பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கின் ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார் பிரசாந்த் கிஷோர்.
பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கின் ஆலோசகர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார், அரசியல் உத்திகள் வகுப்பாளராக பரவலாக அறியப்படும் ஐபோக் ஆலோசனை நிறுவன உரிமையாளர் பிரசாந்த் கிஷோர்.
இது தொடர்பான தமது நிலையை முதல்வர் அமரிந்தர் சிங்கிடம் தெரிவித்த அவர், "இந்த பொறுப்பை தற்போது கையாளும் நிலையில் நான் இல்லை," என்று கூறியிருப்பதாக தெரிய வந்துள்ளது.
அவரது பதவி விலகல் முடிவு தொடர்பாக ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியில், "பொதுவாழ்வில் இருந்து தான் தற்காலிகமாக ஓட்வு எடுக்க விரும்புவதாகவும், முதல்வரின் முதன்மை ஆலோசகர் பொறுப்பில் முழு நேரமும் ஈடுபட தன்னால் இயலாது என்றும் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங்கின் வெற்றிக்காக தமது ஐபேக் நிறுவனம் மூலம் உத்திகள் வகுத்துக் கொடுத்தார் பிரசாந்த் கிஷோர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போதும் அவர் அமரிந்தர் சிங்குக்காக உழைத்தார்.
அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் கூடிய முதல்வரின் முதன்மை ஆலோசகர் பதவியை வழங்கினார் அமரிந்தர் சிங். இதன் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரசாந்த் கிஷோரின் உத்திகள் வழங்கும் உறுதிப்படுத்தியிருந்தார் அமரிந்தர் சிங்.
இதற்கிடையே, அரசியல் உத்திகள் வகுப்பு பணியில் இருந்து தாம் விலகிக் கொள்ளப் போவதாகவும், அந்த பணியை இனி தமது ஐபேக் நிறுவனத்தின் சிறந்த நிர்வாகிகளே கவனிப்பார்கள் என்றும் பிரசாந்த் கிஷோக் அறிவித்தார்.
ஆனால், கடந்த மாதம் அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி ஆகியோரை சந்தித்த நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரையும் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார்.
ஒருபுறம் எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான அணியை கட்டியெழுப்ப பிரசாந்த் கிஷோர் உத்திகளை வகுப்பதாக பேசப்பட்டாலும், அவர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களை சந்தித்திருப்பதன் மூலம் அந்த கட்சியிலேயே அவர் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளலாம் என்றும் பேச்சு அடிபட்டது.
இது குறித்து எந்த கருத்தையும் பிரசாந்த் கிஷோர் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், அமரிந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகர் பணியில் இருந்து விலகும் அறிவிப்பை பிரசாந்த் கிஷோர் வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நிகழ்வாக கருதப்படுகிறது.