Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இலங்கை ரணில் விக்ரமசிங்க அரசில் 4 பேர் அமைச்சர் பதவியேற்பு

Ranil Wickremesinghe
, சனி, 14 மே 2022 (18:11 IST)
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை அரசில் நான்கு புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.


மக்கள் போராட்டம் காரணமாக மஹிந்த ராஜபக்ஷ மே 9ஆம் தேதி பதவி விலகியபின், ரணில் விக்ரமசிங்க மே 12ஆம் இலங்கை பிரதமராகப் பதவியேற்றார்.

அவர் மட்டுமே பதவியேற்ற நிலையில் அவரது அமைச்சரவையில் நால்வர் இன்று இணைந்தனர்.

இந்தப் பதவி பிரமாண நிகழ்வு கொழும்பு - கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று, (14) முற்பகல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்தது.

இவர்கள் நால்வருமே மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ சார்ந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.

01. தினேஷ் குணவர்தன - அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

02. பேராசியரியர் ஜீ.எல்.பீரிஸ் - வெளிநாட்டமைச்சு

03. பிரசன்ன ரணதுங்க - நகர அபிவிருத்தி, வீடமைப்பு

04. கஞ்சன விஜேசேகர- மின்சக்தி மற்றும் எரிசக்தி

மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையிலும் இவர்கள் வெவ்வேறு அமைச்சுகளுக்கு பொறுப்பாக இருந்தார்கள்.

இதனிடையே நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அனைவதும் கைக்கோர்த்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசரமாக அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அனைவரும் கை கோர்த்து செயற்படும் விதத்திலும், எடுக்கப்படுகின்ற தீர்மானங்களிலும் நாட்டின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியின் பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கான வரலாற்று ரீதியான பொறுப்பு அனைவரிடமும் காணப்படுவதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தாய் நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில், பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதானது, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்பினதும் ஒத்துழைப்புகளை பெற்று, சம்பிரதாய நாடாளுமன்ற அரசியலுக்கு அப்பாற் சென்ற கட்சி பேதமற்ற அரசாங்கமொன்றை ஸ்தாபித்து, நாட்டை புதிய அரசியல் பாதைக்கு கொண்டு செல்லும் நோக்கத்திற்காக என பிரதமர் கூறுகின்றார்.

அத்துடன், தற்போது காணப்படுகின்ற நிலைமையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக எஞ்சியுள்ள ஒரே மாற்று வழியானது, இந்த அரசியல் பாதையின் ஊடாக பயணித்து அனைத்து தரப்பினரும் இயலுமான சக்தியை வழங்கி, பாரிய அர்ப்பணிப்புக்களை செய்து, நாட்டை நிலையான நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என சஜித் பிரேமதாஸவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளுக்கு நாள் உக்கிரமடையும் பொதுமக்களின் பிரச்னைகளை குறைத்து, அதற்கான தீர்வை வழங்க, சர்வதேச ஆதரவை பெற்று இலங்கையை பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியில் ஸ்திரமடைய செய்வதற்கான எமது இணைந்து பிரயத்தனத்திற்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதானது, தேசிய பொறுப்பு என்ற வகையில் கட்சி பேதங்களின்றி கைக்கோர்ப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு கௌரமான அழைப்பை விடுப்பதாகவும் பிரதமர் கூறுகின்றார்.

இலங்கையின் பிரதான எதிர்கட்சியாக விளங்கும் ஐக்கிய மக்கள் சக்தியானது, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிளவுப்பட்ட மாற்று அணியாகும்.

தேர்தலில் தோல்வி அடைந்து தேசிய பட்டியலின் ஊடாக நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்ற ரணில் விக்ரமசிங்கவிற்கு தம்மால் ஆதரவு வழங்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னணியில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்திக்கு தம்முடன் இணைந்து பயணிக்க வருகைத் தருமாறு பகிரங்க கடிதமொன்றை இன்று அனுப்பி வைத்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாதாந்திர பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம்.