Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நரேந்திர மோதியின் திடீர் டிவி பேட்டி: "தேர்தலுக்காக நடந்த மறைமுக பிரசாரம்" - விமர்சிக்கும் எதிர்கட்சிகள்!

நரேந்திர மோதியின் திடீர் டிவி பேட்டி:
, வியாழன், 10 பிப்ரவரி 2022 (09:39 IST)
இந்தியாவுக்கு வாரிசு அரசியல் மிகப்பெரிய எதிரி என்று பிரதமர் நரேந்திர மோதி ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
 
அந்த செய்தி முகமையின் ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷுக்கு அவர் அளித்துள்ள நேர்காணல் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகின. உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 
இதையொட்டி பிப்ரவரி 8ஆம் தேதி மாலையில் இருந்து 48 மணி நேரத்துக்கு வாக்குப்பதிவு நடைபெறம் மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை நிகழ்வுகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
webdunia
இந்த நிலையில், தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோதி மிகவும் திட்டமிட்டு இப்படியொரு நேர்காணலை வழங்கியிருக்கிறார் என்று அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.இந்திய பிரதமர் மோதி பொதுவாக செய்தி ஊடகங்களுக்கு நேரலை பேட்டிகளையும் செய்தியாளர்கள் சந்திப்புகளுக்கு வந்து ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில்களை அளிப்பதையும் தவிர்ப்பவர்.
 
அதே சமயம், தேர்தல் காலங்களில், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பதிவு செய்யப்பட்ட அல்லது திட்டமிடப்பட்ட நேரலை நிகழ்ச்சி மற்றும் ஏஎன்ஐ செய்தி தொலைக்காட்சிக்கு பதிவு செய்யப்பட்ட நேர்காணலை பிரதமர் மோதி வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
 
அந்த வகையில் பிரதமர் பிப்ரவரி 9ஆம் தேதி அளித்துள்ள நேர்காணல்தான் தற்போது சர்ச்சையாகியிருக்கிறது.
 
பிரதமரின் செயல்பாடு தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் உள்ளதா என்று அதன் அதிகாரிகளிடம் கேட்டபோது, தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் குறிப்பிட்ட கட்சிக்கோ வேட்பாளருக்கோ ஆதரவாக பேசினால்தான் அது விதிமீறலாகும். நாட்டின் பிரதமராக அவர் பொதுவான விஷயங்களை பேசும்போது அதை விதி மீறலாக கருத்தில் கொள்ள முடியாது என்று அதிகாரிகள் கூறினர்.
 
பிரதமர் தமது நேர்காணலின்போது உத்தர பிரதேச மாநிலத்தில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி மக்கள் ஆதரவுடன் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என்று கூறினார். மேலும், சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் குண்டர்கள் அதிகமாக நடமாடுவார்கள் என்றும் யோகி ஆட்சியில் குண்டர்களின் நடமாட்டம் ஒடுக்கப்பட்டு விட்டதாகவும் மோதி தெரிவித்தார்.
 
வாரிசு அரசியல் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில், தமிழ்நாடு, ஹரியாணா என பல்வேறு மாநிலங்களிலும் வாரிசு அரசியல் இருப்பதாக மோதி குறிப்பிட்டார்.
 
வாரிசு அரசியல் பெரிய ஆபத்து
"ஒரு கட்சி ஒரே குடும்பத்தால் தலைமுறை தலைமுறையாக நடத்தப்படும்போது, அங்கு வாரிசு அரசியல் மட்டுமே இருக்கும், ஆக்கம் தரும் செயல்கள் இருக்காது. ஜம்மு-காஷ்மீர் முதல் பல மாநிலங்களில் இரு வேறு குடும்பங்கள் ஆட்சி செலுத்தும் காட்சிகளை பார்க்க முடிகிறது. ஹரியாணா, ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இதை காணலாம். வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் பெரிய எதிரி" என பிரதமர் மோதி தெரிவித்தார்.
 
நாட்டில் மக்களை அழிப்பதற்காக திறக்கப்படும் அனைத்து வழிகளையும் மூடுவேன் என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
 
செய்தி நிறுவனமான ஏஎன்ஐக்கு அளித்த நீண்ட பேட்டியில், பாஜக கூட்டுத் தன்மையில் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும், கட்சி பல தோல்விகளையும் வெற்றிகளையும் கண்டுள்ளது என்றும் மோதி குறிப்பிட்டார்.
 
"உத்தர பிரதேசத்தில் 2014ல் வெற்றி பெற்றோம், அதன்பின் 2017 மற்றும் 2019ல் வெற்றி பெற்றோம். ஒருமுறை வெற்றி பெற்றவரால், இரண்டாவது முறையாக தனது வெற்றிக் கதையை மீண்டும் நிலைநாட்ட முடியாது என்ற பழைய கோட்பாட்டை உத்தர பிரதேசம் நிராகரித்துள்ளது. 2022ஆம் ஆண்டிலும் உத்தர பிரதேச மக்கள் எங்களை அரவணைப்பார்கள்," என்றார் மோதி.
 
