Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்பாப்பே அடித்த சாதனை கோல்: ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் நடந்த வரலாற்று நிகழ்வு

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2023 (14:53 IST)
பிரெஞ்சு உள்நாட்டு கால்பந்து தொடரில் கோலியாத்தாக வலம் வரும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி லீக் ஆட்டம் ஒன்றில் எஃப்.சி. நான்ட் அணியை வீழ்த்தியது. அந்த அணியின் வரலாற்றில் நட்சத்திர வீரரான எம்பாப்பே புதிய சாதனை படைத்துள்ளார்.

பிரான்சின் லீக் 1 கால்பந்து தொடரில் நட்சத்திர வீரர்கள் நிரம்பிய, பலம் வாய்ந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி எஃப்.சி.நான்ட் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இந்த ஆட்டம் பாரிசில் உள்ள பார்சி டெஸ் பிரின்ஸஸ் மைதானத்தில் நடைபெற்றது. பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் காயம் காரணமாக நட்சத்திர வீரர் நெய்மர் இடம் பெறவில்லை.

எதிர்பார்க்கப்பட்டபடி, ஆட்டம் தொடங்கியது முதலே பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் கையே ஓங்கியிருந்தது. கால்பந்து உலகின் உச்ச நட்சத்திரமான மெஸ்ஸியும் இளம் சூப்பர் ஸ்டாரான எம்பாப்பேவும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் தாக்குதல் ஆட்டத்திற்குத் தலைமை தாங்கி முன்னெடுத்தனர்.

பி.எஸ்.ஜி. அணி தொடக்கத்திலேயே தாக்குதல் பாணியைக் கையாண்டதால் எஃப்.சி.நான்ட் அணி திணறித்தான் போய்விட்டது. 12வது நிமிடத்திலேயே மெஸ்ஸி கோல் அடித்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

அடுத்த சில நிமிடங்களிலேயே எஃப்.சி.நான்ட் அணி வீரர் ஹட்ஜம் சுய கோல் அடித்ததால் அந்த அணி மேலும் பின்னடைவைச் சந்தித்தது. பி.எஸ்.ஜி. வீரர்கள் கொடுத்த தொடர் நெருக்கடியால் திணறிப் போயிருந்த வேளையில் நேரிட்ட சிறு பிழையின் விளைவு இது.

அடுத்தடுத்து 2 கோல்களை வாங்கியதால் அதிர்ச்சியடைந்தாலும், உடனே சுதாரித்துக் கொண்ட எஃப்.சி.நான்ட் வீரர்கள் பதிலடி கொடுக்க முனைப்பு காட்டினர். முதல் 17 நிமிடங்களிலேயே 2 கோல்கள் பின்தங்கிவிட்டதால் இனி இழப்பதற்கு ஏதுமில்லை என்ற எண்ணத்தில் அந்த அணி தாக்குதல் ஆட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்தது.

எஃப்.சி.நான்ட் அணியின் முனைப்பான ஆட்டத்திற்கு வெகு விரைவில் பலன் கிடைத்தது. ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் லுடோவிச் ப்ளாஸ், அந்த அணிக்கான முதல் கோலை அடித்தார்.

பி.எஸ்.ஜி. கோல் கீப்பர் டான்னருமாவின் தடுமாற்றத்தால் எஃப்.சி.நான்ட் அணிக்கு இரண்டாவது கோல் கிடைத்தது. டான்னருமாவின் தடுமாற்றத்தை சாதகமாகப் பயன்படுத்தி ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் எஃப்.சி.நான்ட் வீரர் இக்னேஷியஸ் கனகோ கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வந்தார்.

அதன் பிறகு இரு அணிகளும் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கவில்லை. முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளுமே தலா இரு கோல்களை அடித்து சமநிலையில் இருந்தன. பந்து அதிக நேரம் பி.எஸ்.ஜி. வசம் இருந்தாலும் அந்த அணியால் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்க முடியவில்லை.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும் பி.எஸ்.ஜி. அணியின் நட்சத்திர வீரர்களான மெஸ்ஸியும் எம்பாப்பேவும் மீண்டும் தாக்குதல் ஆட்டத்தைத் தீவிரப்படுத்தினர். அலையலையாகச் சென்று எஃப்.சி. நான்ட் அணியின் கோல் கம்பத்தை முற்றுகையிட்டனர்.

பி.எஸ்.ஜி. வீரர்களின் முயற்சிக்கு சில நிமிடங்களில் பலன் கிடைத்தது. ஆட்டத்தின் 60வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பி.எஸ்.ஜி. அணி கோலாக்கியது. எஃப்.சி.நான்ட் கோல் கம்பத்திற்கு வலது பக்கமிருந்து எம்பாப்பே தட்டிக் கொடுத்த பந்தை, சக வீரரான டேனிலோ பெரெரா தலையால் முட்டி கோலாக்கினார்.

அடுத்த இரண்டாவது நிமிடத்திலேயே பி.எஸ்.ஜி. அணிக்கு மேலும் ஒரு கோல் வாய்ப்பு கிடைத்தது. எஃப்.சி.நான்ட் அணியின் கோல் கம்பத்திற்கு வெகு அருகில் அந்த அணியின் தற்காப்பு வீரரான ஹட்ஜம், எதிரணியைச் சேர்ந்த நார்டி முகீலியை ஃபவுல் செய்ய, பி.எஸ்.ஜி. அணிக்கு பெனால்டி வாய்ப்பை நடுவர் வழங்கினார். இதையடுத்து, சாதனை கோலை அடிக்க நட்சத்திர வீரர் எம்பாப்பே தயாரானார்.

ஆனால், ஒரு நிமிடத்திற்கும் மேலாக நீடித்த வீடியோ ரிவியூ முடிவில் பி.எஸ்.ஜி. அணிக்கு தரப்பட்ட பெனால்டி வாய்ப்பு திரும்பப் பெறப்பட்டு, ஃப்ரீ கிக் வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டது. இதனால், எம்பாப்பேவின் சாதனை கோல் தள்ளிப்போனது. எஃப்.சி.நான்ட் வீரர் ஹட்ஜமை மஞ்சள் அட்டை காண்பித்து நடுவர் எச்சரித்தார்.

அடுத்த சில நிமிடங்களிலேயே எஃப்.சி.நான்ட் வீரர் ஆன்ட்ரே ஜிரோட்டோவும் முரட்டு ஆட்டத்திற்காக மஞ்சள் அட்டை பெற்றார். எஃப்.சி.நான்ட் அணி பதில் கோல் அடித்து ஆட்டத்தை மீண்டும் சமநிலைக்குக் கொண்டு வர தீவிரமாக முனைப்பு காட்டியது. இதனால், அவ்வப்போது முரட்டு ஆட்டமும் தலைதூக்கியது.

ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் எஃப்.சி.நான்ட் அணி வீரர் இக்னேஷியஸ் கனகோ அடித்த பந்து சில அங்குல இடைவெளியில் கோல் கம்பத்திற்கு வெளியே சென்றது. கடைசி நிமிடங்களில் வீரர்களை மாற்றியும், தாக்குதல் ஆட்டத்தைத் தீவிரப்படுத்தியும் அந்த அணி கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கவில்லை.

ஆனால், ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த அந்த வரலாற்று நிகழ்வு கடைசி நேரத்தில் நிகழ்ந்தது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில், 92வது நிமிடத்தில் எம்பாப்பே கோலடித்து அசத்தினார். பெம்பலே பாஸ் செய்த பந்தை எஃப்.சி.நான்ட் கோல் கீப்பரை ஏமாற்றி இடது காலால் எம்பாப்பே அபாரமாக கோலடித்தார்.

பிரெஞ்சு உள்நாட்டு கால்பந்து தொடரான லீக் ஒன்றில் 2017ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் எம்பாப்பேவுக்கு இது 201வது கோலாக அமைந்தது. இதன் மூலம், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 200 கோலடித்து முதலிடத்தில் இருந்த எடிசன் கவானியை முந்தி அவர் முதலிடம் பிடித்தார்.

24 வயதே நிரம்பிய எம்பாப்பே, கால்பந்து உலகின் முன்னணி நட்சத்திரமாக ஏற்கெனவே உருப்பெற்றுவிட்டார். லீக் 1 தொடரில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள அவர், கடந்த 4 தொடர்களிலும் அதிக கோலடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். நடப்புத் தொடரிலும் 30 கோல்கள் அடித்திருப்பதுடன், 8 கோல்களுக்கு உறுதுணையாகவும் இருந்துள்ளார்.

பிரான்ஸ் தேசிய அணிக்காக 2 உலகக்கோப்பைகளில் பங்கேற்றுள்ள எம்பாப்பே, இரு முறையும் இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளார். 2018ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றுள்ள அவர், கத்தாரில் அண்மையில் நடந்து முடிந்த உலகக்கோப்பையில் அர்ஜென்டினாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

அந்த உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்து கோல்டன் பூட் விருதையும் அவர் கைப்பற்றினார். இன்றைய கால்பந்து வீரர்களில் அதிக மதிப்பு மிக்க வீரர்களில் முதன்மையானவராக எம்பாப்பே திகழ்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பர்ஸ் திருடு போகவே இல்லை: பாஜக விளக்கம்..!

இந்த ஆண்டு மிகச்சிறந்த மழை காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

மதுரை காவல்நிலையம் அருகே துண்டிக்கப்பட்ட தலை.. உடல் எங்கே? அதிர்ச்சி சம்பவம்..!

இன்று மாலை மற்றும் இரவில் 19 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..!

பிரியங்காவை பார்க்க வந்த கூட்டம், ஓட்டு போட வரவில்லையா? வயநாட்டில் வாக்கு சதவீதம் குறைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments