பிரமிளா கிருஷ்ணன்
தமிழகம் முழுவதும் சுயஉதவிக் குழுக்களிலுள்ள பெண் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்காக மாதம் ஒருமுறை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் சந்தை வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்துவைத்துள்ளது.
குறைந்தபட்சம் ஐந்து லட்சத்திலிருந்து பத்து லட்சம் வரை பொருட்கள் விற்பனையாகும் சந்தையாக வளர்ச்சி பெற்றுள்ளது இந்த மாதசந்தை.
பெரும்பாலும் பாரம்பரிய உணவு மற்றும் நுகர்வோர் பொருட்களை விற்கும் எல்லா வியாபாரிகளும் பெண்களாக உள்ளதே இதன் சிறப்பம்சம்.
கிராமங்களில் சந்தையில் பொருட்கள் விற்கும் வியாபாரிகள், வாங்கவருவோரிடம் நலம் விசாரித்து, முன்னர் வாங்கிய பொருட்களின் தரம் குறித்துப் பேசி திறனாய்வு பெறுகின்ற வழிமுறையில் இந்த மாதச்சந்தை செயல்படுகிறது.
கொடைக்கானலில் இருந்து வரும் விவசாயி ராணியின் வாடிக்கையாளர்கள் பலர் முன்னரே சொல்லிவைப்பதால், அவர்களுக்காக தனி பைகளை அவர் எடுத்துவைத்துவிடுகிறார். மூன்று வகை அவகடோ பழங்கள், நாட்டு ரக அவரைக்காய், கேரட், ஜாம் தயாரிக்க வகைவகையான பழங்கள் என பலவற்றை அடுக்கிவைக்கிறார் ராணி.
ஒவ்வொரு மாதமும், முதல் வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தை நடைபெறும் என்பதை தெரிந்துகொண்ட வாடிக்கையாளர்கள் பலர், ஒரு மாதத்திற்கு தேவைப்படும் சமையல் எண்ணெய், சிறுதானிய மாவு பொருட்களை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து வாங்கிக்கொள்கிறார்கள்.
''முகவர் யாரும்இல்லாமல் நாங்கள் தயாரிக்கும் பொருட்களை நாங்களே விற்பதால், வாடிக்கையாளர்கள் எதை விரும்புகிறார்கள் என தெளிவாக அவர்களுக்கு தெரிகிறது. யாருக்கும் தரகு தொகை கொடுக்காமல் எங்கள் உழைப்புக்கு ஏற்ப எங்களுக்கு வருமானம் கிடைக்கிறது. நெல்லிக்கனியில் இருந்து தயாரிக்கும் பழச்சாறு, வற்றல், மிளகாய்பொடி, சூரணம் என பத்துவிதமான பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது,''என்கிறார் தஞ்சாவூரில் இருந்து வந்துள்ள விவசாயி கவிதா.
நாட்டு ரக சோளம், பீர்க்கங்காய், சுரக்காய், கிழங்கு வகைகள், தேங்காய், கீரை வகைகள் விரைவாக விற்பனையாகிவிடுகின்றன. சந்தை நேரத்தில் பாரம்பரிய உணவு சமையல் நிகழ்ச்சி, இயற்கை மருத்துவரோடு உரையாடல் போன்ற நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன.
பெருங்குடியைச் சேர்ந்த கயல்விழி கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து சந்தைக்கு வந்து அரிசியையும், சிறுதானியங்களையும் வாங்கிக்கொள்கிறார். ''ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை சந்தையில் வாங்கிக்கொள்கிறேன். சூப்பர்மார்க்கெட் செல்லும் பழக்கம் குறைந்துவிட்டது. நேரடியாக விவசாயிகளை பார்க்கும் அனுபவம் எனக்கு கிடைக்கிறது. என் மகளுக்கும் சந்தைக்கு போகும் அனுபவம் கிடைப்பதால் மகிழ்ச்சி,'' என்கிறார் கயல்விழி.
சென்னை வாடிக்கையாளர்களின் வரவேற்பை தொடர்ந்து, வெறும் இரண்டு நாட்கள் மட்டும் நடைபெற்ற சந்தை மூன்று நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. அடுத்து நான்கு வாரமும் நடக்கும் வாரசந்தையாக மாறும் வாய்ப்பும் உள்ளது என்கிறார்கள் இந்த சந்தையை நடத்தும் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள்.
''பல ஊர்களில் இருந்துவந்து பெண்கள் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். இந்த சந்தை பெண் வியாபாரிகளுக்கு ஊக்கம் தருவதாக அமைகிறது. வாடிக்கையார்கள் நேரடியாக பொருட்களை வாங்கிக்கொள்வதால், மனநிறைவோடு செலவிடுகிறார்கள். கிராமங்களில் சந்தையைப் பார்த்த அனுபவம் நகர மக்களுக்கு கிடைக்கும் வகையில் கடைகளை நடத்துகிறோம்,'' என்கிறார் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் செயலர் செந்தில்குமார்.
''நகரத்தில் வசிப்போர் பலருக்கு இயற்கை முறையில் விளைந்த பொருட்களை வாங்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், உண்மையில் வெளிச்சந்தையில் கிடைக்கும் பொருள் ரசாயன உரமில்லாமல் தயாரிக்கப்பட்டது தானா என்ற சந்தேகம் இருக்கும். எங்கள் சந்தைக்கு வரும் விவசாயிகளின் தோட்டத்திற்கு நேரடியாக சென்று எங்கள் அதிகாரிகள் பார்வையிட்டு சான்றளிக்கும் இயற்கை விவசாய பொருட்களை மட்டும் இங்கு விற்பனை செய்வதால், வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது,''என்கிறார் செந்தில் குமார்.
வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் இடைவெளியை குறைக்க சென்னையில் உள்ள கல்லூரி மாணவிகளை பொறுப்பாளர்களாக இணைத்துள்ளதாக கூறுகிறார் செந்தில் குமார். ''வாடிக்கையாளர்களின் கருத்துக்களை மாணவிகள் பெறுகிறார்கள். விவசாயிகளிடம் அவர்களின் பொருட்களை எப்படி விற்கலாம் என விளக்குகிறார்கள். வடிக்கையார்களுக்கு சந்தையில் உள்ள பொருட்களை பற்றி சொல்கிறார்கள். இவ்வாறு தொழில் முனைவோருக்கு மாணவிகளும் உதவுகிறார்கள்,''என்கிறார் அவர்.