Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சொந்த ஊரில் வேலையில்லை - சீனா செல்ல காத்திருக்கும் ராமநாதபுரம் பரோட்டா மாஸ்டர்கள்

Advertiesment
BBC Tamil
, திங்கள், 20 ஜூலை 2020 (14:46 IST)
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளில் உள்ள அனைத்து தொழில்களும் அதனை சார்ந்தவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா நெருக்கடியால் சீனாவில் உள்ள உணவகங்களில் வேலை செய்து வந்த ராமநாதபுரம் மாவட்டம் புலியூர் மற்றும் அதை ஒட்டியுள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட பரோட்டா மாஸ்டர்கள் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

கடந்த ஆறு மாதங்களாக வேலையின்றி சொந்த ஊர்களில் தவித்து வரும் இவர்கள் மீண்டும் சீனா திரும்பி செல்லும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறுகின்றனர்.

இது குறித்து 12 ஆண்டுகளாக சீனாவின் வூஹான் மாகாணத்தில் உள்ள உணவகத்தில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு திரும்பிய திருநாவுக்கரசு பிபிசி தமிழிடம் பேசுகையில், "நான் கடந்த 12 ஆண்டுகளாக சீனாவில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தேன். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கொரோனா காரணமாக என் சொந்த ஊருக்கு திரும்பினேன்.

இந்திய பரோட்டாவிற்கு சீனாவில் பெரும் வரவேற்பு உள்ளது. வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத்தை நம்பி வாழும் எங்கள் கிராமத்தை விட்டு நான் 12 வருடங்களுக்கு முன் சீனாவில் பரோட்டா மாஸ்டர் வேலைக்காக சென்று அங்குள்ள உணவகம் ஒன்றில் பணியில் சேர்ந்தேன்"
BBC Tamil

"நான் பணியில் சேர்ந்தபோது இந்திய மதிப்பில் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தேன். நான் சீனாவில் இருந்து கடந்த ஜனவரி மாதம் சொந்த ஊருக்கு திரும்பினேன்,"

"எனக்கு பரோட்டா போடுவது மட்டுமே தெரியும் வேறு எந்த கைத்தொழிலும் தெரியாது. ஆனால் இங்கு உள்ள பரோட்டா கடைகளில் வேலை செய்தாலும் நாங்கள் சீனாவில் வாங்கிய சம்பளத்தை ஈடுகட்ட முடியாது.

மீண்டும் சீனா செல்ல முடியாததால் புலியூரில் உள்ள சவுண்ட் சர்வீஸ் கடையில் எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வருகிறேன். தினமும் எனக்கு 100 முதல் 300 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. ஆனால் அது நிரந்தர வருமானம் கிடையாது. இந்த வருமானம் எனக்கு போதுமானதாகவும் இல்லை,"
BBC Tamil

"லடாக் எல்லை பிரச்சனையின் போது உயிரிழந்த பழனி எனது நண்பர், எனது பக்கத்து ஊர்காரர் அவருடைய உயிரிழப்பு எங்களுக்கு வேதனையளிக்கிறது. நான் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன். ஆனால், இந்த இரு நாட்டு பிரச்சனை தமிழக தொழிலாளர்களை பாதிக்க கூடாது. நாளைக்கே விமான போக்குவரத்து தொடங்கினால் உடனடியாக நான் சீனா செல்ல தயாராக உள்ளேன்,"

"மேலும் நாங்கள் சீனாவைப் பற்றி பேசுவதால் நாங்கள் நாட்டு பற்று இல்லாதவர்கள் அல்ல," என்கிறார் திருநாவுக்கரசு.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், "சீனாவில் உள்ள நண்பர்கள், வாடிக்கையாளர்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். அங்கு எந்த பிரச்சனையும் இல்லை.என்னுடைய உறவினர் ஒருவர் தற்போது கூட சீனாவில் தங்கி உணவகத்தில் பரோட்டா மாஸ்டராக உள்ளார்," என்கிறார் திருநாவுக்கரசு.
BBC Tamil

சீனாவுக்கு திரும்பி செல்ல ஆர்வமாக உள்ள மற்றொரு பரோட்டா மாஸ்டர் ராமநாதன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "நான் கடந்த ஜனவரி மாதம் சீனாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தேன். கொரோனா காரணமாக என்னால் சொந்த ஊரில் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. வேலையில்லாததால் குழந்தைகளுடன் வீட்டிலேயே இருக்கிறேன். மீண்டும் சீனா செல்வதற்கு எப்போது வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ஒரு நல்ல வாய்ப்பு வந்தால் சீனாவுக்கு கிளம்பி சென்று விடுவேன்," என்கிறார்.

"நான் மீண்டும் சீனா சென்றால்தான் என் பொருளாதாரம் உயரும் இல்லை எனில் என் குடும்பத்தை என்னால் காப்பாற்ற முடியாது. வேலை எதுவும் இல்லாததால் வீட்டில் உள்ள ஆடு மாடுகளை மேய்த்து வருகிறேன். இனிமேல் சீனா சென்று வேலை பார்த்தாலும் பழைய மாதிரி இருக்குமா என தெரியவில்லை," என்கிறார் ராமநாதன்.

இதேபோன்று எட்டு ஆண்டுகளாக சீனாவில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்த கண்ணன் தற்போது காய்கறி கடை நடத்தி வருவதாக தெரிவிக்கிறார்.
BBC Tamil

பரோட்டா மாஸ்டர்கள் சீனா செல்ல முடியாமல் சொந்த ஊரில் முடங்கியிருப்பது குறித்து ஆலம்பாடி ஊராட்சி தலைவர் காந்தி பிபிசி தமிழிடம் கூறுகையில்,
"எனக்கு விவரம் தெரிய கடந்த 20 ஆண்டுகளாகவே இங்கிருந்து அதிகமானோர் பரோட்டா மாஸ்டர் வேலைக்காக சீனா சென்று வருகின்றனர்.

திருவாடனையை சுற்றியுள்ள ஆலம்பாடி, புலியூர், நத்தைகொட்டை, ஓரியூர் அக்கலை, பனஞ்சாயல், வெள்ளையாபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து அதிகமானோர் சீனாவில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகின்றனர்.

அதனால் அவர்களுடைய பொருளாதாரம் நன்றாக இருந்தது. தற்சமயம் இந்த கொரோனா பாதிப்பின் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டு அவர்கள் ஊரில் முடங்கிக் கிடக்கின்றனர். ஆனால் இப்போது அவர்கள் சீனாவுக்கு திரும்பி போகலாம் என்று நினைக்கும் போது எல்லை பிரச்சனையும் ஆரம்பித்துவிட்டது." என்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்க மனசுல இடம் பிடிச்ச புரட்சி முதல்வர் நீங்க! – மு.க.ஸ்டாலின் வாழ்த்து!