Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''இந்திய ராணுவத்தை கேள்வி கேட்பவர்கள் ஆன்டி- இந்தியர்கள்'' - எச்.ராஜா

Webdunia
புதன், 27 மார்ச் 2019 (11:10 IST)
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசியச் செயலர் எச். ராஜா.
 
இந்த மக்களவைத் தேர்தலில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தோடு (அ.இ.அ.தி.மு.கவோடு) பா.ஜ.க கூட்டணி அமைத்திருப்பதால் பெரும் உற்சாகத்துடன் காணப்படும் ராஜா, வெற்றி நிச்சயம் என்கிறார். 
 
கேள்வி:திராவிட முன்னேற்ற கழகமும் (திமுக) காங்கிரஸ் கட்சியும் அதிக முறை வெற்றி பெற்றுள்ள சிவகங்கைத் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறீர்கள். வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறீர்களா?
 
பதில்:மிகப் பிரகாசமாக இருக்கிறது. 1999ஆம் ஆண்டில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பைப் தவறவிட்டேன். அப்போது ப. சிதம்பரத்தைவிட ஒரு லட்சம் வாக்குகளை அதிகம் பெற்றேன்.
 
கடந்த முறை போட்டியிட்டபோது தோற்றாலும் கார்த்தி சிதம்பரத்தைவிட 30 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றேன். இப்போது இந்தத் தொகுதியில் போட்டியிடும் அனைவரும் செல்வாக்கற்றவர்கள். இந்தப் பகுதியில் அ.தி.மு.க. - பா.ஜ.க. வாக்குகளை இணைத்தால் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் வாய்ப்பு இருக்கிறது.
 
இந்தத் தொகுதியில் கார்த்தி சிதம்பரத்திற்கு வாய்ப்புக் கொடுத்தது, காங்கிரஸ்காரர்கள் மத்தியில் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
2014ஆம் ஆண்டில் அவர் போட்டியிடும்போது அவர் மீது வழக்குகள் இல்லை. இப்போது அமலாக்கத் துறை முதற்கொண்டு, பல வழக்குகளை அவர் சந்தித்து வருகிறார்.
 
ஜாமீனில் இருக்கும் வேட்பாளரை எந்த வாக்காளரும் விரும்ப மாட்டார்கள். நான் செல்லும் இடங்களில் எல்லாம் பெரும் வரவேற்பளிக்கிறார்கள் மக்கள். ஆகவே நான் வெற்றிபெறுவது நிச்சயம்.
 
கே:அ.தி.மு.கவில் வாய்ப்புக் கிடைக்காத கோபத்தில் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தி.மு.கவிற்கு வந்திருக்கிறார். இந்தப் பகுதியில் செல்வாக்குமிக்க அவரது பிரசாரம் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா?
 
ப: நான் ஒரு தகுதி வாய்ந்த வேட்பாளர் என ராஜ கண்ணப்பனே கூறியிருக்கிறார். ஆகவே அவரால் பிரச்சனையே கிடையாது. இந்தப் பகுதியில் எல்லோராலும் நேசிக்கப்படும் ஆள் நான். யாருக்கு பிரச்சனை வந்தாலும் பேசித் தீர்ப்பேன். யாருடைய பிரச்சனையாக இருந்தாலும் தீர்ப்பேன். அதனால் மக்கள் என்னை விரும்புகிறார்கள்.
 
கே: மத்தியில் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியில் இருக்கிறது. மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கிறது. இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் நிலையில், ஆளும் கட்சிகளுக்கு எதிரான உணர்வு இரு மடங்காக அல்லவா இருக்கும்? எப்படி சமாளிப்பீர்கள்?
 
ப: 'ஆன்டி - இன்கம்பன்சி' அல்ல, 'ப்ரோ - இன்கம்பன்சி'தான் இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு இதனை உலகம் ஒப்புக்கொள்ளும். சிவகங்கைத் தொகுதியைப் பொறுத்தவரை 72 சதவீதம் கிராமப்புற பகுதியைக் கொண்டது. இங்கு பெரும்பாலானவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள்.
 
இவர்கள் எல்லாம் என்னை வெகுவாக ஆதரிக்கிறார்கள். நான் காரைக்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, அந்த காரைக்குடி தொகுதி நம் மக்களவைத் தொகுதிக்குள் வருகிறது என்பதில் இவர்கள் பெருமையடைந்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
 
மாநில அரசும் ஏழை மக்களுக்கு நிறைய செய்திருக்கிறது. சமீபத்தில்கூட உதவித் தொகையாக 2,000 ரூபாய் வழங்கினர்.
 
இதையெல்லாம் தவிர, மக்களுக்கு இப்போது மோதியைவிட்டால் வேறு எந்த வாய்ப்பும் இல்லை. இப்போது வேறு கட்சிகளுக்கு வாய்ப்பளித்தால், 1989ல் வி.பி. சிங்கின் அரசு 11 மாதத்தில் கவிழ்ந்ததைப்போல, தேவகௌடா அரசு 11 மாதத்தில் கவிழ்ந்ததைப் போன்ற நிலைதான் ஏற்படும்.
 
அரசு நிலையாக இல்லாவிட்டால், தேசத்தின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்படும் அதனை மக்கள் விரும்ப மாட்டார்கள்.
 
ராகுல் காந்தியை எந்தக் கட்சியும் பிரதமராக ஏற்க மாட்டார்கள். எதிரெதிரில் முகம் பார்த்துக்கொள்ளாத மாயாவதியும் அகிலேஷ் யாதவும்கூட ராகுல் காந்திக்கு எதிராகக் கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆகவே, மோதிதான் மீண்டும் பிரதமர்.
 
கே: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அ.மு.மு.க.) என்ற பெயரில் தனித்து நிற்கும் தினகரன், அ.தி.மு.கவின் வாக்குகளைப் பிரிப்பாரே..
 
ப: அ.மு.மு.க. சார்பில் நிற்கும் வேட்பாளர் மாவட்ட அளவிலோ, மக்களவைத் தொகுதி அளவிலோ செயல்பட்டவர் அல்ல. வெறும் ஒன்றிய அளவில் செயல்பட்டவர். அவரால் எந்த அளவுக்கு வாக்குகளைப் பிரிக்க முடியும் எனத் தெரியவில்லை.
 
இவரைப் போன்றவர்கள் மக்களவையில் என்ன செய்ய முடியும்? 1984ல் இருந்து ப. சிதம்பரம் 7 முறை இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றிருக்கிறார். அவரால் இந்தத் தொகுதிக்கு எந்த பயனாவது உண்டா?
 
ஆனால், கன்னியாகுமரி தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணன் ஒரு முறைதான் வெற்றிபெற்றார். ஆனால், 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறார்கள். நாங்கள் திரும்ப ஆட்சிக்கு வந்தால், தமிழகத்திற்கு அள்ளிக் கொடுப்போம்.
 
கே: காங்கிரஸ் அறிவித்திருக்கும் குறைந்தபட்ச வருவாய்த் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றதாகத் தெரிகிறது..
 
ப: இதெல்லாம் பொருளாதார அறிவிப்பு இல்லாமல் சொல்லப்படும் அறிவிப்புகள். இதையெல்லாம் செயல்படுத்த பணம் எங்கே இருக்கிறது? இதையெல்லாம் ஒருபோதும் செயல்படுத்த முடியாது.
 
கே: நீங்கள் எப்போதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிவருகிறீர்கள். அது உங்களுக்கு எதிராக அமையாதா?
 
ப: நான் அப்படி ஏதும் பேசவில்லையே..
 
கே:கேள்வி கேட்பவர்களை ஆன்டி - இந்தியன் என்று சொல்கிறீர்கள்.. பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்றீர்கள்..
 
ப: நாட்டை வெட்டிப் பிளப்பேன் என்பவர்கள், தமிழ்நாடு இந்தியாவின் அண்டை நாடு என்பவர்கள் ஆன்டி - இந்தியன்தான்.
 
அமெரிக்கா பாகிஸ்தானுக்குள் புகுந்து பின் லேடனைக் கொன்றபோது, அமெரிக்கர்கள் யாரும் பின் லேடனின் உடல் எங்கே எனக் கேட்கவில்லை.
 
ஆனால், புல்வாமா தாக்குதலையடுத்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தினால், இறந்துபோன பாகிஸ்தான் வீரர்களின் உடலைக் காட்ட வேண்டுமெனக் கேட்கிறார்கள் சிலர்.
 
இப்படி ராணுவத்தை கேள்வி கேட்பது தேச விரோதமில்லையா.. அவர்கள் ஆன்டி - இந்தியன்தானே..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments