Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பல்லு படாம பார்த்துக்க: இது அடல்ட் காமெடியா, அசட்டு காமெடியா?

பல்லு படாம பார்த்துக்க: இது அடல்ட் காமெடியா, அசட்டு காமெடியா?
, சனி, 4 மார்ச் 2023 (10:15 IST)
பல்லு படாம பார்த்துக்க: இது அடல்ட் காமெடியா, அசட்டு காமெடியா?
 
தமிழில் வயதுவந்தோரைக் குறிவைத்து எடுக்கப்படும் 'அடல்ட் காமெடி' வகைத் திரைப்படங்கள், எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால், படத்தைப் பார்க்கும்போது ஏமாற்றத்தையே தருகின்றன. ஏன் இப்படி?
 
'டெம்பிள் மங்கீஸ்' யூ டியூப் சேனல் மூலம் புகழ்பெற்ற விஜய் வரதராஜ் இயக்கிய 'பல்லுப் படாம பாத்துக்க' என்ற அடல்ட் காமெடி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தலைப்பிலேயே இது வயதுவந்தோருக்கான பாலியல் சார்ந்த நகைச்சுவைத் திரைப்படம் என்பதைச் சுட்டுவதைப் போல இருக்கிறது. இந்தத் தலைப்பின் மூலம், இளைஞர்களை ஈர்க்க முடிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
 
தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்து 'குஞ்சுத்தண்ணி காடு' என்ற கேரள வனப் பகுதிக்கு ஆறு பேர் செல்கிறார்கள். ஆறு பேருக்கும் வெவ்வேறு விதமான பின்னணிக் கதை இருக்கிறது. ஆனால், அந்தக் காட்டிற்குப் போன பிறகுதான் நிறைய 'ஜோம்பி'கள் அங்கு இருப்பது தெரிகிறது. அவற்றை ஒழித்துக்கட்ட கதாநாயகி முயன்றுகொண்டிருக்கிறார். அவரோடு இவர்களும் சேர்ந்துகொள்கிறார்கள். 'ஜோம்பி'கள் யாரையாவது கடித்துவிட்டால், கடிபட்டவரும் ஜோம்பியாகிவிடுவார் என்பதால்தான் படத்திற்கு இந்தத் தலைப்பாம். நல்ல சிந்தனைதான். ஆனால், இந்தத் தலைப்பைத் தவிர, படத்தில் ஏதுமில்லை என்பதுதான் ஏமாற்றமளிக்கிறது.
webdunia
இந்தப் படத்தில் அடல்ட் காமெடி படங்களுக்கென்றே உள்ள ஷாரா, தினேஷ், லிங்கா, சஞ்சிதா ஷெட்டி, சாய் தீனா, ஜெகன், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த் ராஜ், ஹரீஷ் பொராடி ஆகியோர் நடித்துள்ளனர்.
 
 
தலையும் புரியாமல், காலும் புரியாமல் வெறும் தலைப்பை மட்டுமே நம்பி உருவாக்கப்பட்ட படமாக இது வெளியாகியிருக்கிறது. ஒரு நல்ல திரைப்படத்திற்குத் தேவையான திரைக்கதை, புரியும் வகையில் கதையைச்சொல்வது, சிறந்த காட்சி அமைப்பு, நல்ல ஒளிப்பதிவு என எதுவுமே இல்லாமல் வெறும் சில இரட்டை அர்த்த வசனங்களை மட்டும் நம்பி இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
 
பின்னணியில் லேசாக கதையை வைத்துக்கொண்டு, பாலியல் சார்ந்த வசனங்களின் மூலமே கலகலப்பூட்ட நினைத்திருக்கும் இந்தப் படத்தில் ஓரினச் சேர்க்கை குறித்த கேலியான அம்சங்கள் நிறைந்திருப்பதும் ஒரு நகைமுரண்தான்.
 
சுமார் ஒன்றேமுக்கால் மணி நேரம்தான் ஓடுகிறது என்றாலும், அவ்வளவு நேரத்திற்கு இந்தப் படத்தைப் பார்ப்பதே பெரிய தண்டனைதான்.
 
ஹாலிவுட்டில் இதுபோன்ற திரைப்படங்களை மிகுந்த கவனத்துடன், பாலியல் சார்ந்த நகைச்சுவைக் கூறுகளைப் பயன்படுத்தி உருவாக்குகிறார்கள். American Pie 1 மற்றும் 2, The 40 Year Old Virgin, Super Bad, Plus one, Zack and Miri Make a Porno,Girls Trip என பல அட்டகாசமான அடல்ட் காமெடி திரைப்படங்கள் ஹாலிவுட்டில் வெளியாகியிருக்கின்றன.
 
ஆனால், இந்தியாவில் இந்த பாணி திரைப்படங்கள் பெரும்பாலும் சொதப்பலாகவே வெளியாகியிருக்கின்றன. தமிழில் இதற்கு முன்பாக சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. குறிப்பாக 2013ல் வெளியான யாருடா மகேஷ், 2017ல் வெளியான ஹரஹர மகாதேவகி, 2018ல் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து, 2019ல் வெளியான இரண்டாம் குத்து, யாமிருக்க பயமே ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை.
 
இந்த நான்கு படங்களுமே ரசிகர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றன. இதில் சில படங்களுக்கு நான்கு மணிக் காட்சிகூட திரையிடப்பட்டது. இதில் யாருடா மகேஷ் படத்தைத் தவிர்த்த, மற்ற படங்கள் அனைத்தும் பாலியல் சார்ந்த நகைச்சுவை, இரட்டை அர்த்த வசனங்கள் ஆகியவற்றின் மூலம் இளைஞர்களின் கவனத்தைப் பெற்றன.
 
ஆனால், அதற்குப் பிறகு அந்தப் போக்குத் தொடரவில்லை. அந்த சமயத்தில் உருவான திரைப்படம்தான், இந்த 'பல்லுப் படாம பாத்துக்க' திரைப்படம். எடுத்து முடித்து வெகுநாட்களுக்குப் பிறகு வெளியாகியிருக்கிறது.
 
"ஹாலிவுட்டில் தொடர்ச்சியாக இதற்கென ஒரு மரபு இருக்கிறது. ஆனால், அப்படியான மரபே தமிழ் சினிமாவில் இல்லை. மைய நீரோட்ட படங்களில் நடிக்கும் சில நகைச்சுவை நடிகர்கள் குறிப்பாக வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ்.எஸ். சந்திரன் போன்ற சிலர் நகைச்சுவை டிராக்கில் இரட்டை அர்த்த வசனங்களை முயற்சி செய்திருக்கிறார்கள். மற்றபடி முழு நீளத் திரைப்படமாக அதற்கான மரபு இல்லை" என்கிறார் திரைக்கதை எழுத்தாளரான அதிஷா.
 
மேலும், இம்மாதிரி படங்களை உருவாக்குவது மிகக் கடினம் என்கிறார் அவர். "அடல்ட் கமெடி படம் சற்றுத் தவறினாலும் அருவெருக்கத்தக்கதாக மாறிவிடும். திரைப்பட ரசிகர்களிடமுமே இம்மாதிரி படங்களை பார்க்கும் மரபு இல்லை. இது தவிர, இந்தியாவில் தணிக்கை முறையும் மிகக் கடுமையாக இருக்கிறது. அதனாலேயே தயாரிப்பாளர்கள் இதிலிருந்து விலகியிருக்கிறார்கள். அதனாலேயே இதற்கென கதைகளோ, திரைக்கதையோ எழுதக்கூடியவர்கள் உருவாகவில்லை" என்கிறார் அதிஷா.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் சாலை விபத்தில் மரணம்: முதல்வர் இரங்கல்..!