Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

யுக்ரேனில் மிகப்பெரிய அணை தகர்ப்பு: வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள் - ஒரு நகரமே மூழ்கும் அபாயம்

ukraine
, செவ்வாய், 6 ஜூன் 2023 (20:49 IST)
ரஷ்யா - யுக்ரேன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது யுக்ரேனின் ஒரு முக்கிய அணையையும், நீர்மின் நிலையத்தையும், இன்று காலை ரஷ்யப் படையினர் தாக்குதல் நடத்தி தகர்த்திருப்பதாக யுக்ரேன் குற்றம்சாட்டியுள்ளது. அணை உடைக்கப்பட்டதால், அதிலிருந்து பெருமளவில் வெளியேறி வரும் வெள்ளம் அருகிலிருக்கும் பகுதிகளைச் சூழ்ந்து வருவது, ஏற்கனவே நிலவிவரும் போர்ப் பதற்றங்களை அதிகரித்திருக்கிறது.
 
யுக்ரேன் நாட்டின் தெற்கு கெர்சன் பகுதியில் அமைந்திருக்கும் ’டினிப்ரோ ஆற்றில்’ கட்டமைக்கப்பட்டிருக்கும் பெரிய அணையையும், அதற்குள் இருக்கும் நீர்மின் உற்பத்தி நிலையத்தையும் ரஷ்யா தகர்த்திருப்பதாக யுக்ரேன் குற்றம் சாட்டியுள்ளது. அணை உடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேறி வருவதால், அங்கு மக்களின் குடிநீருக்குத் தட்டுப்பாடு வரும் என அஞ்சப்படுகிறது. அதேசமயம் தண்ணீர் நீர்மின் நிலையத்தையும் சூழ்ந்து வருவதால், அதனால் விபத்துகள் ஏற்படுமா என்ற பதற்றமும் நிலவி வருகிறது.
 
 
தற்போது தகர்க்கப்பட்டிருக்கும் யுக்ரேன் அணை ரஷ்ய ஆக்கிரமிப்பு நகரமான நோவா கக்கோவ்காவில் உள்ளது, இதனால் அணையின் கட்டுப்பாடும் ரஷ்யாவின் கீழ் வருகிறது. ககோவ்கோ பகுதியில் அமைந்துள்ளதால் இந்த அணை ‘கக்கோவ்கா அணை’ என்று அழைக்கப்படுகிறது.
 
சூழ்ந்து வரும் இந்த வெள்ள நீரால், சுமார் 16,000க்கும் அதிகமான மக்கள் ஆபத்தில் இருப்பதாக யுக்ரேன் அறிவித்துள்ளது. வெள்ள நீரை அகற்றுவதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக யுக்ரேன் கவர்னர் அறிவித்துள்ளார்.
 
மேலும் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து, யுக்ரேனின் பிரதமர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அவசர நிலை கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார்.
 
யுக்ரேன் ராணுவமும், நேட்டோவும் இந்த தாக்குதலுக்கு ரஷ்ய ராணுவம்தான் காரணம் எனக் கூறிவரும் நிலையில், ரஷ்ய ராணுவம் யுக்ரேனைக் குற்றம் சுமத்திவருவதும் குறிப்பிடத்தக்கது
 
கக்கோவ்காவில் என்ன நடக்கிறது?
 
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரேனிய நகரமான ’நோவா கக்கோவ்கா’ தற்போது நீரில் மூழ்கியுள்ளதாக ரஷ்யாவின் அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனமான ’டாஸ்’ தெரிவித்துள்ளது.
 
கக்கோவ்கா அணை உடைந்து தண்ணீர் வெளியேறி வருவதால், சுமார் 600 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக ரஷ்ய அவசர சேவைகள் கூறுகின்றன. அதேபோல் 8 வெவ்வேறு குடியிருப்பு பகுதிகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக யுக்ரேன் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
குடிமக்களின் உட்கட்டமைப்பை அழித்தது ஒரு "போர்க் குற்றம்" என ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ரஷ்யாவை சாட்டியுள்ளார்.
 
கக்கோவ்கா அணையின் விவரங்கள்
 
கக்கோவ்கா நீர்மின் நிலையம் யுக்ரேனின் கெர்சன் பகுதியில் உள்ள நோவா கக்கோவ்கா நகரில் உள்ளது, இது தற்போது ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ளது.
 
டினிப்ரோ ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஆறு அணைகளில் கக்கோவ்கா அணையும் ஒன்றாகும், இது நாட்டின் வடக்கு பகுதியிலிருந்து தெற்கே பகுதியில், கடல் வரை நீள்கிறது. இந்த அணை சோவியத் காலத்தில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இது அணை மிகவும் பெரியளவில் அமைந்துள்ளது. சில இடங்களில் மறு கரையைப் பார்க்க முடியாத அளவு அணையின் பிரமாண்டம் இருப்பதால், உள்ளூர்வாசிகள் இதனை கக்கோவ்கா கடல் என்று அழைக்கிறார்கள். இந்த அணையில் அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள ’கிரேட் சால்ட்’ ஏரிக்குச் சமமான நீர் உள்ளது’ என ராய்டர்ஸ் குறிப்பிடுகிறது.
 
இந்த அணை ஆயிரக்கணக்கான மக்களுக்குக் குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. அதேபோல் கக்கோவ்கா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், இந்த அணையைத்தான் தங்களுடைய விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக நம்பியிருந்தனர். தற்போது இந்த அணை உடைக்கப்பட்டிருப்பது கக்கோவ்கா பகுதியில் நடைபெறும் விவசாயம் வரும் காலத்தில் பாதிக்கப்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
 
அதேபோல் டினிப்ரோ ஆற்றிலிருந்து, ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருக்கும் கிரைமியா என்ற பகுதிக்குத் தண்ணீர் எடுத்துச் செல்வதற்கு, கக்கோவ்கா அணை ஒரு முக்கிய கால்வாயாக விளங்குகிறது. ஆனால் தற்போது அணை உடைக்கப்பட்டிருப்பது, ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
 
2014ஆம் ஆண்டு ரஷ்யா, கிரைமியா பகுதியை ஆக்கிரமித்தபோது, யுக்ரேன் அந்த பகுதிக்குச் செல்லும் தண்ணீர் கால்வாயை முடக்கியது. இதனால் அப்போது பென்னின்சுலா பகுதியில் கடுமையான நீர் நெருக்கடி ஏற்பட்டது. அதன்பின் கடந்தாண்டு, ரஷ்யா அந்த கால்வாயை தங்களுடைய படையெடுப்பிற்குப் பிறகு மீண்டும் திறந்தது.
 
கக்கோவ்காவில் என்ன நடந்தது?
 
இன்று காலை முதல் சமூக ஊடகங்களில், கக்கோவ்கா அணையிலிருந்து அதிகப்படியான வெள்ள நீர் வெளியேறும் காட்சிகள் பரவலாகப் பகிரப்பட்டு வந்தன. வெளியேறி வரும் வெள்ள நீர் ஏற்கனவே ’போர் மண்டல’ பகுதிகளை எட்டிவிட்ட நிலையில், தொடர்ந்து கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தண்ணீரானது கெர்சன் பகுதியைச் சூழ்ந்து வருகிறது.
 
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அதிகாரிகள், அந்த பகுதியைச் சுற்றியிருந்த மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தினர்.
 
குறிப்பாக அணையிலிருந்து 50 மைல் தொலைவிற்கும் குறைவான தூரத்தில் வசிக்கும் மக்கள், முதற்கட்டமாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.
 
யுக்ரேனின் தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய, கெர்சன் பகுதியின் தலைமை அதிகாரி ஒருவர், “நாங்கள் காலையில் வந்து பார்க்கும்போது ஏற்கனவே 8 கிராமங்கள் தண்ணீரில் முழுவதுமாக மூழ்கிவிட்டன” என்று தெரிவித்துள்ளார்.
 
ஆபத்திலிருக்கும் 16,000க்கும் அதிகமான மக்கள், பேருந்து மற்றும் ரயில்களின் மூலம் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
இதுவரை இந்த தாக்குதல் யாரால், எதற்காக நடத்தப்பட்டது என்பது குறித்த எந்தவொரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை. ஆனால் இதற்கு முன்னதாக யுக்ரேனின் பல்வேறு பகுதிகளில் இருந்த அணைகளின் மீது ரஷ்யா ஏற்கனவே தாக்குதல் நடத்தியிருந்தது. அது அந்நாட்டில் கடுமையான வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி, மின்சார விநியோகத்தையும் சீர்குலைத்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜஸ்தானில் ரூ.500 க்கு சிலிண்டர் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்…