கி, பணிபுரிய தேவையான உதவிகளை வழங்க சக ஊழியர்கள் முன்வந்திருப்பதாக கூறுகிறார் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சவீதா படேல்.
 
ட்விட்டரில் இருந்து அண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்ட அமித் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மென்பொருள் பொறியாளர், தனக்கு ஏற்கனவே சில வேலைக்கான நேர்காணல்களுக்கு அழைப்பு வந்திருப்பதாகக் கூறுகிறார். மேலும், ”சில நல்ல வேலைகளுக்கான பரிந்துரைகளும் கிடைத்திருக்கிறது”, என்கிறார் அவர்.
 
"லிங்க்ட்இன் தளத்தில் என்னுடன் தொடர்பில் இல்லாத பல நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும், பொறியாளர்களும் என்னுடைய சுயவிவரக் குறிப்புகளை அவர்களது நிறுவனத்தில் பகிர்ந்துள்ளனர். இது சில வேலைகளுக்கான நேர்காணல்களுக்கு நான் அழைக்கப்பட உதவிகரமாக இருந்தது", என்று அவர் நெகிழ்கிறார்.
 
அமெரிக்க தொழில்நுட்பத் துறையில் பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பில் இறங்கியதால் வேலையிழந்தவர்களுக்கு உதவ இணையம் மூலமாகவும், நேரிலும் ஏராளமானோர் முன்வந்துள்ளனர்.
 
அத்தகைய உதவிக் குழுக்களால் பலனடைந்த நூற்றுக்கணக்கானோரில் அமித்தும் ஒருவர்.
பொருளாதார வீழ்ச்சி குறித்த கவலைகள் அதிகரித்து வரும் வேளையில், கடந்த இரு மாதங்களில் மெட்டா, ட்விட்டர், அமேசான் ஆகிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கானோரை பணிநீக்கம் செய்துள்ளன.
 
இதனால் வேலையிழந்த, எச்1பி விசாவின் கீழ் அமெரிக்கா சென்றுள்ள, இந்தியர்கள் 60 நாட்களுக்குள் புதிய வேலை தேட வேண்டும் அல்லது நாடு திரும்ப வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
 
குடியேற்ற அந்தஸ்து அல்லாத எச்1பி விசா பெற்றவர்கள் அமெரிக்காவில் 6 ஆண்டுகள் தங்கியிருந்த பணிபுரியலாம்.
 
எச்1பி விசாவின் நிலையற்ற தன்மையை உணர்ந்த, அமெரிக்காவில் உள்ள சக பணியாளர்கள், வேலையிழந்த பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதைத் தடுக்க புதிய வேலை தேடித் தர ஒன்று சேர்ந்துள்ளனர்.
 
வேலையிழந்த பணியாளர்கள் மனதொடிந்து போவதைத் தடுக்க புதிய வேலை வாய்ப்பு விவரங்களுடன் ஊக்கமளிக்கும் தகவல்களையும் அவர்கள் அனுப்புகின்றனர். பிரச்னைக்குத் தீர்வு காண வேலை அளிப்போர், வேலை தேடுவோர் மட்டுமின்றி குடியேற்றம் சார்ந்த பிரச்னைகளில் நிபுணத்துவம் வாய்ந்த வழக்குரைஞர்களையும் பொதுவான ஒரே தளத்தில் அவர்கள் இணைத்துள்ளனர்.
 
எச்1பி விசாவின் கீழ் அமெரிக்காவில் பணிபுரியும் விதி அகர்வால் மற்றும் ஷ்ருதி ஆனந்த் ஆகியோர், வேலை தேடுவோரையும், அவர்களுக்கு வேலை தர வாய்ப்புள்ள நிறுவனங்களையும் இணைக்கும் வகையில் புதிய தரவுத் தளத்தை உருவாக்கியுள்ளனர்.
 
“வேலையிழந்தவர்கள் அனைவரும் உலகின் மிகச்சிறந்த தொழில்நுட்பத் திறன் கொண்ட பணியாளர்கள்” என்கிறார் டேட்டாபிரிக்ஸ் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் விதி அகர்வால்.
 
“அவர்கள் நன்கு படித்தவர்கள், உயர் திறன் கொண்டவர்கள், ஆண்டுக்கு 2.5 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு மேல் ஊதியம் பெறுபவர்கள் என்பதை சுய விவரக்குறிப்பால் தெரிந்து கொண்டோம்” என்று அவர் குறிப்பிடுகிறார்.
 
வேலைச் சந்தையில் குவிந்துள்ள உயர் திறனாளர்களை பணிக்கு எடுத்துக் கொள்ள அவர் பணிபுரியும் நிறுவனம் உள்பட பல நிறுவனங்கள் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்.
 
வேலையிழந்த பணியாளர்களின் சுயவிவரக் குறிப்புகள் சரியான நபர்களின் பார்வையில் பட தானும், ஷ்ருதி ஆனந்தும் உதவிக் கொண்டிருப்பதாக அவர் கூறுகிறார்.
 
எச்1பி விசாவில் உள்ள, வேலையிழந்த பணியாளர்களின் அவசர நிலையை உணர்ந்து, வேலைவாய்ப்பு குறிப்புகள், நேர்காணல் குறித்த விவரங்கள் அவர்களை விரைந்து சென்றடைவதை உறுதி செய்வதில் இருவரும் முனைப்பு காட்டுகின்றனர்.
 
“இது அவசர கால சூழல் என்பதை வேலைக்கு தேர்ந்தெடுக்கும் மேலாளர்கள் புரிந்து கொண்டுள்ளனர். நேர்காணலுக்கு விரைந்து அழைக்கப்பட்டவர்கள் குறித்தும் எனக்குத் தெரியும். ஒரு நிறுவனத்தில் ஒரே மாதத்தில் பல சுற்றுகள் நேர்காணல் நடத்தப்பட்டது இதுவரை கேள்விப்படாத ஒன்று” என்கிறார் விதி அகர்வால்.
 
“விதியின் முயற்சியால் நான் நேரடியாக பலனடைந்தேன். அதன் மூலம் நல்ல வேலைக்கான பரிந்துரையைப் பெற்றேன்” என்று இந்தியாவில் இருந்து 6 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க சென்ற அமித் கூறுகிறார்.
 
இந்தியாவில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவரான அமித், படிப்பில் தான் சிறந்து விளங்கியதாகவும், வேலையில் மிகப்பெரிய உயரங்களை தொட விரும்பியதாகவும் கூறுகிறார்.
 
“அதற்காக, அமெரிக்காவில் நான் படிக்க எனது குடும்பத்தினர் மிகப்பெரிய அளவில் கடன் வாங்கினர். நான் எனது இலக்கை எட்டுவதற்கான அவர்கள் தங்களது கனவுகளையும், சந்தோஷங்களையும் தியாகம் செய்துள்ளனர். அவர்களுக்கு நான் எப்போதும் கடன்பட்டுள்ளேன். அவர்கள் முழுமையாக என்னையே சார்ந்துள்ளனர்” என்கிறார் அமித்.
 
அவருக்கு இப்போதிருக்கும் மிகப்பெரிய கவலை ஒரு வேலையை அடைவதே. சக தொழில்நுட்ப பணியாளர்களின் உதவி நெகிழ்வைத் தருவதாக அவர் தெரிவிக்கிறார்.
மற்ற இடங்களில், பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான நிகழ்வுகளை சக தொழில்நுட்ப பணியாளர்கள் ஒருங்கிணைத்து வருகின்றனர். வடக்கு கலிஃபோர்னியாவில் “என்னிடம் எதையும் கேளுங்கள்” (Ask Me Anything) என்ற நிகழ்ச்சியை ஐஐடி பே ஏரியா முன்னாள் மாணவர் சங்கத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
 
இதன் மூலம், விசா நெறிமுறைகள், பணியாளர் உரிமைகள் மற்றும் பிற பிரச்னைகள் குறித்த, பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களின் சந்தேகங்களுக்கு தெளிவு தருகின்றனர்.
 
ஐஐடி பே ஏரியா முன்னாள் மாணவர் சங்க நிர்வாகக் குழு உறுப்பினரும், மெட்டா உள்கட்டமைப்புக் குழுவின் மூத்த பணியாளருமான தர்மேஷ் ஜானியால் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பணிநீக்க நோட்டீஸ் பெற்ற, எச்1பி விசா பணியாளர்கள் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்து கொண்ட கவலைகளை கண்ணுற்ற அவர் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தார்.
 
“பணியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவ முயன்றதை வெளிப்படுத்திய அந்த பேச்சுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. மதிப்பு மிக்க தகவல் இழப்பைத் தடுக்க குடியேற்றத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த வழக்குரைஞரையும், மனிதவளத் துறை நிபுணரையும் நிகழ்வில் பங்கேற்கச் செய்தோம்” என்று ஜானி விளக்குகிறார்.
 
வணிக நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவுக்குள் தற்காலிகமாக நுழைய உதவும் பார்வையாளர் விசா போன்ற குடியேற்றம் அல்லாத விசாக்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது போன்ற உத்திகளையும் நிபுணர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். இதன் மூலம் எச்1பி விசா வைத்திருப்போர் மேலும் சில மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்து வேலை தேட முடியும்.
 
பணிபுரியும் நிறுவனங்களில், பணியின் கடைசி நாளை தள்ளிப் போடுமாறு பேசுமாறு அறிவுறுத்தியதுடன், உடனே வேலைக்கு ஆள் எடுக்க வாய்ப்புள்ள நிறுவனங்கள் குறித்த பரிந்துரைகளையும் அவர்கள் அளிக்கின்றனர்.
 
பெருநிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கையால் வேலைவாய்ப்புச் சந்தையில் குவிந்துள்ள உயர்திறன் கொண்ட வெளிநாட்டுப் பணியாளர்களை ஈர்க்க அமெரிக்காவின் சில நகரங்கள் ஆர்வம் காட்டுகின்றன.
 
வேலை தேடுவோரையும், அவர்களுக்கு வேலை தர வாய்ப்புள்ள நிறுவனங்களையும் இணைக்கும் வகையில், ஸெனோ (Zeno) என்ற தளத்தை தொழிலநுட்பப் பணியாளரான அபிஷேக் குட்குட்டியா உருவாக்கியுள்ளார். வெளிநாட்டுத் திறமைகளை ஈர்ப்பதன் மூலம் நகரின் மக்கள் தொகையை வளர்ச்சியடையச் செய்யும் பொருட்டு, மிசவுரி மாகாணத்தின் செயின்ட் லூயிஸ் நகர நிர்வாகத்தால் தனது திட்டம் வெகுவாக ஊக்குவிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.
 
இரண்டு பெருநிறுவனங்கள் கடும் ஆட்குறைப்பை அறிவித்த குறுகிய காலத்திலேயே ஸெனோ தளத்தை அறிமுகப்படுத்திய குட்குட்டியா, அதற்கு தொழில்நுட்பப் பணியாளர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதை கண்டார். ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் நிதி நிலைமை மோசமாவதை உணர்ந்து, பயனர்கள் பணத்தை சேமிக்க உதவும் புதிய அம்சங்களை தனது தளத்தில் அண்மையில் சேர்த்ததாக அவர் கூறுகிறார். ஸெனோ தளம் அதன் பயனர்களுக்கு, “உங்களுக்குத் தேவையானதை நீங்களே செய்தல் மற்றும் நிபுணர் உதவி பெறுதல்” ஆகிய சேவைகளை அளிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

இந்தியாவில் Sony Playstationக்கு அனுமதி இல்லையா? கேம் பிரியர்கள் அதிர்ச்சி! - என்ன காரணம்?

பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

வயநாடு இடைத்தேர்தல்.. இன்றுடன் பிரச்சாரம் முடிவு.. ராகுல் - பிரியங்கா தீவிரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments