உலகத்துடன் நெருங்கி வரும் தனது முயற்சிகளில் மிகப்பெரிய, பிரமாண்ட திட்டமான புதிய பட்டுப்பாதை என்று வர்ணிக்கப்படும் பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ் (பி.ஆர்.ஐ) திட்டத்தின் 10-வது ஆண்டை சீனா வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறது.
இத்திட்டத்தின் 10-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் தவிர தலிபான் அரசாங்கமும் இதில் கலந்துகொண்டுள்ளனர். சீன ஊடகங்களில் இத்திட்டத்தின் சாதனைகளைப் பற்றிய செய்திகள் நிரம்பி வழிகின்றன. சீன அரசுத் தொலைக்காட்சியில் இதுகுறித்து ஆறு பாகங்கள் கொண்ட ஆவணப்படம் தயாரித்திருக்கிறது.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் முக்கியமான கொள்கையான பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ், முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள் மூலம் சீனாவை உலகத்துடன் நெருக்கமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏறக்குறைய 150 நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பெருந்தொகையான பணத்தின் மூலம், உலகையே மாற்றிவிட்டதாக சீனா கூறுகிறது. அதில் தவறில்லை.
ஆனால், பெய்ஜிங்கின் மாபெரும் சூதாட்டம் என்று பார்க்கப்படும் இத்திட்டம், எதிர்பார்த்த விதத்தில் முழுமையாகச் செல்லவில்லை. இத்தனை செலவு செய்ததற்கான பலனளித்ததா இந்த பிரமாண்ட திட்டம்?
புதிய பட்டுப் பாதை: 150 நாடுகளை இணைத்து உலகையே வளைக்கும் சீனாவின் கனவு நனவானதா?
2013-ஆம் ஆண்டு புதிய பட்டுப்பாதை எனப்படும் பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ் அறிவிக்கப்பட்டது. அப்போதிருந்து இது பண்டைய உலகின் பட்டுப்பாதையுடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறது. சீனா மாபெரும் லட்சியங்களைக் கொண்டிருந்தது என்பது அப்போதே தெளிவானது.
பெல்ட் என்பது மத்திய ஆசியா வழியாகவும், தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா வழியாகவும் சீனாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் தரைவழிப் பாதைகளைக் குறிக்கிறது. அதே சமயம் ரோடு என்பது ஆசியா வழியாக ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து பெரிய துறைமுகங்களுடன் சீனாவை இணைக்கும் கடல் வலையமைப்பைக் குறிக்கிறது.
இது வெளிநாடுகளில் உள்கட்டமைப்பில் செய்யப்பட்ட பெரும் அரசு முதலீட்டுடன் தொடங்கியது. இத்திட்டத்தின் மதிப்பீடான 83 லட்சம் கோடி ரூபாயில் (1 லட்சம் கோடி அமெரிக்க டாலர்) பெரும்பாலான நிதி ஆற்றல் மற்றும் போக்குவரத்துத் திட்டங்களான மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ரயில் சேவைகள் போன்றவற்றில் செலவிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய நிதியை கொட்டி சீனா 10 ஆண்டுகளுக்கு முன்பு சீனா தொடங்கிய பிரமாண்ட திட்டம் அதன் இலக்குகளை எட்டியுள்ளதா? உலகின் தலைமைப் பீடத்தை பிடிக்க சீனாவால் முடியுமா?
இத்திட்டத்தின் மதிப்பீடான 83 லட்சம் கோடி ரூபாயில் பெரும்பாலான நிதி ஆற்றல் மற்றும் போக்குவரத்துத் திட்டங்களான மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ரயில் சேவைகள் போன்றவற்றில் செலவிடப்பட்டுள்ளது
சீனாவுக்கு இது பொருளாதார வெற்றியா?
சீனா இத்திட்டத்தைப் பொருளாதார வெற்றி என்று கூறியது. இந்த முதலீடுகள் வளர்ச்சியைத் தூண்டும் என்று மற்ற நாடுகளுக்குச் சொன்னது. அதே சமயம் உள்நாட்டு மக்களிடம், இத்திட்டம் சீன நிறுவனங்களுக்கு உதவும் என்றும், பொருளாதாரத்தை உயர்த்தும் என்றும், நாட்டின் நற்பெயரை மேம்படுத்தும் என்றும் கூறியது.
ஆனால், சீன பணமான யுவானை சர்வதேசமயமாக்குதல் மற்றும் சீன நிறுவனங்களின் தேவைக்கதிகமான உற்பத்தியைச் சமாளிப்பது ஆகிய இலக்குகளை அடைவதில் இத்திட்டம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
ஆனால் சீனா வர்த்தகத்தில் பெரும் பொருளாதார லாபத்தைப் பெற்றது. பல ஒப்பந்தங்கள் எண்ணெய், எரிவாயு மற்றும் கனிமங்கள் போன்ற கூடுதல் வளங்களைப் பயன்படுத்துவதை இலகுவாக்கின. குறிப்பாக இத்திட்டத்தின் கவனம் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆகியவற்றை உள்ளடக்கியது. கடந்த பத்தாண்டுகளில் சீனா மற்றும் இத்திட்டத்தின் பிற நாடுகளுக்கிடையே சுமார் 1,580 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வர்த்தகம் செய்யப்பட்டன.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்வதும், சீனாவுக்குத் தேவையான வளங்கள் உள்ளே வருவதை எளிதாக்குவதும் ஆகும் என்று சீனா குறித்த ஆய்வுகளுக்கான மெர்கேட்டர் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் ஜேக்கப் குந்தர் கூறினார். "இது தாராளவாத வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மாற்றாக ஏற்றுமதிச் சந்தைகளை விரிவுபடுத்துவது மற்றும் மேம்படுத்துவது பற்றியது," என்கிறார் அவர்.
சீனா, மேற்கு நாடுகளுடனும் அதன் நட்பு நாடுகளுடனும் அதிக பதற்றங்களை எதிர்கொள்ளும் நேரத்தில் இது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
உதாரணமாக சோயாபீன்ஸை எடுத்துக் கொள்ளுங்கள். உலகின் மிகப்பெரிய இறக்குமதியாளராக இருக்கும் சீனா, பொருட்களைப் பெறுவதற்கு அமெரிக்காவையே பெரிதும் நம்பியிருந்தது. ஆனால் இறக்குமதிக் கட்டணம் தொடர்பாக அமெரிக்காவுடன் ஏற்பட்ட ஒரு மோதலைத் தொடர்ந்து சீனா தென் அமெரிக்காவை நோக்கித் திரும்பியது. குறிப்பாக பிரேசில். தற்போது பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ் திட்டத்தின் மூலம் தென் அமெரிக்காவிலேயே அதிக நிதியுதவியை பெறும் நாடாக பிரேசில் இருக்கிறது.
அதேபோல, மத்திய ஆசியா மற்றும் ரஷ்யாவிலிருந்து வரும் எரிவாயுக் குழாய்கள், மற்றும் ரஷ்யா, இராக், பிரேசில் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதிகள், ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா மீதான சீனாவின் சார்பைக் குறைத்துள்ளது என்று சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் (IISS) தெரிவித்துள்ளது.
பெல்ட் என்பது மத்திய ஆசியா வழியாகவும், தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா வழியாகவும் சீனாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் தரைவழிப் பாதைகள். ரோடு என்பது ஆசியா வழியாக ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து பெரிய துறைமுகங்களுடன் சீனாவை இணைக்கும் கடல் வலையமைப்பு.
புதிய பட்டுப்பாதை எனப்படுகிற பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ் மூலம் பல குறைந்த அல்லது நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு கடன் வழங்கும் முதல் நாடாக மாறிய சீனா, இப்போது உலகின் மிகப்பெரிய சர்வதேச கடன் வழங்குநராக உள்ளது.
ஆனால் சீனா உலக நாடுகளுக்கு வழங்கும் கடனின் உண்மையான அளவு என்னவென்று தெரியவில்லை. ஆனால் குறைந்தது பல லட்சம் கோடி ரூபாய்கள் என்று கருதப்படுகிறது. சீனாவின் பொது மற்றும் தனியார் கடன் வழங்குபவர்களால் வழங்கப்பட்ட பல கடன்கள் இரகசியமாக மறைக்கப்பட்டுள்ளன.
இப்போது, இலங்கை, மாலத்தீவு, லாவோஸ், கென்யா எனப் பல நாடுகள் சீனாவின் பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ் திட்டத்தின் மூலம் பெற்ற கடன் சுமையால் போராடி வருகின்றன. இது சீன அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது.
ஒரு ரியல் எஸ்டேட் நெருக்கடி மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்கள் அதிகளவில் வாங்கிய கடன் ஏற்கனவே சீனாவிற்குள் ஒரு பெரும் கடன் சிக்கலை உருவாக்கியுள்ளது. இதுவும் பல லட்சம் கோடி ரூபாய்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தைய மந்தமான பொருளாதாரம் மற்றும் இளைஞர்களின் வேலையின்மை போன்றவை இந்த சிக்கலை மேலும் மோசமாக்குகின்றன.
சீனா பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ் கடன்களை மறுசீரமைத்துள்ளது. காலக்கெடுவை நீட்டித்தது மற்றும் கடன் வாங்குபவர்கள் சரியான நேரத்தில் பணம் செலுத்த உதவுவதற்காக சுமார் 20,000 லட்சம் கோடி 20 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. ஆனால் கடனை ரத்து செய்ய மறுத்துவிட்டது.
பாகிஸ்தானின் குவாடாரில் உள்ள துறைமுகம், மலாக்கா ஜலசந்தியை கடந்து ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கை அடைய சீனாவை அனுமதிக்கிறது.
சீனா கடன் வலை ராஜதந்திரத்தில் ஈடுபடுகிறதா?
பசுமை நிதி மற்றும் மேம்பாட்டு மையத்தின் (GFDC) நிறுவன இயக்குநர் கிறிஸ்டோப் நெடோபில், சீனாவின் உள்நாட்டுப் பொருளாதாரப் பிரச்சனைகள் முழுமையாகத் தீர்க்கப்படாத நிலையில், அது ஒரே நேரத்தில் வெளிநாடுகளில் கடன் தள்ளுபடியில் ஈடுபடுவதோ, அதை ஊக்குவிப்பதோ உள்நாட்டில் பெரும் அரசியல் சவாலாக இருக்கும், என்கிறார். இந்நிறுவனம் சீனாவின் பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ் செலவினங்களைக் கண்காணிக்கிறது.
இந்தச் சிக்கல் பெய்ஜிங்கின் நற்பெயரைக் கெடுத்துவிட்டது. விலையுயர்ந்த திட்டங்களில் கையெழுத்திட ஏழை நாடுகளை கவர்ந்திழுப்பதன் மூலம் சீனா கடன் வலை இராஜ தந்திரத்தில் ஈடுபடுவதாகச் சில விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பெய்ஜிங் இறுதியில் பிணையமாக வைக்கப்பட்ட சொத்துகளின் கட்டுப்பாட்டை பெற முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். இலங்கையின் சர்ச்சைக்குரிய ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் தொடர்பாக அமெரிக்காவின் குற்றச்சாட்டு இதுவாகும்.
ஆனால், பல ஆய்வாளர்கள் இக்குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் இல்லை என்று வாதிடுகின்றனர்.
இருப்பினும் பெய்ஜிங் இந்த பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ் திட்டத்தைப் பயன்படுத்தி மற்ற நாடுகளின் இறையாண்மையைக் குறைப்பற்கு முயல்கிறது என்ற அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் 10-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் மாநாட்டில் கலந்து கொள்ள, உலகம் முழுவதிலுமிருந்து அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் பெய்ஜிங்கிற்குச் சென்றனர்
சீனாவின் திட்டங்களால் சிறிய நாடுகள் சந்திக்கும் சிக்கல்கள் என்ன?
மறைக்கப்பட்ட கடன்கள் என்று அழைக்கப்படுபவை குறித்தும் சீனா விமர்சிக்கப்பட்டுள்ளது. சீனாவின் கடன் வழங்கும் நிறுவனங்கள் அவ்வளவு வெளிப்படையானவை அல்ல. அதனால் இது கடன் வாங்கும் நாடுகளுக்கு பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ் திட்டத்தின்மூலம் வழங்கும் கடன்களின் செலவுகள் மற்றும் நன்மைகளை எடைபோடுவதை கடினமாக்குகிறது.
பல ஆண்டுகளாக பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ் திட்டங்களின்மீது, உள்ளூர் ஊழலைத் தூண்டுதல், சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அதிகப்படுத்துதல், தொழிலாளர்களைச் சுரண்டுதல் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு வேலை மற்றும் செழிப்பைக் கொண்டு வரும் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுதல் ஆகிய குற்றங்கள் சாட்டப்படுகின்றன.
எய்ட் டேட்டா என்ற ஆராய்ச்சி ஆய்வகத்தின் சமீபத்திய ஆய்வில், பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான திட்டங்கள் இத்தகைய சிக்கல்களை எதிர்கொள்கின்றன. இது வளர்ந்து வரும் மலேசியா மற்றும் தான்சானியா போன்ற சில நாடுகளை சீனாவுடனான பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வைத்திருக்கிறது.
