Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மழை எனும் மாயமான்: ”தண்ணீர் இல்லை, ஏன் இங்கே தங்க வேண்டும்?” - கேள்வி எழுப்பும் மக்கள்

Advertiesment
water issue
, வியாழன், 13 ஜூன் 2019 (18:39 IST)
இந்தியாவின் மேற்கில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது கிராமத்தில் தினமும் காலையில் டகாடு பெல்டார் (75) எழுந்து, சாப்பாடு வைத்து, பருப்பு சமைத்துக் கொள்கிறார். அதன் பிறகு அவர் செய்வதற்கு சிறிதளவே வேலை உள்ளது.
வனப் பகுதிகளால் சூழப்பட்ட, கற்கள் நிறைந்த மலைப் பகுதியில் ஹட்கர்வாடி கிராமத்தில் ஒரே அறை கொண்ட மங்கலான குடிசையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார் திரு. பெல்டார்.
 
வறட்சி காரணமாக அவருடைய மனைவியும், மூன்று மகன்களும் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர். நிலம் காய்ந்துவிட்டது. கிணறுகள் வறண்டுவிட்டன. குடிப்பதற்கும், குளிப்பதற்கும் சிறிதளவு தண்ணீர் மட்டுமே உள்ளது. குடும்பத்தின் தானிய விவசாய நிலம் வறண்டு கிடக்கிறது.

water issue

 
கரும்பு பயிரிடும் மாவட்டத்தில் 400 கிலோ மீட்டர் (248 மைல்கள்) தொலைவில் உள்ள, சாங்லியில் சர்க்கரை ஆலையில் இரு மகன்களுக்கும் வேலை கிடைத்துள்ளது. அவர்களுடைய தாயார் அங்கே பள்ளிக்குச் செல்லும் அவர்களின் மூன்றாவது மகனை கவனித்துக் கொள்கிறார். ஹட்கர்வாடி என்பது மோசமான நினைவலையாக மாறிவிட்டது.
 
வயதாகிவிட்டதால் திரு. பெல்டாரின் செவித் திறன் குறைந்து வருகிறது.
 
``அவர் மிகவும் தனிமையில் இருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் தன் குடும்பத்தினரைப் பார்க்கவில்லை. எல்லாமே தண்ணீர் பிரச்சினையால் தான்'' என்று கூறினார் அருகில் வசிக்கும் கணேஷ் சட்கர்.
 
இது மட்டுமின்றி, 75 வயதான கிஷன் சட்கரின் ஒரே மகன் பத்தாண்டுகளுக்கு முன்பு, தொலைவில் உள்ள சர்க்கரை ஆலையில் வேலை பார்ப்பதற்காக சென்றுவிட்டார். அவர் தனது மனைவி மற்றும் செல்ல நாயுடன் வாழ்ந்து வருகிறார். ``என் மகன் எப்போதாவது தான் வீட்டுக்கு வருவான்'' என்று அவர் சொல்கிறார். ``வரும்போது கூட, இங்கே தண்ணீர் இல்லாததால் இரண்டு அல்லது மூன்று நாட்களில் திரும்பிவிட விரும்புவான்'' என்று தெரிவித்தார்.

water issue

 
காலநிலை மாற்றம்: இந்தியா ஏன் கவலை கொள்ள வேண்டும்?
தூத்துக்குடி: கண் முன்னே காணாமல் போன கிராமம் - காரணம் என்ன?
சில வீடுகள் தள்ளி, சாகா பாய் என்ற பெண்மணி தனது 14 வயதான காது கேளாத, வாய் பேச முடியாத மகள் பார்வதியுடன் வசித்து வருகிறார். அவருடைய ஒரே மகன் பெயர் அப்பா.
 
தொழிற்சாலையில் வேலை பார்ப்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய மகன் சென்றுவிட்டார்.
 
``எப்போதாவது தான் அவன் வீட்டுக்கு வருவான். மழை பெய்தால் மட்டுமே வீட்டுக்கு வருவேன் என்று அவன் சொல்கிறான்'' என்று திருமதி பாய் தெரிவித்தார்.
 
அந்தக் கிராமத்தில் ஒரே பட்டதாரியான கணேஷ் சட்கருக்கு பெண் கிடைக்காததால் இன்னும் திருமணம் ஆகவில்லை. ``தண்ணீர் இல்லாத காரணத்தால் இந்தக் கிராமத்துக்கு வருவதற்கு எந்தப் பெண்ணுக்கும் விருப்பம் இல்லை'' என்கிறார் அவர்.
 
சூரியன் சுட்டெரிக்கும் பீட் மாவட்டத்தில் ஹட்கர்வாடி கிராமம் உள்ளது. மழை இல்லாததால் இந்தக் கிராமம் பாதிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அங்கு 1,200க்கும் மேற்பட்ட மக்கள், தங்களுடைய 125 சதுர அடி வீடுகளில் வாழ்ந்து வந்தனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், பெரும்பாலும் ஆண்கள், வீடுகளைப் பூட்டிப் போட்டுவிட்டு வெளியூர்களுக்குச் சென்றுவிட்டனர்.

water issue

 
தண்ணீர் அகதிகளான இவர்கள் கரும்பு வயல்கள், சர்க்கரை ஆலைகள், கட்டுமான இடங்களில் வேலை செய்ய அல்லது டாக்ஸி டிரைவர்களாக வேலை பார்க்க தொலைதூரத்தில் உள்ள நகரங்களுக்குச் சென்றுவிட்டனர்.
 
``இங்கே தண்ணீர் இல்லை. மக்கள் ஏன் இங்கே தங்க வேண்டும்?'' என்று கேட்கிறார் கிராமத்தின் தலையாரியான 42 வயதான பீம்ராவ் பெல்டார்.
 
நான் அந்தக் கிராமத்துக்குச் செல்வதற்கு முந்தைய இரவில், அங்கே சிறிது நேரம் மழை பெய்துள்ளது. மறுநாள் காலையில் திரண்டிருந்த மேகங்கள், நல்ல மழை பெய்யக் கூடும் என்று உணர்த்தின. இருந்தபோதிலும் மதிய வேளையில் மீண்டும் வெப்பம் அதிகமாகி, அந்த நம்பிக்கையை தகர்த்துவிட்டது. அப்படித்தான் அங்கு நம்பிக்கை கலைந்து போகிறது. இதற்கு முன்பு ``சுமாரான மழை'' என்பது அங்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெய்திருக்கிறது.

water issue

 
கொடூரமான கோடை ஹட்கர்வாடி கிராமத்தில் நிலம் வறண்டு, வெடிப்பு விழுந்துவிட்டது. பருத்தி மற்றும் தானியப் பயிர்கள் கருகிவிட்டன. அங்குள்ள 35 கிணறுகளில், வெறும் இரண்டு கிணறுகளில் தான் சிறிதளவு தண்ணீர் இருக்கிறது. ஒரு டஜன் ஆழ்துளைக் கிணறுகள் இருக்கின்றன. ஆனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே போவதால் விவசாயிகள் தண்ணீர் எடுக்க இன்னும் ஆழமாக - 650 அடி வரை - அதை ஆழப்படுத்த வேண்டியுள்ளது.
 
சற்று பலமாக காற்று வீசினாலே மின் இணைப்பு துண்டிக்கப் படுகிறது. அதனால் ஆழ்துளைக் கிணறுகள் அடிக்கடி செயல்படாமல் போகின்றன. கிராமத்துக்கான இணைப்புச் சாலையில் தார்ச்சாலை மோசமாக இருப்பதால், வறட்சி பாதித்த கிராமத்துக்கு உயிர் மூச்சாக இருக்கும் - தண்ணீர் டேங்கர் லாரிகளும் வருவதில்லை.
 
"இரண்டே ஆண்டுகளில் சென்னையில் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றிவிடும்"
விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வுதான் என்ன?
கால்நடைகளுக்கு தீவனம் எதுவும் கிடையாது. எனவே 300 எருமைகள் அங்கிருந்து மலை மீது தீவன முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டன. அங்கு உரிமையாளர்களுடன் தார்ப்பாய் கூடாரங்களில் அவை வாழ்கின்றன. திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமத்தை உருவாக்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் சுமார் 75 புதிய கழிப்பறைகள் கட்டப்பட்டன. தண்ணீர் இல்லாததால், அவை பயன்படுத்தப் படாமல் கிடக்கின்றன. கிராமத்தில் பெரும்பாலானவர்கள் குடிக்கவும், குளிக்கவும் ஆழ்துளைக் கிணறு வைத்திருக்கும் வசதிபடைத்த மற்றவர்களிடம் தண்ணீர் இரவல் வாங்குகின்றனர்.
 
வறட்சியால் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப் பட்டுள்ள பீட் மாவட்டத்தில் வரைபடத்தில் ஒரு புள்ளி தான் ஹட்கர்வாடி.
 
காடுகள் அழிப்பு காரணமாக மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் காடுகளின் அளவு வெறும் 2 சதவீத அளவுக்குக் குறைந்துவிட்டது.
 
வெறும் 16 சதவீத நிலங்களுக்கு மட்டுமே பாசன வசதி உள்ளது.
 
பருவமழை நன்றாகப் பெய்யும் சமயங்களில், மானாவாரி நிலங்களில் பருத்தி, சோயா பீன், கரும்பு, சோளம், சிறு தானியம் ஆகியவை விளைகின்றன. இதனால் 650,000 விவசாயிகள் பயன் பெறுகின்றனர்.
 
மனித குல வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவு சுற்றுச்சூழல் அழிவு
உயிரினங்களைக் காப்பாற்ற இந்தியா போதிய நடவடிக்கைகள் எடுக்கிறதா?
கடந்த ஆறு ஆண்டுகளாக, பீட் மாவட்டத்தில் மழை அளவு குறைந்து வருகிறது. முறையற்ற மழைப் பொழிவு காரணமாக பயிர்கள் பாதிக்கப் பட்டுள்ளன.
 
10 நாட்களுக்கு மழை தாமதமானால் கூட பயிர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படும். கடந்த ஆண்டு அபரிமிதமான மழை பெய்த போது - ஆண்டு சராசரியான 690 மில்லி மீட்டரில் 99 சதவீத அளவு மழை பெய்த போதும் - நான்கு முறை நீண்ட இடைவெளி ஏற்பட்டதால் பயிர்கள் பாதிக்கப் பட்டன.
 
பிரதான கோதாவரி ஆறு வறண்டுவிட்டது. பீட் மாவட்டத்தில் உள்ள 140 பெரிய மற்றும் சிறிய அணைகள் அனைத்திலும் தண்ணீர் கிடையாது. 800க்கும் மேற்பட்ட கிணறுகளும் வறண்டுவிட்டன. இரண்டு முக்கிய அணைகளில் குறைந்தபட்ச அளவுக்கு தான் தண்ணீர் இருக்கிறது.
 
சேறு படிந்த அந்த நிலைக்கும் கீழாக அங்கிருந்து தண்ணீர் எடுக்க முடியாது. இங்கிருந்து தான் அருகில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் பம்ப் செய்யப்பட்டு, அங்கிருந்து குளோரின் கலந்து ஆயிரக்கணக்கான டேங்கர் லாரிகள் மூலம் 300க்கும் மேற்பட்ட கிராமங்களின் தாகத்தைத் தீர்க்க தண்ணீர் கொண்டு செல்லப் படுகிறது.
 
பீட் மாவட்டத்தில் இருந்த 800,000 க்கும் மேற்பட்ட கால்நடைகளில், பாதிக்கும் மேற்பட்டவை தீவனம் இல்லாததால் 600க்கும் மேற்பட்ட கால்நடை முகாம்களுக்கு கொண்டு செல்லப் பட்டுவிட்டன. 40,000க்கும் மேற்பட்ட மக்கள் உணவுக்கு வேலை திட்டத்தில் வேலை செய்கின்றனர்.
 
மக்கள் வறுமையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக கூடுதல் வேலைகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நகரங்களில் வசிப்பவர்களையும் வறட்சி விட்டு வைக்கவில்லை.
 
பீட் நகரின் 250,000 மக்களுக்கு வாரத்தில் ஒரு நாளுக்கு அல்லது சில நேரங்களில் இரண்டு வாரங்களில் ஒரு நாளுக்கு மட்டுமே குழாய் மூலம் தண்ணீர் கிடைக்கிறது.
 
``கடந்த பத்தாண்டுகளில் மிக மோசமான வறட்சி இது'' என்கிறார் பீட் பகுதியின் மிக மூத்த அதிகாரியான அஸ்டிக் குமார் பாண்டே. ``ஜூலை மாத இறுதி வரை தான் குடிநீர் கிடைக்கும். அதற்குள் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்த்திருக்கிறோம்'' என்று அவர் கூறினார்.
 
இந்தியாவில் பருவநிலை பேரழிவின் பெரிய பாதிப்பின் தொடர்ச்சியாக மகாராஷ்டிராவில் வறட்சி தாண்டவமாடுகிறது. 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிலங்களும், குறைந்தது 10 மாநிலங்களில் 500 மில்லியனுக்கும் அதிகமான மக்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு கணக்கெடுப்பில் தெரிய வந்திருக்கிறது.
 
தண்ணீர் பற்றாக்குறை என்பது ``வெடிக்கக் கூடிய பிரச்சினையாக'' உள்ளது என்று People's Archive of Rural India என்ற இணையதள நிறுவனர் மற்றும் ஆசிரியர் பி. சாய்நாத் கூறியுள்ளார். ஆனால் இந்தப் பிரச்சினைக்கு வறட்சி மட்டுமே காரணம் கிடையாது என்கிறார் அவர். ஏழைகளுக்கு உரிய நீரை வசதி படைத்தவர்கள் எடுத்துக் கொள்வதும், குறைவான அளவுக்கு மட்டுமே தண்ணீர் விநியோகிக்கப் படுவதும் இதற்குக் காரணம் என்கிறார்.
 
``விளை நிலங்களில் இருந்து தொழிற்சாலைகளுக்கு, உணவுப் பயிர்களில் இருந்து தண்ணீரைக் குடிக்கும் பணப் பயிர்களுக்கு, கிராமப் பகுதிகளில் இருந்து நகரப் பகுதிகளுக்கு, அத்தியாவசிய வாழ்க்கைத் தேவைகளில் இருந்து நகரங்களில் பல அடுக்கு மாடிகளில் உள்ள நீச்சல் குளங்களுக்கு தண்ணீரை கொண்டு செல்வது தான் இப்போதைய சூழ்நிலைக்குக் காரணம்'' என்று சாய்நாத் கூறுகிறார்.
 
மாவட்டத்தில் ஜி.பி.எஸ். பொருத்திய தண்ணீர் டேங்கர் லாரிகளின் பயணத்தை பீட் கரில் இருந்தபடி அதிகாரி அஸ்டிக் குமார் பாண்டே நேரடியாக வரைபடம் மூலம் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். சிவப்பாக அடர்த்தியாக இருப்பவை (தண்ணீர் நிரப்புவதற்காகக் காத்திருக்கும் டேங்கர்கள்) மற்றும் பச்சையாக இருப்பவை (தண்ணீருடன் பயணத்தில் இருப்பவை) என மாவட்டம் முழுக்க காணப்படுகிறது.
 
``நிலைமை இவ்வளவு மோசமாக உள்ளது. விரைவில் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருக்கிறோம்'' என்கிறார் அஸ்டிக் குமார் பாண்டே.
 
படங்கள் : மான்சி தப்லிவல்

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூன்றாம் கலைஞர் உதயநிதி என்றால் தொண்டர்கள் நிலை ?