Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

நோ டைம் டூ டை: ஜேம்ஸ்பாண்ட் படத்துக்கு ‘5 நட்சத்திரம்’ அளித்த விமர்சகர்கள்

நோ டைம் டூ டை: ஜேம்ஸ்பாண்ட் படத்துக்கு ‘5 நட்சத்திரம்’ அளித்த விமர்சகர்கள்
, புதன், 29 செப்டம்பர் 2021 (23:31 IST)
டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்டாக நடித்திருக்கும் கடைசி படமான நோ டைம் டூ டை (No Time To Die) விமர்சகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பலர் 5 நட்சத்திர விமர்சனங்களை வழங்கியிருக்கிறார்கள்.
 
லண்டனின் ராயல் ஆல்பர்ட் ஹாலில் செவ்வாய்க்கிழமையன்று இந்தத் திரைப்படம் பிரத்யேகமாகத் திரையிடப்பட்டது. படம் மிகவும் சிறப்பாக இருப்பதாக பல விமர்சகர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.
 
"நன்று என்பதை விடவும் சிறப்பு. படம் அற்புதமாக உள்ளது " என்று தனது ஐந்து நட்சத்திர விமர்சனத்தில் பாராட்டியிருக்கிறார் தி டைம்ஸ் இதழின் கெவின் மெஹர்.
 
"திரையில் தோன்றியது முதல் கடைசி காட்சி வரை, டேனியல் கிரேக் தனது கவர்ச்சியான திரைத்தோற்றம், அற்புதமான, ஆத்மார்த்தமான பாணி மூலம் அசத்தியிருக்கிறார்" என்கிறார் அவர்.
 
பெரும்பாலான விமர்சகர்கள் பாராட்டியிருந்தாலும், 163 நிமிட நீளத்தை நியாயப்படுத்த முடியாது என சில விமர்சகர்கள் கூறியிருக்கின்றனர்..
 
கார்டியனின் பீட்டர் பிராட் ஷாவும் இந்தத் திரைப்படத்துக்கு 5 நட்சத்திரம் வழங்கியிருக்கிறார். அதிரடிக் காட்சிகள் நிறைந்த, திகில் கொண்ட, நகைச்சுவையை உள்ளடக்கிய ஒரு காவியம் என்று அவர் தனது விமர்சனத்தில் கூறியிருக்கிறார்.
 
டைம் இதழின் ஸ்டெஃபானியும் இந்தத் திரைப்படத்துக்கு மிகவும் நேர்மறையான விமர்சனத்தை வழங்கியிருக்கிறார். எனினும் படத்தின் நீளத்தை அவர் ஆதரிக்கவில்லை.
 
"இரண்டு மணிநேரம் 43 நிமிடங்கள் மிகவும் நீளம். ஜேம்ஸ்பாண்ட் வரிசையில் மிகவும் மந்தமான வில்லன்களில் ஒருவரை இந்தத் திரைப்படம் கொண்டிருக்கிறது" என்று அவர் கூறியிருக்கிறார்.
 
"ஆனால் அதையெல்லாம் மறந்துவிடுங்கள். அதன் குறைபாடுகள் இருந்தபோதிலும், என்னைப் பொறுத்தவரை மிகச் சிறந்த ஜேம்ஸ்பாண்டாக இருக்கும் நடிகருக்கு இந்தத் திரைப்படம் சரியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது" என்று அவர் கூறியிருக்கிறார்.
 
2006 ல் வெளியான கிரேக்கின் முதல் பாண்ட் திரைப்படமான கேசினோ ராயலில் தொடங்கிய கதை, "நோ டு டைம் டூ டை" படத்தில் உச்சத்தை அடைந்திருக்கிறது.
 
 
இயக்குநர் ஜோஜி ஃபுகுனகாவுடன், டேனியல் கிரேக்
 
தி டெலிகிராபின் ராபி காலின், "கிரேக் சகாப்தத்தின் கடைசி அத்தியாயத்தை இயக்குநர் கேரி ஜோஜி ஃபுகுனகா, மிகவும் திருப்தியாக அளித்திருக்கிறார்" என்று கூறியிருக்கிறார். இவரும் 5 நட்சத்திர விமர்சனத்தை வழங்கியிருக்கிறார்.
 
"மிஸ்டர் பாண்ட், நாங்கள் உங்களை நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். நீங்கள் திரும்பி வந்திருப்பது எவ்வளவு மகிழ்ச்சி" என்று அவர் தனது விமர்சனத்தில் கூறியிருக்கிறார்.
 
ஆனால் தி இன்டிபென்டென்ட் இதழின் கிளாரிஸ் லோக்ரி படத்தை இந்த அளவுக்குப் பாராட்டவில்லை. அவர் மூன்று நட்சத்திரங்களை வழங்கியிருக்கிறார். "உளவு முட்டாள்தனம்" எனவும் இந்தப் படத்தை விமர்சித்திருக்கிறார்.
 
"கேரி ஜோஜி புகுனாகா "நோ டைம் டூ டை" மூலம் ஒரு அதிரடி ஆக்சன் படத்தை உருவாக்கியிருக்கிறார். ஆனால் அது பாண்ட் படமாக இருப்பது வெட்கக்கேடானது" என்று அவர் கூறியிருக்கிறார்.
 
ஸ்கிரீன் டெய்லியின் ஜொனாதன் ரோம்னியும் இது போன்ற விமர்சனத்தையே வழங்கியிருக்கிறார். "இது நிச்சயமாக ஜேம்ஸ்பாண்ட் தொடரின் பல விதிகளை உடைக்கும் ஒரு படம், இருப்பினும் முற்றிலும் வியக்கும்படி இல்லை" என்று அவர் கூறியிருக்கிறார்.
 
எம்பயர் இதழின் ஜான் நுஜென்ட் படம் மிக நீளமானது என்று விமர்சித்துள்ளார். எனினும் "எந்த பாண்ட் படமும் செய்யாதவற்றைச் செய்திருக்கிறது" என்று அவர் கூறியிருக்கிறார்.
 
படத்தின் நீளத்தை பலரும் விமர்சித்திருந்தாலும், டிஜிட்டல் ஸ்பை இதழின் இயான் சாண்ட்வெல், நீளத்தைக் குறைகூற முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
"படம் மிக வேகமாக நகர்கிறது. மிக அரிதாகவே, அதிரடி வரிசைக் காட்சிகளுக்கு முன் மூச்சுவிடும் அளவுக்கு நிற்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.
 
பெரும்பாலான விமர்சகர்கள் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் கிரேக்கின் நடிப்பைப் பாராட்டியிருக்கின்றனர். அதேபோல நடிகை லாஷனா லின்ச்சின் நடிப்பையும் புகழ்ந்திருக்கின்றனர்.
 
 
திரையிடலில் பங்கேற்ற நடிகை லாஷனா லின்ச், டேனியல் கிரேக், லியா சேடோக்ஸ்
 
"கிரேக்குடன் அவரது நகைச்சுவைக் காட்சிகள் படத்தில் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களை வழங்குகின்றன." என்று நெக்ஸ்ட் பெஸ்ட் பிக்சரின் ஜோஷ் பர்ஹாம் குறிப்பிட்டுள்ளார்.
 
டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்டாக நடித்திருக்கும் 5-ஆவது மற்றும் கடைசி படம் இது. ஏற்கெனவே, கேசினோ ராயல், குவாண்டம் ஆஃப் சோலேஸ், ஸ்கைஃபால் மற்றும் ஸ்பெக்டர் ஆகிய படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
 
ஒரு நடிகரின் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் முந்தைய படங்களை விட பலவீனமாக இருக்கும் என்ற வழக்கத்தை இந்தப் படம் உடைத்திருப்பதாக விமர்சகர் டேமோன் ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.
 
ஷான் கானரி, பியர்ஸ் பிராஸ்னன் ஆகியோரின் கடைசி படங்களை இவர் உதாரணங்களாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவில் 20 ஆயிரத்திற்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!