Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் ஓலா மின்சார வாகன தொழிற்சாலை: முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன?

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (13:43 IST)
இந்தியாவின் முன்னணி வாடகை வாகன சேவை நிறுவனமான ஓலா, உலகின் மிகப் பெரிய இரு சக்கர வாகன தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த தொழிற்சாலையில் ஆண்டொன்றுக்கு மின்சாரத்தில் இயங்கும் இரண்டு கோடி ஸ்கூட்டர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை தயாரிக்க உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இதுதொடர்பாக 2,400 கோடி ரூபாய் மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசுக்கும் ஓலா நிறுவனத்துக்கும் இடையே கடந்த டிசம்பர் மாதம்  கையெழுத்தான நிலையில், கடந்த ஜனவரி மாதம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவுற்று, பிப்ரவரி மாதம் மாதம் முதல் கட்டுமான பணிகள் முழுவீச்சில்  நடைபெற்றுவருவதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
உலகின் மிகப் பெரிய இருசக்கர வாகன தொழிற்சாலையாக உருவெடுக்கவுள்ள இதன் முதல்கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவுற்று, அடுத்த சில மாதங்களிலேயே வாகன உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக ஓலா இணை நிறுவனர் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் இதுதொடர்பாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு மற்றும் காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய சிறப்பம்சங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.
 
2,400 கோடி ரூபாய் முதலீட்டில் 500 ஏக்கர் பரப்பளவில் கிருஷ்ணகிரியில் அமையும் உலகின் மிகப் பெரிய இருசக்கர வாகன தொழிற்சாலையான இதன் மூலம் சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஒரு கோடி மனித பணிநேரத்தில் அதிவேகமாக கட்டுமான பணிகளை மேற்கொண்டு, திட்டத்தின் முதல் தொகுப்பில் அடுத்த சில மாதங்களில் வாகன உற்பத்தியை  தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கட்டப்படும் இந்த தொழிற்சாலையின் உட்பகுதியிலேயே சுமார் இரண்டு ஏக்கர் அளவில் காட்டை ஏற்படுத்தி, பராமரிக்க  திட்டமிடப்பட்டுள்ளது. அதுதவிர தொழிற்சாலை வளாகத்தில் மொத்தம் 10 ஏக்கர் அளவுக்கு காடுகளை உருவாக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன.
 
இங்கு உற்பத்தி செய்யப்படும் வாகனங்களுக்கான மின்கலன் (பேட்டரி) இங்கயே தயாரிக்கப்படவுள்ளது.
 
தொழிற்சாலையின் ஒட்டுமொத்த கட்டுமான பணிகள் நிறைவுற்றவுடன் சராசரியாக இரண்டு நொடிக்கு ஒரு ஸ்கூட்டர் வீதம் உற்பத்தி செய்யப்படும்.
 
இதன் மூலம், உலகின் இருசக்கர வாகன உற்பத்தியில் 15 சதவீதத்தை இந்த ஒரே தொழிற்சாலையால் தயாரிக்க முடியும்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் இந்தியா மட்டுமின்றி ஐரோப்பா, பிரிட்டன் லத்தீன் அமெரிக்கா, ஆசியா - பசிபிக், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பிராந்தியங்கள் மற்றும் நாடுகளுக்கும் ஏற்றுமதி  செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்பட உள்ளது.
 
இந்தியாவின் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்ட தொழிற்சாலையாக நிர்மாணிக்கப்படும் இங்கு வாகன வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பணிகளில் செயற்கை  நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் சுமார் 3,000 ரோபாட்டுகள் பயன்படுத்தப்படவுள்ளன.
 
இங்கு அடுத்த சில மாதங்களில் உற்பத்தி செய்யப்படவுள்ள இருசக்கர வாகனங்கள் மிகச் சிறந்த வடிவமைப்பு, கழற்றிக்கூடிய வகையிலான மின்கலன், நீடித்த உழைப்பு உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் ஏற்கனவே கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக் ஷோவில் ஐஎச்எஸ் மார்க்கிட்  இன்னோவேஷன் விருது மற்றும் ஜெர்மன் டிசைன் அவார்ட் உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments