விழுப்புரத்தைச் சேர்ந்த தாதா ஒருவர் காவல்துறையுடன் நடந்த மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சென்னை கொரட்டூரில் நடந்த இந்த மோதலில் காவல்துறையினர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா குயிலாப்பளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மீது பல குற்றவழக்குகள் ஆரோவில் காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இவர் கடந்த இருபது நாட்களாக சென்னை அண்ணா நகர் மேற்கு விரிவாக்கப் பகுதியில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கியிருந்ததாக காவல்துறை தெரிவிக்கிறது.
இவரைத் தேடிவந்த விழுப்புரம் தனிப்படை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமையன்று மாலை ஏழு மணியளவில் அந்த வீட்டிற்கு வந்தபோது, மணிகண்டன் தன் கையில் வைத்திருந்த கத்தியால் ஆரோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபு என்பவருடைய தலையில் தாக்கியதாகவும் இதைடுத்து உடனிருந்த உதவி ஆய்வாளார் பிரகாஷ் என்பவர் தன்னிடமிருந்த துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.
இதில் மணிகண்டன் உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. காயமடைந்த உதவி ஆய்வாளர் பிரபுவும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாக காவல்துறை கூறுகிறது.