"தற்போது ஐந்து மாநிலங்களிலும் பாஜகவுக்கு ஆதரவாக மிகப்பெரிய அலை வீசுவதை நான் காண்கிறேன். எல்லா இடங்களிலும் பெரும்பான்மை பெறுவோம். இந்த மாநிலங்களில் மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கும்," என்று மோதி கூறினார்.
 
தனது நேர்காணலின் முதல் 20 நிமிடங்களில் பல கேள்விகளுக்கும் உத்தர பிரதேச தேர்தலை மையப்படுத்தியே அவர் பதில்களை அளித்தார்.
 
எதிர்வினையாற்றிய நெட்டிசன்கள்
 
லக்கிம்பூர் கேரி வழக்கில் விவசாயிகள் மீது வாகனம் ஏற்றி சிலர் பலியான சம்பவத்தை விசாரிக்க உச்ச நீதிமன்றம் எந்தக் குழுவை அமைக்க விரும்புகிறதோ அல்லது எந்த நீதிபதியை கொண்டு விசாரிக்க விரும்புகிறதோ, அந்த குழு விசாரிக்கலாம் என்று மாநில முதல்வரே கூறியிருக்கிறார் என்று பிரதமர் மோதி குறிப்பிட்டார்.
 
அவரது நேர்காணல் ஏஎன்ஐ சமூக ஊடக பக்கத்தில் ஒளிபரப்பான போது, சிலர் லக்கிம்பூர் கேரியில் வாகனம் வேகமாக விவசாயிகள் மீது மோதும் காட்சியை பகிர்ந்து இதை மறக்க மாட்டோம் என்று குறிப்பிட்டிருந்தனர்.
 
நாடாளுமன்றத்தில் ஜவாஹர்லால் நேரு மீது பிரதமர் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு ராகுல் காந்தி எதிர்வினையாற்றியது பற்றி ஸ்மிதா பிரகாஷ் கேள்வி எழுப்பினார்.
 
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசியபோது ​​வேலையில்லா திண்டாட்டம், இந்தியா-சீனா பிரச்னை குறித்த ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், காங்கிரஸ் கட்சியை பிரதமர் தாக்கிப் பேசுவதிலேயே கவனம் செலுத்தியதாக எதிர்கட்சிகள் விமர்சிப்பது பற்றி பிரதமரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பிரதமர், "நாங்கள் யாரையும் தாக்கிப் பேசவில்லை. விவாதம் செய்வதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். சில சமயங்களில், விவாதங்கள், குறுக்கீடுகள் போன்றவை நாடாளுமன்றத்தில் நடப்பது சகஜம். அதை நான் வரவேற்கிறேன். அதனால்தான் (இந்த விஷயங்களில்) நான் கோபப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை."
 
"நான் ஒவ்வொரு விஷயத்திலும் உண்மைகளை அடிப்படையாக வைத்துப் பேசினேன். சில விஷயங்களில், எங்கள் வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் விரிவான பதில்களை அளித்துள்ளன. தேவையான இடங்களில் நானும் பேசியுள்ளேன். நான் எப்படி பதிலளிப்பது? அவையில் பேசுவதை கேட்காத மற்றும் அவைக்கு வந்து அமராத ஒரு நபரிடம் எப்படி பேசுவது?" என மோதி பதிலளித்தார்.
 
இந்த நேர்காணல் ஒளிபரப்பு முடிந்த சில நிமிடங்களிலேயே பிரதமரின் பேட்டிக்கு எதிர்வினை கிளம்பியது.
 
அரசியல் ஆய்வாளர் சஞ்சய் ஜா, "தேர்ந்தெடுத்த வார்த்தைகளை மிகவும் நேர்த்தியான வகையில் தயாரித்துக் கொண்டு பேசுவதில் நரேந்திர மோதி வல்லவர். மத்தியில் 2014இல் அவரது தலைமையில் அரசு ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்தியா ஏதோ வளம் பெற்றதாக அவர் நேர்காணலில் பேசுகிறார். ஆனால், அது அவருக்கு முன்பும் ஆட்சியில் இருந்தவர்கள் வழங்கிய பங்களிப்பின் தொடர்ச்சி என்பதை உணர வேண்டும்," என்று கூறினார்.
 
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி ஜவஹர் சிர்கார், "ஆட்சியின் செயல்பாடு பற்றி விவாதிக்க விரும்புவதாக மோதி நேர்காணலில் கூறுகிறார். அந்த நேர்காணலில் கூட தமக்கு அனுசரணையான கேள்விகளை கேட்டக் கூடிய தொலைக்காட்சியை தேர்வு செய்து அவர் பதில்களை வழங்குகிறார். தனது ஆட்சிக்காலத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பை கூட நடத்தாத மோதி பேச்சுவார்த்தை, விவாதம் பற்றி எல்லாம் பேசுகிறார்," என்று சாடினார்.
 
உத்தர பிரதேச தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு பிரசாரம் ஓய்ந்த நிலையில், மறைமுகமாக பரப்புரை செய்ய தொலைக்காட்சியை மோதி பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும் ஜவஹர் சிர்கர் குற்றம்சாட்டினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிகரிக்கும் ஒருநாள் உயிரிழப்புகள்; குறையும் பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா!