Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுக் கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த விண்கல் - சுவாரசிய தகவல்கள்

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (07:57 IST)
விண்கல் ஒன்று இந்தோனீசியாவைச் சேர்ந்த ஒருவரின் வீட்டின் கூரையைப் பிய்த்துக் கொண்டு விழுந்தது அது அவரின் வாழ்க்கையை மாற்றியது என்ற செய்தியை சில தினங்களுக்கு முன் நாம் கேள்விப் பட்டிருப்போம்.
 
அதுவும் அந்த விண்கல்லின் மதிப்பு (1.8 மில்லியன்) 18 லட்சம் அமெரிக்க டாலர்கள் என்றும் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்திருந்தன.
 
அவர் அமெரிக்கர்களிடம் குறைந்த விலைக்கு விற்று ஏமாந்துவிட்டார் என்பது போன்ற செய்தியும் வெளியானது.
 
ஆனால் இவை இரண்டுமே உண்மையல்ல. அந்த விண்கல்லின் மதிப்பு மில்லியன் கணக்கிலும் இல்லை. யாரும் ஏமாற்றப்படவும் இல்லை.
 
வீட்டின் மேல் விழுந்த பாறை…
 
முதலில் என்ன நடந்தது எனப் பார்ப்போம். அது புத்தகங்களில் படிக்கும் ஒரு கதையைப் போன்று இருக்கலாம். ஆனால் ஆச்சரியமான ஒரு கதைதான்.
 
இந்தோனீசியாவின் சுமத்ரா தீவைச் சேர்ந்த ஜோஷ்வா ஹுடாகாலுங் ஒரு சவப்பெட்டி செய்யும் தொழிலாளி. ஆகஸ்டு மாதத்தின் ஒரு தினத்தில் அவர் தனது வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் வீட்டுக் கூரையின் மீது ஏதோ விழுவதை போன்ற மிகப்பெரிய சத்தம் ஒன்று கேட்டுள்ளது. அந்த சத்தம் கூரையைப் பிய்த்துக் கொண்டு சில நொடிகளில் வீட்டினுள் பாய்ந்தது.
 
முதலில் அது என்ன என்று பார்க்க பயந்த ஜோஷ்வா, தனது வீட்டு கூரை மீது ஏதோ ஒரு வித்தியாசமான பொருள் ஒன்று இருப்பதைப் பார்த்தார். பாய்ந்து வந்த பாறை அவர் வீட்டின் கூரையை பிய்த்துக்கொண்டு , வீட்டின் மண் தரையில் 15 செ.மீ ஆழத்தில் புதைந்தது.
 
அதன் பிறகு ஜோஷ்வா அதைத் தோண்டி எடுத்தார் அதன் எடை சுமார் 2 கிலோ இருந்தது.
"நான் அதைத் தூக்கியபோது, அது சூடாக இருந்தது," என பிபிசி இந்தோனீசிய சேவையிடம் பேசிய ஜோஷ்வா தெரிவித்தார்.
 
அந்த அதிசய கல்லைப் பார்த்த ஜோஷுவா அதனை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அந்த செய்தி இந்தோனீசியாவைத் தாண்டி சர்வதேச அளவில் பரவியது.
 
விண்கற்கள் 400 கோடி ஆண்டுகளுக்கும் முற்பட்டவை. அதாவது அவற்றின் வயது பூமியின் வயதைவிட அதிகம்.
 
ஜோஷ்வாவுக்கு கிடைத்த விண்கல் குறித்த செய்தி அமெரிக்காவையும் எட்டியது. ஆனால் அந்த சமயத்தில் கொரோனா முடக்கம் தொடங்கிவிட்டிருந்தது. எனவே அமெரிக்காவில் இதை வாங்க விருப்பப்பட்டவர்கள் இந்தோனீசியாவில் உள்ள விண்கல் ஆர்வலர் ஜேர்ட் காலின்ஸின் உதவியை நாடினர். அதன்பின் ஜேர்ட் அந்த விண்கல்லை ஆய்வு செய்தார்.
 
"சூரியக் குடும்பம் தோன்றிய ஆரம்பக் கட்டத்தில் உருவான ஒன்றைக் கையில் ஏந்தியது அற்புதமான ஓர் அனுபவத்தைத் தந்தது," என அவர் பிபிசியிடம் தெரிவித்தார். "அதன் வாசனை வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்றாக இருந்தது," ஜேர்ட்.
 
அதன்பின் ஜேர்ட் இருதரப்புக்கும் பாலமாக இருந்து அந்த விண்கல் விற்பனையானது. அதற்கு சரியான தொகையும் கொடுக்கப்பட்டது. ஆனால் செய்திகளில் இடம்பிடித்த அளவுக்கு இல்லை.
 
அது ஒரு தங்கச் சுரங்கம்
 
பின் விண்கல்லின் மதிப்பு அத்தனை லட்சங்கள் எனக் கூறப்பட்டது எவ்வாறு? ஜோஷ்வாவின் வீட்டில் விழுந்த 2 கிலோ பெரிய கற்களை தாண்டி சிறு சிறு கற்களும் அதனுடன் விழுந்தன. அந்த கற்களும் விற்கப்பட்டன. அதில் இரண்டு அமெரிக்காவின் ஈபே தளத்தில் விற்பனைக்கு பதியப்பட்டது.
 
அதில் 0.3 கிராம் இருக்கும் ஒரு கல்லின் விலை 285 அமெரிக்க டாலர்கள் எனவும், 33.68 கிராம் இருக்கும் கல்லின் விலை 2,120 அமெரிக்க டாலர்கள் எனவும் பதியப்பட்டிருந்தது. இந்த இரு விலையையும் கூட்டி ஒரு கிராமிற்கு எவ்வளவு என்று பார்த்தால் ஒரு கிராம் விண்கல்லின் விலை 860அமெரிக்க டாலர்கள் என்று வருகிறது. எனவே கண்டறியப்பட்ட முழு விண்கற்களின் எடையை இதை கொண்டு பெருக்கி செய்திகளில் 18 லட்ச அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான விண்கற்கள் எனக் கூறப்பட்டுவிட்டது.
 
விண்கல்லின் மதிப்பு இத்தனை லட்சங்களா என அரிசோனாவில் உள்ள பூமி மற்றும் விண்வெளி ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கார்வியிடம் கேட்டபோது, இந்த செய்திகள் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை தந்தன. பூமியைக் காட்டிலும் பழமையான ஒன்றை தனதாக்கி கொள்ள மக்கள் விரும்புவர் அதற்காக சிறிய விண்கல்லை அதிகம் விலை கொடுத்து வாங்கலாம் , ஆனால் இத்தனை விலையில் அல்ல என்கிறார் கார்வி.
 
அப்படியானால் விண்கற்களின் விலையை நிர்ணயிக்க முடியுமா? என்றால் முடியாது என்றே பதில் வருகிறது. சுமத்ராவில் கண்டறியப்பட்ட விண்கல் 70-80 சதவீதம் கலி மண்ணால் ஆனது. அதில் சிறிது இரும்பு, ஆக்ஸிஜன், அலுமினியம், கால்ஷியம், மெக்னீசியம் ஆகியவை உள்ளன. இதன் மதிப்பு ஒரு டாலர் இருக்கலாம் அல்லது அதிகபட்சம் இரு டாலர்கள் இருக்கலாம் என்கிறார் கார்வி.
 
அது புவியின் வளிமண்டலத்தை அடையும் பொழுது ஒரு மீட்டர் நீளம் இருந்திருக்கலாம். அதன்பின் அது உடைந்து ஜோஷுவாவின் வீட்டு கூரை மீது விழுந்திருக்கலாம் என்கிறார் கார்வி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரியனார் கோவில் ஆதீனம் திருமண சர்ச்சை - மடத்தில் இருந்து வெளியேறியது ஏன்?

மருத்துவர் தாக்குதல் எதிரொலி: அரசு மருத்துவமனைகளில் புதிய கட்டுப்பாடு..!

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தா பிரச்சினை இல்ல.. தேர்தலில் போட்டியிடலாம்! - சட்டத்தை மாற்றிய சந்திரபாபு நாயுடு!

உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? உடனே இதை செய்யுங்கள்.. ஏஆர் ரஹ்மானின் பதிவு..!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி.. என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments