தமிழ், மலையாளத் திரைப்படங்களில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்த பிரதாப் போத்தன், நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். பல படங்களை இயக்கியவர். இவர் இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70.
கடந்த சில நாட்களில் அவர் எழுதிய ஃபேஸ்புக் பதிவுகளில் அவர் மரணம் குறித்து பேசிவந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகர், இயக்குனர், விளம்பரப் பட இயக்குனர் என பல அடையாளங்களைக் கொண்ட பிரதாப் போத்தன், 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருவனந்தபுரத்தில் குலத்திங்கள் போத்தன் - பொன்னம்மா தம்பதிக்கு பிறந்தார். ஊட்டி லவ்டேலில் உள்ள லாரன்ஸ் பள்ளிக்கூடத்தில் தனது பள்ளிப் படிப்பை முடித்த பிரதாப் போத்தன், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பொருளாதாரம் பயின்றார்.
தொடக்கத்தில் ஓவியத்தில் ஈடுபாடு கொண்டிருந்த பிரதாப் போத்தன், பிறகு நடிப்பின் மீது ஆர்வம் கொண்டார். கல்லூரியை முடித்த பிறகு தி மெட்ராஸ் பிளேயர்ஸ் நாடகக் குழுவில் நடித்துவந்தார் பிரதாப். பெர்னாட் ஷா எழுதிய 'ஆன்ட்ரோக்ளிஸ் அண்ட் தி லயன்' நாடகத்தில் பிரதாப்பின் நடிப்பைப் பார்த்து ஈர்க்கப்பட்ட இயக்குனர் பரதன் அவரை 1978ல் 'அரவம்' என்ற மலையாளப் படத்தில் அறிமுகப்படுத்தினார்.
'அழியாத கோலங்கள்'
1979ல் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான 'அழியாத கோலங்கள்' திரைப்படம்தான் பிரதாப் போத்தனுக்கு தமிழில் முதல் படம். டைட்டில் கார்டில் 'பிரதாப்' என்றே குறிப்பிடப்பட்டார். ஜீன்ஸ் - சட்டை அணிந்து கலைந்த தலையுடன் பேருந்திலிருந்து இறங்கி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான பிரதாப் போத்தன், அதற்கடுத்த நாற்பதாண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் ஒரு நிழலாகத் தொடர்ந்துகொண்டிருந்தார். அந்தப் படத்தில் அவருக்கு ஒரு சிறிய பாத்திரம்தான் என்றாலும், முதல் படத்திலேயே கவனிக்க வைத்தார்.
'அழியாத கோலங்கள்' படத்திற்குப் பிறகு, 'இளமைக் கோலம்', 'மூடுபனி', 'வறுமையின் நிறம் சிவப்பு', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'கரையெல்லாம் செண்பகப்பூ', 'பன்னீர் புஷ்பங்கள்', 'சொல்லாதே யாரும் கேட்டால்' என்று தொடர்ந்து நெஞ்சில் நிற்கும் படங்களாக நடித்தார் பிரதாப் போத்தன்.
1985ல் பிரதாப் போத்தன் எழுதி, இயக்கிய 'மீண்டும் ஒரு காதல் கதை' திரைப்படம் வெளிவந்தது. வெற்றிகரமான இந்தப் படத்திற்கு அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருதும் கிடைத்தது. இதற்குப் பிறகு 'ஜீவா', 'வெற்றி விழா', 'மைடியர் மார்த்தாண்டன்' என இவர் இயக்கிய படங்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவையாகவும் வசூல் ரீதியில் வெற்றிபெற்ற படங்களாகவும் அமைந்தன. 1994ல் இவர் இயக்கி வெளிவந்த 'சீவலப்பேரி பாண்டி'யும் நல்ல கவனத்தைப் பெற்றது.
1997ல் வெளிவந்த 'தேடினேன் வந்தது' படத்திற்குப் பிறகு, நடிப்பிலிருந்து விலகியிருந்த பிரதாப் போத்தன், 2005ல் வெளிவந்த 'பிரியசகி', 'ராம்' படங்களின் மூலம் 'ரீ - என்ட்ரி' கொடுத்தார். அதற்குப் பிறகு தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களில் தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடித்துவந்தார் பிரதாப் போத்தன்.
1985ல் தன்னுடன் நடித்த திரைக்கலைஞர் ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்த திருமணம் வெகுநாட்கள் நீடிக்கவில்லை. 1986லேயே அவரை விவாகரத்து செய்தார். பிறகு, 1990ல் அமலா சத்யநாத் என்பவரைத் திருமணம் செய்தார். அந்தத் தம்பதிக்கு கேயா போத்தன் என்ற குழந்தை இருக்கிறது.
இவர் தற்போது க்ரீன் ஆப்பிள் என்ற விளம்பர நிறுவனத்தை நடத்திவந்தார்.
இறப்பதற்கு முந்தைய சில தினங்களில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வாழ்வு குறித்தும் மரணம் குறித்தும் தொடர்ந்து பேசிவந்திருக்கிறார் பிரதாப் போத்தன். நேற்று எழுதியுள்ள ஒரு பதிவில், நணபர் ஒருவருக்கு பதிலளிக்கும்போது "வாழ்வின் நோக்கம் பிழைத்திருப்பது மட்டுமே" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஜூலை 11ஆம் தேதி மரணம் குறித்து ஜான் டன் எழுதிய ஒரு கவிதையைப் பகிர்ந்திருக்கிறார் பிரதாப் போத்தம். "மரணமே பெருமை கொள்ளாதே" என்ற பொருள்பட எழுதப்பட்டது அந்தக் கவிதை.
அவரது மரணத்திற்கு குஷ்பு, சத்யராஜ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் தங்கள் அஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர்.