டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் முன்னிலையில் அக்கட்சியில் அண்மையில் காங்கிரஸில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா இணைந்தார்.
பாஜகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், "எனது வாழ்க்கையில் இரு நிகழ்வுகள் மிக முக்கியமானது. ஒன்று எனது தந்தையை நான் இழந்த தருணம்; இரண்டாவது நேற்று என்னுடைய வாழ்க்கையில் புதிய பாதை ஒன்றை நான் தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தது. தற்போதுள்ள காங்கிரஸ், முன்பிருந்த காங்கிரஸ் கட்சி போன்றது அல்ல" என்று குறிப்பிட்டார்.
முன்னதாக செவ்வாய்க்கிழமையன்று மத்தியப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா, கட்சியிலிருந்து விலகினார் அவரை தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக ஆறு அமைச்சர்கள் உட்பட 22 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்தனர்.
இதனிடையே நேற்றிரவு, அம்மாநில முதல்வர் கமல்நாத் தலைமையில் அவரது இல்லத்தில் நடந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பிறகு, கமல்நாத் தனது பதவியை ராஜிநாமா செய்யமாட்டார் என்றும், காங்கிரஸ் கட்சி அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏக்களை சமாதனப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்போவதாகவும் கூறப்பட்டது.
முன்னதாக ஜோதிராதித்ய சிந்தியா சோனியா காந்திக்கு எழுதி உள்ள கடிதத்தில், கடந்த 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் உள்ளேன். இங்கிருந்து விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது என குறிப்பிட்டிருந்தார்.
பின் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, உடனடியாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்திருந்தார்.
யார் இவர்?
2001ம் ஆண்டு ஜோதிராதித்யாவின் தந்தை மாதவராவ் இறந்தபிறகு ஜோதிராதித்யா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தனது தந்தையின் இறப்பால் காலியான குணா தொகுதியில் போட்டியிட்டார். பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2002ம் ஆண்டு அவர் முதல் முதலில் தேர்தலில் வெற்றி பெற்றார். அதன்பின் 2004, 2009 மற்றும் 2014ஆகிய ஆண்டுகளிலும் வெற்றி பெற்றார்.
இருப்பினும் தனக்கு செயலாளராக இருந்த கேபிஎஸ் யாதவிடம் பொதுத் தேர்தலில் தோற்றது அவரின் நம்பிக்கையை குலைத்தது.
சிந்தியா குவாலியர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாத்தா ஜிவாஜிராவ் சிந்தியா சமஸ்தானத்தின் அரசின் கடைசி அரசர்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராக இருந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. 2008ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி அவர் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சராக ஆனார்.
2009 முதல் 2012 வரை மத்திய தொழில் வர்த்தகத்துறை இணை அமைச்சராக இருந்தார். பிறகு மின்சாரத் துறை இணையமைச்சராக (தனிப் பொறுப்பு) பதவி வகித்தார். அமைச்சராக பல தைரியமான முடிவுகளை எடுப்பவராகவும், மக்கள் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடியவராகவும் இருந்ததாக இவர் பார்க்கப்பட்டார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் இளம் அமைச்சர்களில் இவரும் ஒருவராக இருந்தார்.