தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் 28% வீடுகளில் கழிப்பிட வசதியில்லை என்பது சமீபத்தில் வெளியான அரசாங்க தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில் 5 மாநிலங்கள் மட்டுமே தமிழ்நாட்டைவிட மோசமான நிலையில் உள்ளன.
இந்திய அரசு திறந்தவெளியில் மலம் கழிப்பதை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்கிற நோக்கில் 1999-ம் ஆண்டு இந்திய அரசு முழு சுகாதாரத் திட்டம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்திவந்தது. 2014-ம் ஆண்டு முதல் இது 'தூய்மை இந்தியா' திட்டம் என்ற புதிய பெயரில் செயல்படுத்தப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோதி கடந்த 2019-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளன்று இந்தியா முழுவதும் திறந்த வெளி கழிப்பறைகள் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக அறிவித்தார். ஆனால் அப்போது அந்த அறிவிப்பு மீது பலரும் சந்தேகங்களை எழுப்பியிருந்தனர்.
இது தொடர்பான கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்த இந்திய அரசு, `மாநிலங்கள் அளித்துள்ள தகவல்களின் படி அனைத்து கிராமங்களிலும் திறந்த வெளியில் மலம் கழிப்பது முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது` என்று பதிலளித்தது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஐந்தாவது தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின்படி (2019 - 2021) நாடு முழுவதும் 19.4% வீடுகளைச் சேர்ந்தவர்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பது தெரியவந்துள்ளது. நகர்ப்புறங்களில் 6% வீடுகளைச் சேரந்தவர்களும் கிராமப்புறங்களில் 26% வீடுகளைச் சேர்ந்தவர்களும் திறந்த வெளியில் மலம் கழிப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு 39 ஆக இருந்த திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கம் 19% ஆக குறைந்துள்ளது. இந்த முறை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில்தான் கழிவறை வசதி தொடர்பான பிரிவும் சேர்த்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் 28.3% வீடுகளுக்கு முறையான கழிப்பறை வசதியில்லை என்பது தெரியவந்துள்ளது. தேசிய அளவில் ஊரகத்தில் முறையான கழிப்பறை வசதியில்லாத மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளது இந்தக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
முதல் ஐந்து இடங்களில் உள்ள மாநிலங்களில் நிலவும் திறந்தவெளி மலம் கழித்தல் சதவீதம்: பீகார் - 43.3%, ஜார்க்கண்ட் - 37.1%, ஒடிசா - 31.1% மத்தியப் பிரதேசம் - 30.2%, குஜராத் - 29.4%. பல்வேறு மனித வள குறீயிடுகளில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள தமிழ்நாடு இந்த பட்டியலில் பின் தங்கியுள்ளதாக காட்டுகிறது இந்த கணக்கெடுப்பு.
கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கோவை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் சமீபத்தில் நடத்திய ஆய்வில் 20,000 வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாதது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, `20,000 வீடுகளில் தனிப்பட்ட கழிப்பறைதான் இல்லை. அங்கு போதிய இடவசதி இல்லாததால் தான் தனிப்பட்ட கழிப்பறைகள் கட்ட முடியவில்லை. ஆனால் அங்கெல்லாம் சமுதாய பொது கழிப்பிடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கழிப்பறை இல்லாமல் விடுபட்டு போன வீடுகள் 7,000. அத்தகைய வீடுகளை கண்டறிவதற்குதான் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த வீடுகளுக்கு இனிவரும் காலங்களில் படிப்படியாக கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்படும்` என்றார்.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் பொது சுகாதார துறை இயக்குநர் குழந்தைசாமி, `ஊரகப் பகுதிகளில் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவது பொது சுகாதார துறையின் பணியாக இருந்தது. பின்னர் அது ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் அது தொடர்பான பயிற்சிகளை பொது சுகாதாரத் துறைதான் தொடர்ந்து வழங்கி வருகிறது. கழிப்பறை வசதிகள் முறையாக இருப்பது சுகாதாரத்தின் அடிப்படையான அம்சம். தூய்மை இந்தியா திட்டத்தின் மிக முக்கியமான இலக்கும் அது தான்.
முன்பெல்லாம் திறந்த வெளி கழிப்பறை பயன்பாடு இல்லை என்று தான் நம்பப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தரவுகள் வந்த பிறகு தான் இதன் உண்மை நிலை தெரியவந்துள்ளது.
கிராமங்களில் கழிப்பறை வசதிகள் முறையாக இருந்தால்தான் நீர் மாசுபடாமல் இருக்கும். இதனால் தான் நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகமாகின்றன. கடந்த காலங்களில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெடுப்புகளால் பல முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளது என்பது உண்மைதான்.
அதே சமயம் சுகாதாரம் தொடர்பான பல்வேறு குறியீடுகளில் முன்னணியில் உள்ள தமிழ்நாடு இதில் பின் தங்கியுள்ளதையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். அரசு இதில் தனிப்பட்ட கவனம் செலுத்தி 100% இலக்கை அடைவதை உறுதி செய்ய வேண்டும்` என்றார்.
இந்த கட்டுரை தொடர்பாக கருத்து பெற ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், செயலாளர் மற்றும் இயக்குநரை தொடர்பு கொண்டபோது அவர்களின் இணைப்பை பெற முடியவில்லை. கருத்து கிடைக்கப்பெற்றவுடன் கட்டுரையில் இணைக்கப்படும்.