புனித பயணம் என்ற பெயரில் பிச்சை எடுக்க விமானம் ஏறும் பாகிஸ்தானியர் - சௌதிக்கு புதிய தலைவலி
சீன நிறுவனங்களின் தேவைக்கதிகமான உற்பத்தியைச் சமாளிப்பதில் இத்திட்டம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை
வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சிலின் கூற்றுப்படி, சீன கடன் வழங்குநர்கள் மற்றும் நிறுவனங்களின் மோசமான இடர் மேலாண்மை மற்றும் ஒத்திசைவே இதற்குக் காரணம்.
ஆனால், கடன் பெறும் நாடுகளின் மீதும் தவறு உள்ளது என்கிறது இந்நிறுவனம். உதாரணமாக ஹம்பந்தோட்டை விவகாரம். முறையான திட்டமிடல் இன்றி அல்லது நிதியை சரியாக நிர்வகிக்காமல் அவசரமாக ஒப்பந்தங்களில் ஈடுபடுவதனால் இச்சிக்கல்கள் ஏற்படுகின்றன என்று சுட்டிக்காட்டுகிறது.
உலகளாவிய கடன் வழங்குபவர்கள் அல்லது மேற்கத்திய நாடுகளின் சலுகைகளை விடக் குறைவான சுமைகளைக் கொண்ட கடன்களைச் சீனா வழங்குகிறது என்றும் நோக்கர்கள் கூறுகின்றனர்.
சீனா ஒரு சூப்பர் மார்க்கெட் அணுகுமுறையை கடைபிடிக்கிறது, என்கிறார் குந்தர். 'இங்கே எங்கள் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளன, நாங்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை அனைத்தையும் செய்கிறோம். இன்று நீங்கள் கையெழுத்திட்டால் அந்த ரயில் பாதையை நாங்கள் முடித்துக் கொடுப்போம். உங்கள் அடுத்த தேர்தல் பிரசாரத்திற்குச் அது சரியான நேரத்தில் அது செய்து தரப்படும் என்ற அணுகுமுறை இது, என்கிறார் குந்தர்.
"மிகக் குறைவான படிவங்களை மட்டுமே நிரப்பி ஓரிரு வருடங்களில் இதைச் செய்யலாம் என்று சொல்வது மிகப் பெரிய விற்பனைத் தந்திரம். அதில் சிக்கல்களும், தொழிலாளர் உரிமை மீறல்களும் இருக்கலாம். ஆனால் கட்டுமானம் முடித்துத் தரப்படும்,” என்கிறார் குந்தர்.
என்ன இருப்பினும், சீனா தன் மிகப்பெரிய இலக்குகளில் ஒன்றை அடைந்துள்ளது - தன் செல்வாக்கை விரிவுபடுத்துவது.
ரயில்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் மூலம் மட்டும் சீனா இணைப்புகளை உருவாக்கவில்லை. சீனா தனது மென் சக்தி எனப்படும் கலாசார அதிகாரத்தை முன்னிறுத்துகிறது. ஆயிரக்கணக்கான சீன பல்கலைக்கழக உதவித்தொகைகள், கலாச்சார பரிமாற்ற திட்டங்கள் மற்றும் கன்பூசியஸ் நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவது போன்ற செயல்களின் மூலம் உலகத்தின் தெற்கில் தன்னை ஒரு தலைவராக நிலைநிறுத்துகிறது. பிரிக்ஸ் வர்த்தக முகாமின் விரிவாக்கமும் சீனாவால் நடந்தது என்று கூறப்படுகிறது.
கடந்த தசாப்தத்தில், மெக்ஸிகோ, அர்ஜென்டினா, தென் ஆப்பிரிக்கா, கென்யா மற்றும் நைஜீரியா உள்ளிட்ட பல நடுத்தர வருமான நாடுகள் சீனாவுக்கு சாதகமான அணுகுமுறைக்கு மாறியிருக்கின்றன என்று பியூ ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
ஆனால், உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகள் அமெரிக்க-சீனா போட்டியில் எந்தப் பக்கத்தையும் தேர்ந்தெடுக்க விரும்புவதில்லை என்று குந்தர் குறிப்பிடுகிறார். "சீனா பல நாடுகளை மேற்கத்தியச் சார்பில் இருந்து விலக்கவில்லை, ஆனால் அந்நாடுகளை ஒரு மத்திய நிலைப்பாட்டுக்கு நகர்த்தியுள்ளது. இது சீனாவுக்கு ஒரு பெரிய இராஜ தந்திர வெற்றி," என்று அவர் கூறினார்.
ஆனால் பொருளாதார வற்புறுத்தல் பற்றிய கவலைகளையும் நோக்கர்கள் எழுப்பியுள்ளனர். வெளிநாட்டு அரசாங்கங்கள் சீனாவின் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் அல்லது தன் சீனா முதலீட்டைத் திரும்பிப் பெற்றுக்கொள்ளும் எனும் அணுகுமுறை இது.
அதேபோல, சீனாவிடம் கடன் வாங்கிய பல நாடுகள் தைவான் விஷயத்தில் சீனாவின் பக்கம் சாய்ந்திருக்கின்றன. இது, சீனா இந்த நாடுகளுக்குக் கடன் கொடுப்பதன் மூலம் அவற்றைத் தன் கொள்கைக்கு இணங்க வைக்கிறதா எனும் கேள்வியும் எழுந்துள்ளது.
ஆனால் இந்தத் திட்டத்தில் சில விஷயங்கள் சீர்படுத்தப்பட வேண்டும் என்பதை சீனா இப்போது உணர்ந்துள்ளது.
சீனா குறைந்த முதலீடு மூலம் அதிக பலன் பெறும் திட்டங்களால் பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ் திட்டத்தை முக்கியமானதாக மாற்றப் பார்க்கிறது.
லைபீரியாவில் மூங்கில் மற்றும் பிரம்பு நெசவுத் திட்டங்கள், டோங்கா மற்றும் சமோவாவில் உயிர்வாயு தொழில்நுட்பத் திட்டங்கள், பிஜி, பப்புவா நியூ கினியா மற்றும் ருவாண்டாவில் காளான் வளரும் தொழில்நுட்பத்தை ஊக்குவித்தல் ஆகியவை சீன ஊடகங்களால் வழங்கப்பட்ட எடுத்துக்காட்டுகள்.
தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தும் புதிய டிஜிட்டல் பட்டு சாலை திட்டத்தையும் சீனா அறிவித்துள்ளது. சீனா தாயாரித்த 5G கருவிகளின் மீது மேற்கத்திய நாடுகள் விதித்திருக்கும் தடைகளின் தாக்கத்தை குறைக்கும் அதே வேளையில், சீன நிறுவனங்களுக்கு இது மிகவும் நிலையான லாபம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த புதிய உத்தியால், சீனா நிதியுதவியைக் குறைத்துள்ளது. சீன வங்கிகளின் வெளிநாட்டுக் கடன்களுக்கு வரம்புகளை விதித்துள்ளது. மேலும் முதலீட்டு ஒப்பந்தங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது கிட்டத்தட்ட 50% குறைந்திருக்கின்றன என்று GFDC பகுப்பாய்வு கூறுகிறது.
இந்த மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ் என்பது அனைவருக்கும் திறந்திருக்கும் பொதுச்சாலை. எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமான தனியார் பாதை அல்ல, என்று சீனா கூறியிருக்கிறது.
விமர்சகர்கள் கூறுவது போல் ஆதிக்கத்தைத் தேடுவதற்குப் பதிலாக, சீனா தானும் வெற்றி பெற்று, பிறரையும் வெற்றிபெறச் செய்ய முனைவதாகக் கூறியிருக்கிறது.
மேற்கு நாடுகள் சீனாவின் அதிகாரத்தைக் குறைக்க முயல்வதாகச் சீனா கருதுவதாக ரென்மின் பல்கலைக்கழகத்தில் பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவை ஆய்வு செய்யும் பேராசிரியர் வாங் யிவே கூறினார். பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ் எவ்வாறு ஒரு பரஸ்பர இணைப்பை உருவாக்கும், புதிய பனிப்போரை எப்படித் தவிர்க்கும் என்பதுதான் சீனாவின் நோக்கம் அன்று அவர் கூறுகிறார்.
சீனாவின் இந்தப் பல லட்சம் கோடி ரூபாய் கனவுத் திட்டம் சீனாவின் செல்வாக்கைப் பெருக்குவதற்கான ஒரு சக்தி வாய்ந்த கருவி. ஆனால் உலகம் சீனா தலைமையிலான உலக ஒழுங்கை விரும்புகிறதா என்பதுதான் கேள்வி.