Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 22 May 2025
webdunia

பதான்: 4 ஆண்டுக்கு பிறகு வெளியாகும் ஷாரூக் கான் திரைப்படம் - இத்தனை சர்ச்சையானது ஏன்?

Advertiesment
Pathan Shah Rukh Khan
, திங்கள், 23 ஜனவரி 2023 (10:14 IST)
பாலிவுட்டில் ஷாரூக் கான் நடிப்பில் அடுத்த வாரம் வெளியாகவுள்ள 'பதான்' திரைப்படம் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து  தலைப்புச் செய்திகளில் அடிபடுகிறது. 
 
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அதிக விரும்பப்படும் நட்சத்திரங்களில் ஒருவரான ஷாரூக் கான் மீதான ஆர்வம் இயல்பான ஒன்றுதான். வசீகரமான, வேடிக்கையான, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள அவர் பல நேரங்களில், 'பாலிவுட்டின் மிக முக்கியமான கலாசார ஏற்றுமதி' என்று வர்ணிக்கப்படுகிறார். அவரது ரசிகர்களோ ஷாரூக் கானை 'கிங் கான்' 'பாலிவுட்டின் ராஜா' என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றனர்.
 
4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஷாருக் கான் நடிப்பில் வெளியாகிறது பதான் திரைப்படம். 
 
 
 
57 வயதான ஷாரூக் கான், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமாவில் பல பின்னடைவுகளுக்குப் பிறகு வெள்ளித்திரையில் மீண்டும கால் பதிக்கும் படம் இது. அவரது மகன் ஆர்யன் கான் கடந்த ஆண்டு போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி கைது செய்யப்பட்டார். பின் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். கடைசியாக வெளிவந்த சில படங்கள் சரியாக ஓடவில்லை. 
 
 
 
இந்த இடைவெளியே ஷாரூக் கான் திரைப்படத்தின் மீதான ஆரவத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. அதேநேரத்தில், படத்தை அதிக ஆய்வுக்குட்படுத்தவும் வழிவகுத்துள்ளது. இந்த படத்தில் இந்தியாவின் மிகப் பிரபலமான நட்சத்திரங்களுள் ஒருவரான தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆப்ரஹாம் ஆகியோரும் நடித்துள்ளனர். 
Pathan Shah Rukh Khan
 டிசம்பர் மாதம் பதான் படப் பாடல்களின் விளம்பர வீடியோக்களை படக்குழு வெளியிடத் தொடங்கியதில் இருந்தே, இந்த படம் சமூக ஊடகங்களில் இடைவிடாத விவாதங்களுககு உட்பட்டது.
 
 
 
படத்தின் டிரெய்லர் கடந்த வாரம் வெளியிடப்பட்டதால், ரசிகர்களின் ஆவேசம் உச்சத்தை எட்டியுள்ளது.
 
 
 
யூ டியூபில் இந்த டிரைலர் 4.9 கோடிக்கும் அதிகமான முறை பார்வையிடப்பட்டிருந்தது. இந்தி டிரைலர் பற்றிய ஷாரூக் கானின் ட்வீட் 39 லட்சம் பார்வைகளைப் பெற்றது. தமிழ், தெலுங்கு பதிப்புகளுக்கு தலா 5 லட்சம் பார்வைகள் கிடைத்தன.
 
அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் டிக்கெட் முன்பதிவில் பதான் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 
 
ஆனால், பதான் படம் ஆரம்பம் முதலே சர்ச்சையில் சிக்கி வருகிறது. 
 
ஷாருக் கான் கடந்த காலத்திலும் பத்திரிகைகள் மற்றும் விமர்சகர்கள் தரப்பில் இருந்து விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். ஆனால், இந்தியாவில் வளர்ந்து வரும் மத சகிப்பின்மை பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து தெரிவித்ததில் இருந்து, ஷாரூக் கான் மீதான இந்து வலதுசாரி குழுக்களின் சரமாரியான தாக்குதல்கள் தனிப்பட்டதாகவும் ஒருங்கிணைந்ததாகவும் மாறியுள்ளன.
 
 
 
"மத அடையாளத்தை பிரதானப்படுத்தி  ஷாரூக் கான் இமேஜை கட்டமைக்க அவர்கள் முயல்வதால், அது ஒரு தனித்துவமான வகுப்புவாத கோணத்தை அடைந்துள்ளது" என்கிறார் எழுத்தாளரும் திரைப்பட விமர்சகருமான சைபல் சாட்டர்ஜி.
 
 
 
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, மதம், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பொழுதுபோக்கை மட்டுமே பிரதானமாகக் கொண்டதாக பாலிவுட் திகழ்ந்தது என்று அவர் கூறுகிறார். ஆனால், பாலிவுட் தற்போது அதிக அளவில் பிளவுபட்டுள்ளது என்று அவர் குறிப்பிடுகிறார். 
 
"அத்தகைய கடந்த காலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எஞ்சியுள்ள மிகச் சில நடிகர்களில் ஷாரூக் கானும் ஒருவர், அவரையும் முழுமையாக அழிக்க ஒரு தரப்பு விரும்புகிறது. அதனால்தான் அவரது மீள் வருகையை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை" என்கிறார் அவர். 
 
 
 
படம் 'பதான்' என்ற முஸ்லிம் பெயரை தாங்கியிருப்பதால் கொந்தளித்துப் போன தீவிர வலதுசாரி குழுக்கள், படத்தில் இடம் பெற்றுள்ள 'பேஷாராம் ராங்' என்ற பாடலில் நடிகை தீபிகா படுகோன் காவி வண்ண நீச்சல் உடை அணிந்திருந்ததை சர்ச்சையாக்கினார்கள். 
 
 
 
அந்த பாடலில் தீபிகா படுகோன் வெவ்வேறு வண்ண ஆடைகளை அணிந்து வந்த போதிலும், இந்து மதத்துடன் நெருங்கிய தொடர்புடைய காவி வண்ணத்தை பயன்படுத்தியதன் மூலம் இந்துக்களை ஷாரூக் கான் அவமதித்துவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர். 
 
அந்த பாடலை நீக்காவிட்டால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஷாரூக் கான் உருவபொம்மைகளை எரித்த போராட்டக்காரர்கள், பதான் பட போஸ்டர்களையும் கிழித்தனர். அத்துடன், இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், நிர்வாணம் மற்றும் ஆபாசத்தை ஊக்குவிப்பதாகவும் குற்றம்சாட்டி நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. 
 
பதான் படத்தை புறக்கணிக்க அழைப்பு விடுத்து, பழிக்கும் சொற்களுடன் ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் டிரென்ட் செய்யப்பட்டன.
 
 
 
பதான் பட ரிலீசுக்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்ட நிலையில், ஷாரூக் கானும், படக் குழுவும் பட விளம்பரத்தில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அதனை சூழ்ந்திருக்கும் சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறது. 
 
 
 
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் போது, இந்த படத்தின் விளம்பர வீடியோவில் ஷாரூக் கானுடன் கால்பந்து நட்சத்திரம் வெயின் ரூனியும் தோன்றினார். "உங்களின் சீட் பெல்ட்டை இறுக்கிக் கொள்ளுங்கள். வானிலை கொந்தளிப்பாக இருக்கப் போகிறது" என்ற ஷாரூக் கானின் வார்த்தைகளை அவர் மீண்டும் தெரிவித்தார். 
 
இவ்வார தொடக்கத்தில், துபாயில் புர்ஜ் கலிஃபா கட்டடத்தில் பதான் பட டிரைலரைப் பார்க்க ஏராளமானோர் கூடினர். அங்கு சென்ற ஷாரூக்கானை ரசிகர்கள் கொண்டாடினர். 
 
 
 
ஷாரூக் கானை நம்பி ரூ.250 கோடி பட்ஜெட்டில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்மறையான விமர்சனங்களால் படத்தின் வெற்றி பாதிக்கப்படுமோ என்று சிலர் கருதுகின்றனர். 
 
 
 
ஆனால், இந்த மதிப்பீட்டை சாட்டர்ஜி புறம் தள்ளுகிறார். 
 
"ஷாரூக் கான் ஒரு நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு பிராண்ட். நம் நாட்டில், குறிப்பாக பாலிவுட்டில் உள்ள பிராண்ட்களில் மிகப் பெரியது" என்று அவர் கூறுகிறார்.
 
 
 
'Desperately Seeking Shah Rukh Khan' புத்தகத்தின் ஆசிரியர் ஷ்ராயனா பட்டாச்சார்யா கூறுகையில், ரசிகர்கள் "அவரை மதம் அல்லது அரசியல் கணக்கீடுகளுக்குள் குறுக்கி விட மாட்டார்கள்" என்று குறிப்பிடுகிறார். 
 
 
 
"ஷாரூக் கானை திரையில் இவ்வளவு நாள் காண முடியாத அவர்கள், பதான் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பார்கள்" என்று அவர் மேலும் கூறுகிறார். 
 
 
 
ஆனால், 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஷாரூக் கான் மீண்டும் பெரிய திரைக்கு வருவதற்கு ஸ்பை-த்ரில்லர் வகை படம்தான் சரியானதா என்று சிலர் யோசிக்கிறார்கள்?
 
 
 
பாலிவுட்டில் ஒரு காதல் நாயகனாக, காதலை வரையறுக்கும் நடிகராகவே ஷாரூக் கான் முத்திரை பதித்துள்ளார். ஷாரூக்கின் ரசிகர் பட்டாளத்தில் பெரும்பகுதியாக உள்ள பெண்கள், அவரை ஒரு அதிரடி ஹீரோவாக பார்க்க ஆர்வம் காட்டாமல் போகலாம். 
 
சில நாட்களுக்கு முன்பு பேசிய ஷாரூக் கான்,  தான் ஆக்ஷன் ஹீரோவாக  இருக்கவே விரும்பியதாகவும், பதான் படத்தில் அந்த கனவு நனவாகி இருப்பதாகவும் கூறினார். 
 
 
 
இந்த திரைப்படம் ஒரு துணிச்சலான யோசனை என்று சாட்டர்ஜி தெரிவிக்கிறார். 
 
 
 
கடந்த சில ஆண்டுகளாகவே, மை நேம் இஸ் கான், சக் தே இந்தியா மற்றும் லவ் யூ ஜிந்தகி போன்ற வித்தியாசமான கதைகளில் மாறுபட்ட வேடங்களிலும் ஷாரூக் நடித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். 
 
 
 
பதான் படத்தின் மூலம் தன் மீது கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பத்தை ஷாரூக் கான் உடைக்கிறார் என்பது தெளிவாகிறது என்கிறார் அவர். 
 
"வாழ்க்கையின் இந்த கட்டத்தில், அவரால் அதைச் செய்ய முடியும். அச்சமில்லாத அவர் பரிசோதனை முயற்சிகளை தொடர்கிறார். அவர் இழப்பதற்கு எதுவும் இல்லை." என்று சாட்டர்ஜி கூறுகிறார். 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாரத்தின் முதல் நாளே எகிறிய சென்செக்ஸ்.. 61 ஆயிரத்தை தாண்டியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!