சென்டினல் தீவிலுள்ள பழங்குடியினர் குறித்து இந்தியர் ஒருவரை தவிர வேறு யாருக்கும் அதிக விஷயங்கள் தெரிந்திருக்காது. அவர் மானுடவியலாளர் டி.என்.பண்டிட்.
இந்தியாவின் பழங்குடி விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் பிராந்திய தலைவராக இருந்த பண்டிட் தனித்துவிடப்பட்டுள்ள இந்த தீவில் உள்ள மக்களை சந்திக்க பல தசாப்தங்களை செலவிட்டுள்ளார்.
லட்சக்கணக்கான ஆண்டுகளாக உலகின் தொடர்பிலிருந்து துண்டித்து தனித்திருக்கும் இந்த பழங்குடிகள், 27 வயது அமெரிக்கர் ஒருவர் சுவிசேஷத்தை பரப்புவதற்காக அந்த பழங்குடிகளை சந்திக்க சென்ற பிறகு கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாயானதன் பின்னர் கடந்த வாரம் உலகம் முழுவதும் கவனம் பெற்றனர்.
ஆனால் 84 வயதாகும் பண்டிட், தனது அனுபவத்தில் இருந்து அந்த பழங்குடி குழுவானது அமைதியை விரும்பக்கூடியது என்றும், அவர்கள் பயங்கரமானவர்கள் போல் சித்தரிப்பது நியாயமற்றது என்றும் தெரிவித்துள்ளார்.
''நாங்கள் அவர்களுடன் தொடர்புகொண்டபோது அவர்கள் எங்களை எச்சரித்தனர் ஆனால் எங்களை கொலை செய்யவோ காயப்படுத்தவோ செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகவில்லை. எப்போதெல்லாம் அவர்கள் ஆத்திரமடைந்தார்களோ அப்போதெல்லாம் நாங்கள் பின்வாங்கிவிட்டோம்'' என பிபிசி உலக சேவையிடம் தெரிவித்தார் பண்டிட்.
''அமெரிக்காவில் இருந்து அவ்வளவு தூரம் பயணித்து அங்கே சென்று மரணமடைந்த அந்த இளைஞனுக்காக நான் வருத்தப்படுகிறேன். ஆனால் அவர் தவறு செய்துவிட்டார். அவர் தன்னை காப்பாற்றிக்கொள்ள வாய்ப்பிருந்தும் விடாப்பிடியாக இருந்ததால் தனது வாழ்க்கையையே விலையாக கொடுத்திருக்கிறார்,'' என்கிறார் பண்டிட்.
பண்டிட் முதல் முறையாக 1967-ல் ஆய்வுக் குழுவின் பயணம் ஒன்றின் பகுதியாக தனித்துவிடப்பட்டுள்ள பழங்குடிகள் வசிக்கும் வடக்கு சென்டினல் தீவுக்கு சென்றுள்ளார்.
முதலில் அத்தீவுக்கு வருகை தருபவர்களின் பார்வையில் இருந்து மறைவதற்காக காடுகளில் அந்த சென்டினல் பழங்குடியினர் ஒளிந்துகொண்டனர். அதன் பிறகான பயணங்களில் அம்புகளால் தாக்கத் துவங்கினர்.
மானுடவியலாளர்கள் எப்போதும் சென்டினல் தீவுக்கு பயணிக்க தங்களுடன் சில பொருள்களை எடுத்துச் செல்வார்கள். ஏனெனில் அப்பொருள்கள் மூலம் பழங்குடிகளுடன் ஒரு தொடர்பை உருவாக்க முயற்சித்தனர்.
நாங்கள் பானைகள், உலோக தட்டுகள், பெரிய அளவிலான எண்ணிக்கையில் தேங்காய்கள், சுத்தியல் மற்றும் பெரிய கத்தி முதலான இரும்பு பொருள்கள் ஆகியவற்றை பரிசாக எடுத்துச் சென்றிருந்தோம். மேலும் சென்டினல் பழங்குடியினர் பேசுவதை புரிந்துகொள்வதற்கும் அவர்களின் நடத்தையை அறிந்துகொள்ளவும் மற்ற மூன்று பழங்குடியை அழைத்துச் சென்றோம்.
''ஆனால் சென்டினல் பழங்குடியினர் கோபமான மற்றும் கடுமையான முகத்துடன் நின்று, வில் மற்றும் அம்புகளோடு தங்களது நிலத்தை பாதுகாக்க எங்களை எதிர்கொண்டனர்."
"நாங்கள் சிறிய வெற்றியை பெற்றவுடன், மர்மமான அச்சமூகத்தினருடன் தொடர்பை பேணுவதற்காக பரிசுகளை அங்கே விட்டுவிட்டு வந்துவிடுவோம். ஒருமுறை பன்றி ஒன்றை பரிசாக வழங்கியதை கவனித்த பிறகு அவர்கள் அதனை கொன்று அவர்களது நிலத்தில் புதைத்தனர். இது நிச்சயம் அப்பரிசுகளை அக்குழு வரவேற்கவில்லை என்பதை உணர்த்தியது'' என்கிறார் பண்டிட்.
தொடர்பு கொள்ளுதல்
பல முறை அவர்களை தொடர்புகொள்வதற்கு மேற்கொண்ட பயணங்கள் தோல்வியில் முடிந்த நிலையில், 1991-ல் முதன்முறையாக கடலில் அப்பழங்குடியினர் அமைதியான ஒரு அணுகுமுறையை கடைபிடித்தனர்.
எப்படி எங்களை அனுமதித்தார்கள் என்பதில் எங்களுக்கு ஆச்சர்யம் இருந்தது. எங்களை சந்திக்க முடிவெடுத்தது அவர்களே. மேலும், அவர்கள் விரும்பியபடியே எங்கள் சந்திப்பு நடந்தது'' என பண்டிட் விவரிக்கிறார்.
''நாங்கள் கப்பலில் இருந்து குதித்தோம் மேலும் கழுத்துவரை ஆழமுள்ள நீரில் நின்றுகொண்டிருந்தோம். நாங்கள் தேங்காய் மட்டுமின்றி வேறு சில பரிசுகளையும் வழங்கினோம். ஆனால் அவர்களது நிலத்துக்குள் நுழைய அனுமதியளிக்கவில்லை''
"நான் தாக்கப்படக்கூடும் என்பது குறித்து பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால் அவர்களுடன் நெருங்கி இருக்கும்போது கவனமாக இருந்தேன்" என பண்டிட் தெரிவிக்கிறார்.
தனது குழுவின் மற்ற உறுப்பினர்கள் சைகை மூலமாக அந்த சென்டினலீஸ் மக்களை தொடர்புகொள்ள முயற்சித்ததாகவும் ஆனால் அவர்கள் ஏற்கனவே பரிசுகளோடு இருந்ததால் அவர்களின் முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை.
அவர்கள் தங்களுக்குள்ளாகவே பேசிக்கொண்டார்கள். ஆனால் எங்களால் அந்த மொழியை புரிந்துகொள்ள முடியவில்லை. அதே பகுதியில் வாழும் மற்ற பழங்குடி மக்கள் பேசும் மொழியை ஒத்ததாக அவர்கள் மொழி இருந்தது'' என பண்டிட் நினைவுகூர்கிறார்.
'வரவேற்பு இல்லை'
மற்றொரு முறை பயணிக்கும்போது ஓர் இளம் பழங்குடி அவரை எச்சரித்ததை நினைவுகூர்கிறார் இம்மானுடவியலாளர்.
''நான் அவர்களுக்கு தேங்காய் வழங்கிக்கொண்டிருந்தபோது என்னுடைய குழுவில் இருந்து சற்றே நான் பிரிந்துவிட்டேன். மேலும் கடற்கரைக்கு நெருக்கமாக சென்றுவிட்டேன். ஒரு இளம் பழங்குடி வேடிக்கையாக முகத்தை வைத்துக்கொண்டு தனது கத்தியை காண்பித்தார். மேலும் எனது தலையை கொய்துவிடுவேன் என எச்சரித்தார். உடனடியாக நான் எனது படகை அழைத்து பின்வாங்கிவிட்டேன். அந்த சிறுவனின் உடல்மொழி நான் அங்கே வரவேற்கப்படவில்லை என்பதை தெளிவாக குறிப்புணர்த்தியது'' என விவரித்தார் பண்டிட்.
பரிசு வழங்கும் பயணங்களை இந்திய அரசு கைவிட்டபிறகு அயலர்கள் அந்தத் தீவுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
முழுமையாக அத்தீவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதன் காரணம் என்னவெனில் அயலர் ஒருவர் அங்கே சென்றால் அதனால் சென்டினலீஸ் மக்களுக்கு உயிருக்கு ஊறு விளைவிக்கும் நோய்கள் வரலாம் ஏனெனில் ஃப்ளூ காய்ச்சல் மற்றும் தட்டம்மை போன்ற வழக்கமான நோய்களை தாங்குவதற்கான எதிர்ப்புச் சக்தி அவர்களுக்கு கிடையாது.
தனது குழுவினர் எப்போதுமே தொற்றுநோய் குறித்து பரிசோதிக்கப்பட்டு ஆரோக்கியமாக இருப்பவர்கள் மட்டுமே வடக்கு சென்டினல் தீவுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதாக பண்டிட் கூறுகிறார்.
கடந்த வாரம் ஜான் ஆலன் சாவ் தனது பயணத்துக்கு அதிகாரப்பூர்வ அனுமதி எதையும் வாங்கவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அனுமதி வாங்குவதற்கு பதிலாக உள்ளூர் மீனவர்களிடம் 25 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு தன்னை அந்தத் தீவில் விடும்படி கூறியிருக்கிறார். அப்பழங்குடியினரை கிறித்தவர்களாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் அவர் சென்றதாக கூறப்படுகிறது. அவரது உடலை பெற தற்போது முயற்சிகள் நடக்கிறது.
பதற்றமான சந்திப்புகளை கடந்துவந்திருந்தாலும் சென்டினலீஸ் பழங்குடியினரை பகைமை உள்ளவர்களாக முத்திரை குத்துவதை எதிர்க்கிறார் திரு பண்டிட்.
''அவர்களை அப்படிப் பார்ப்பது தவறானது. நாம் இங்கே சண்டைக்காரர்களாக இருக்கிறோம். நாம்தான் அவர்களது எல்லையில் நுழைய முயன்றிருக்கிறோம்'' என இந்தியன் எக்ஸ்பிரஸிடம் அவர் தெரிவித்துள்ளார்.
''சென்டினலீஸ் பழங்குடியினர் அமைதியை விரும்புபவர்கள். அவர்கள் மக்களை தேடித் தாக்க விரும்புவதில்லை. அவர்கள் தங்களுக்கு அருகேயுள்ள பகுதிகளுக்கு கூடச் செல்வதில்ல. யாருக்கும் தொந்தரவு கொடுப்பதில்லை. இது மிகவும் அரிதான நிகழ்வு'' என அவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
பழங்குடிகளுக்கு நட்புணர்வோடு பறித்து போடும் திட்டத்தை மீண்டும் துவங்க விருப்பம் தெரிவிக்கும் பண்டிட், அப்பழங்குடியினரை தொந்தரவு செய்யக் கூடாது என்கிறார்.
''தனிமையாக வாழ விரும்பும் அவர்களது விருப்பத்தை நாம் மதிக்க வேண்டும்,'' என்றார் பண்டிட்.