Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஜப்பானுக்கு மேலே பாலிஸ்டிக் ஏவுகணை செலுத்திய வட கொரியா - தென் கொரியா, அமெரிக்கா எதிர்வினை

ஜப்பானுக்கு மேலே பாலிஸ்டிக் ஏவுகணை செலுத்திய வட கொரியா - தென் கொரியா, அமெரிக்கா எதிர்வினை
, புதன், 5 அக்டோபர் 2022 (16:29 IST)
அமெரிக்கா மற்றும் ஜப்பானின் கவனத்தை ஈர்ப்பதற்காக வேண்டுமென்றே தீவிரமாக்குவதாகத் தோன்றக் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்ரை ஜப்பானுக்கு மேலே வடகொரியா செலுத்தியுள்ளது.

இந்த பாலிஸ்டிக் ஏவுகணை பசிஃபிக் கடலில் விழுவதற்கு முன்பு 4,500 கிமீ (2800 மைல்) தூரம் பயணம் செய்தது. இதுவே இன்னொரு பாதையில் ஏவுகணை சென்றிருந்தால் அமெரிக்க தீவான குவாமை தாக்குவதற்கு அதுவே போதுமான தூரமாக இருந்திருக்கும்.

2017ஆம் ஆண்டுக்குப் பிறகு வட கொரியா ஜப்பானுக்கு மேலே செலுத்தும் முதலாவது ஏவுகணை இதுவாகும்.

இதன் காரணமாக பாதுகாப்பாக இருக்கும்படி தனது சில குடிமக்களுக்கு ஜப்பான் எச்சரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்காவும் தென் கொரியாவும் கூட்டு குண்டுமழை ஒத்திகையில் ஈடுபட்டு எதிர்வினையாற்றின.

தென் கொரியாவின் கூட்டுப்படைகள் தளபதி, "இரு தரப்பிலும் தலா நான்கு விமானங்கள் ஒத்திகையில் பங்கெடுத்தன. மஞ்சள் கடலில் மக்கள் வசிக்காத தீவில் உள்ள போலி இலக்கை நோக்கி குண்டுகள் போடப்பட்டன," என்று கூறினார். இது தொடர்பான செய்திக்குறிப்பில், வட கொரியாவின் அச்சுறுத்தலுக்கு கடுமையாக பதிலளிக்கும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் எண்ணத்தை இந்த ஒத்திகை நிரூபித்ததாக கூறப்பட்டுள்ளது.

வடகொரியா பாலிஸ்டிக் மற்றும் அணு ஆயுத சோதனைகளை நடத்துவதற்கு ஐ.நா தடை விதித்துள்ளது. முன்னெச்சரிக்கை அல்லது ஆலோசனைகளின்றி பிற நாடுகளை நோக்கியோ அவற்றின் மேலோ ஏவுகணைகளை பறக்கச் செய்வது சர்வதேச நியதிகளுக்கு முரணாகும்.

பெரும்பாலான நாடுகள், இப்படி செய்வது 'ஒரு தாக்குதல்' என தவறாக புரிந்து கொள்ளப்படலாம் என்பதால் அதை முழுமையாகவே தவிர்த்து விடும்.

ஆனால், அணுஆயுத சோதனை அளவுக்கு பெரியதாக இல்லாவிட்டாலும் - அது அடுத்ததாக இருக்கலாம் - என கருதப்படுவதால் இது மிகப்பெரிய ஆத்திரமூட்டலாக கொள்ளப்படலாம்.

ஹொக்கைடோ தீவு மற்றும் அமோரி நகரம் உள்ளிட்ட ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள மக்கள், சைரன் ஒலியாலும் குறுஞ்செய்தி எச்சரிக்கையாலும் கண் விழித்தனர். "வட கொரியா ஒரு ஏவுகணையை ஏவியிருப்பதாக தோன்றுகிறது. தயவு செய்து கட்டடங்களை விட்டு வெளியேறுங்கள் அல்லது பாதாளத்தில் பதுங்கிக் கொள்ளுங்கள்," என்று குறுஞ்செய்தியில் கூறப்பட்டிருந்தது.

ஏவுகணை தலைக்கு மேலே பறந்தபோது, அதன் பாகங்கள் கீழே விழலாம் என்றும் மக்கள் எச்சரிக்கப்பட்டனர். அங்கிருந்து கிடைத்த தகவல்களின்படி பலரும் காண்பதற்கு அமைதியாகவே இருந்ததாக தெரிகிறது. ஒரு காணொளியில், ஒலிபெருக்கிகளில் எச்சரிக்கை செய்யப்பட்ட தருணத்தில் டோக்யோ பயணிகள் அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்ததைக் காணமுடிந்தது.

ஆனால், வேறு சிலரோ அதிகமாகவே நடுங்கினர். "ஒரு ஏவுகணை தாக்கினால், அது இங்கு மட்டுமல்ல, நாடு முழுமைக்கும் பெரிய பிரச்னையாகலாம் என எனக்கு கவலையாக இருந்தது," என்று அசாஹி ஷிம்பன் நாளிதழிடம் அமோரி குடியிருப்புவாசியான கஸுக்கோ எபினா கூறியிருக்கிறார்.
 
webdunia

இது குறித்து பின்னர் தெரிவித்த அதிகாரிகள், இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையானது ஜப்பானில் இருந்து தூரத்தில் உள்ள பசிஃபிக் பெருங்கடலில் விழுந்ததாகவும் யாருக்கும் காயம் அடைந்ததாக தகவல் இல்லை என்றும் கூறினர்.

வட கொரிய ஏவுகணை இதுவரை பயணம் செய்யாத அளவுக்கு மிக நீண்ட தூரத்தை இது கடந்து, 1,000 கி.மீ தூரத்தை எட்டியது. இந்த உயரம், சர்வதேச விண்வெளி நிலையம் அமைந்த உயரத்தை விட மிகவும் அதிகமானது.

இந்த ஏவுகணை செலுத்தப்பட்டதை வன்முறை நடத்தை என்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஸிடியா அழைக்க, அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் யசுகாசு ஹமாதாவோ, பதிலடி தாக்குதல் திறன்கள் உள்பட தமது பாதுகாப்பு சக்திகளை பலப்படுத்தும் எந்தவொரு வாய்ப்பையும் மறுப்பதற்கு இல்லை என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆலோசகர் அட்ரியென் வாட்சன், இது ஒரு அபாயமான, எதிர்விளைவுகளைக் கொண்ட முடிவு , இது அந்த பிராந்தியத்தை வலுவிழக்கச் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகியவை ஒன்றிணைந்து அவற்றின் பாதுகாப்பை வலுப்படுத்த திட்டமிட்டுள்ள வேளையில் இந்த ஏவுகணை செலுத்தப்பட்டிருக்கிறது.

2017ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த வாரம் இந்த மூன்று நாடுகளும் இணைந்து கடற்படை ஒத்திகையில் ஒன்றாக ஈடுபட்டன. அத்தகைய பயிற்சிகள், அந்த நாடுகளை தன்னுடைய எதிரிகள் போருக்கு தயாராவதாக பார்க்கும் வட கொரியா தலைவர் கிம் ஜோங் உன்னை எப்போதும் கோப்படுத்தியே வந்துள்ளன.

2017ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த பயிற்சிக்கு எதிர்வினையாக, ஜப்பானுக்கு மேலே இரண்டு ஏவுகணைகளை வடகொரியா செலுத்தியது. ஒரு வாரத்துக்குப் பிறகு அந்நாடு அணு ஆயுத சோதனை நடத்தியது.

வடகொரியா, மற்றுமொரு அணு ஆயுத சோதனை நடத்த தயாராகி வருவதாக அண்மைகால உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமது முக்கிய கூட்டாளியான சீனா இந்த மாத பிற்பகுதியில் அதன் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டை நடத்தும்வரை வட கொரியா காத்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சில நிபுணர்கள், எதிர்பார்த்ததை விட அந்த நேரம் விரைவாகவே வருமானால், செவ்வாய்கிழமை செலுத்தப்பட்ட ஏவுகணை, வட கொரியா அணு சோதனைக்கான களத்துக்கு தயாராகி வருவதையே காட்டுகிறது என்கின்றனர்.

வடகொரியா ஒரு வாரத்துக்குள்ளாக நடத்திய ஐந்தாவது ஏவுகணை சோதனை இதுவாகும். சனிக்கிழமையன்று இரண்டு ராக்கெட்டுகள் ஜப்பானின் பொருளாதார மண்டலத்துக்கு வெளியே தண்ணீரில் விழுந்தன.

பெரும்பாலான வட கொரியாவின் ஏவுகணை சோதனையானது, வான்வெளியில் விமானங்கள் பறக்கும் உயரத்தை விட அதிக உயரத்தில் நடத்தப்பட்டுள்ளன. அண்டை நாடுகளின் விமானங்கள் மீது மோதுவதை தவிர்க்கவே இவ்வாறு அதிக உயரத்தில் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

ஆனால் யதார்த்தமான நிஜ உலக சூழலை ஒத்த நிலையில் அதிகம் பரீட்சயமாக வேண்டும் என்பதால்தான், ஜப்பானுக்கு மேலோ அதைக் கடந்தோ ஏவுகணைகளை சோதனை செய்ய வட கொரியா விஞ்ஞானிகள் அனுமதித்திருக்கிறார்கள் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவிக்கிறார் ஆய்வாளர் அன்கித் பாண்டா.

1910 முதல் 1945வரை கொரியாவில் ஜப்பானிய காலனியாதிக்கம் மற்றும் கடந்த காலங்களில் ஜப்பானியர்களை கடத்திய வடகொரிய செயல் போன்ற நடவடிக்கைகள், வட கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே பதற்றங்கள் நீடிப்பதற்கான ஆணி வேராகும்.

இந்த மாத தொடக்கத்தில், வட கொரியா அதனை ஒரு அணு ஆயுத நாடாக சுயமாகவே அறிவித்துக் கொள்ளும் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் அணு ஆயுத விலக்கல் தொடர்பான பேச்சுவார்த்தை சாத்தியத்தை வட கொரியா தலைவர் கிம் ஜோங் உன் நிராகரித்திருக்கிறார்.

வட கொரியா 2006 - 2017ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆறு அணு ஆயுத சோதனைகளை நடத்தியது. அதன் விளைவாக அந்நாடு மீது விரிவான தடைகள் விதிக்கப்பட்டன.

இந்த கிழக்காசிய நாடு, அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்துவதற்கான தடையை தொடர்ந்து மீறி வருகிறது. தமது பாதுகாப்பை வலுப்படுத்தும் தேவை உள்ளது என்று கூறியே இந்த சோதனைகளை நடத்துகிறது.

நாதன் வில்லியம்ஸின் கூடுதல் தகவல்களுடன்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கன்னியாக்குமரிக்கு தூக்கி அடிங்க..! – மருத்துவர்களிடம் அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்!