Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாய சட்டம் எதிர்ப்பு: டெல்லியில் டிராக்டருக்கு தீ வைப்பு, தமிழக திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் - விரிவான தகவல்கள்

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (14:34 IST)
வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டெல்லியில் ராஷ்ட்ரபதி பவன் செல்லும் சாலையில் இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர் டிராக்டருக்கு தீ வைத்து போராட்டம் நடத்தினர்.

இந்திய வேளாண் அமைப்புகள் மற்றும் எதிர்க் கட்சிகளின் வேண்டுகோளை மீறி, பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசின் வேளாண் மசோதாக்களை சட்டமாக்க ஞாயிறு (செப்டம்பர் 27) மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இதனை அடுத்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மோதி அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

டெல்லியில் நடந்த போராட்டத்தில் இளைஞர் காங்கிரஸார் டிராக்டருக்கு தீ வைத்தனர்.

இது தொடர்பாக அவர்கள் பகிர்ந்துள்ள ட்வீட்டில், “நம் விவசாயிகளின் ரத்தத்திலும் வியர்வையிலும் நம் நாடு வளர்கிறது. பிரிட்டனுக்கு எதிரான போராட்டம் ஆகட்டும், நமக்கு உணவளிப்பது ஆகட்டும் விவசாயிகளே நமது நாட்டின் முதுகெலும்பு. பகத்சிங் பிறந்தநாளான இன்று வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இளைஞர் காங்கிரஸ் டிராக்டருக்கு தீ வைத்தோம்,” என ட்வீட் செய்துள்ளனர்.

இந்த காணொளியானது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகியன கடும் அமளிக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேறின.

இந்த மசோதாக்களுக்கு கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் போராட்டம்

தமிழகத்திலும் வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டம் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டங்களை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் முன்னர் அறிவித்திருந்தார். அதன்படி அந்த சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி கிராமத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் விரோதச் சட்டங்களை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், அதற்கு துணையாக இருக்கும் அதிமுக அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

பச்சைத் துண்டு, பச்சை நிற மாஸ்க் அணிந்தபடி மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.

“விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டத்துக்கு அதிமுக துணை போய் உள்ளது. தன்னை விவசாயி எனக் கூறும் முதல்வர் தான் விவசாயிகளுக்கு எதிரான செயல்பாட்டை ஆதரிக்கிறார்,” என குறிப்பிட்டார்.

சென்னை வடக்கில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரியும், சென்னை தெற்கில் வைகோவும், கடலூரில் திருமாவளவன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து.. விஜய்யின் திட்டம்..!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பில்.. அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரம்..!

புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்.. எந்தெந்த நகரங்களுக்கு? எப்போது?

சென்னையில் நவம்பர் 12 வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments