இந்திய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணைய பக்கங்களில் வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்துள்ளோம்.
டைம்ஸ் ஆப் இந்தியா: 'என்னை காலு என அழைத்தவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும்' - விஸ்வரூபம் எடுக்கும் நிறவெறி புகார்
ஐபிஎல் போட்டிகளில் விளையாடியபோது தன்னையும், இலங்கை வீரர் திசரே பெரேராவையும் சிலர் 'காலு' என்று அழைத்ததாக சமூகவலைத்தளத்தில் கடந்த வார இறுதியில், மேற்கிந்திய தீவுகள் அணிகளின் முன்னாள் கேப்டனும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்அணியின் வீரருமான டேரன் சமி தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது என 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளேடு தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமையன்று 'காலு' என்று தன்னை அழைத்த அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டேரன் சமி இன்ஸ்டாகிராம் வீடியோவில் குறிப்பிட்டார்.
இந்நிலையில், சமூகவலைதளவாசிகள் சிலர், இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவின் பழைய இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றை எடுத்து சர்ச்சையை பெரிதாக்கி உள்ளனர்.
அந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் இஷாந்த் சர்மா சர்ச்சைக்குரிய அந்தச் சொல்லை டேரன் சமிக்குப் பதிலாகப் பயன்படுத்தியது தெரியவந்தது.
இஷாந்த் சர்மாவின் பதிவு
2014-ல் இஷாந்த் சர்மா வெளியிட்ட அந்தப் பதிவில், "நான், புவி, காலு, மற்றும் சன் ரைசர்ஸ்" என்று குறிப்பிட்டு பகிர்ந்த புகைப்படத்தில் இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், டேல் ஸ்டெய்ன், இடையே நிற்கும் டேரன் சமியை 'காலு' என்று குறிப்பிட்டுள்ளார்.
இஷாந்த் சர்மாவின் பழைய பதிவை இப்போது சிலர் பகிர்ந்துள்ளதால், இந்த பிரச்னை மேலும் பெரிதாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.