ரத்தினவியல் வல்லுநர் காமினி ஜோய்சா நட்சத்திர நீலக்கல் தொகுப்பை ஆராய்கிறார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 745 கோடி இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் தொகுப்பு வீட்டின் பின்புறம் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரத்தினங்கள் அதிகம் காணப்படும் ரத்தினபுரா பகுதியில் உள்ள தமது வீட்டின் பின்புறம் கிணறு தோண்டும்போது தொழிலாளர்கள் இந்தக் கல்லைக் கண்டுபிடித்ததாக கூறுகிறார் ஒரு ரத்தின வணிகர்.
வெளிர் ஊதா நிறத்தில் உள்ள இந்தக் கல்லின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.745 கோடி (இந்திய ரூபாய்) இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
இந்தக் கல்லின் எடை 510 கிலோ. ரத்தினங்களை அளவிடும் முறையில் சொன்னால், 25 லட்சம் காரட். கிணறு தோண்டிக்கொண்டிருந்த நபர் ஏதோ ஒரு அரிய கல் இருப்பதாக எங்களிடம் கூறினார். பிறகு இந்தக் கல் கிடைத்தது என்று பிபிசியிடம் தெரிவித்தார் கல்லின் உரிமையாளர் கமாகே.
பாதுகாப்புக் காரணங்களுக்காக, அவர் தமது முழுப் பெயரையோ, துல்லியமான வசிப்பிடத்தையோ குறிப்பிட விரும்பவில்லை.
மூன்றாம் தலைமுறை ரத்தின வியாபாரியான கமாகே, இந்தக் கண்டுபிடிப்பு குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். அந்தக் கல்லில் ஒட்டிக்கொண்டிருந்த மண் மற்றும் பிற அசுத்தங்களை நீக்கிவிட்டு அதை பகுப்பாய்வு செய்து சான்றிதழ் வழங்க அவர்கள் ஓராண்டுக்கு மேலாக எடுத்துக்கொண்டனர்.
இப்படி சுத்தம் செய்யும்போது அந்த தொகுப்பில் இருந்து சில கற்கள் உதிர்ந்து விழுந்தன என்றும் அவை உயர் தரத்திலான நட்சத்திர நீலக்கற்கள் என்றும் கமாகே கூறியுள்ளார்.
ரத்தினங்கள் அதிகம் காணப்படும் ரத்தினபுரா பகுதி இலங்கையின் ரத்தினத் தலைநகரம் என்று கருதப்படுகிறது. இந்தப் பகுதியில் பல விலை மதிப்பு மிக்க ரத்தினக் கற்கள் கடந்த காலத்தில் கண்டறியப்பட்டுள்ளன.
நீலக்கற்கள் உள்ளிட்ட விலைமதிப்பு மிக்க ரத்தினக் கற்கள் ஏற்றுமதியில் இலங்கை முன்னணியில் உள்ள நாடு. கடந்த ஆண்டு மட்டும் இலங்கை 50 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ரத்தினங்கள், பட்டை தீட்டிய வைரங்கள் மற்றும் நகைகளை ஏற்றுமதி செய்துள்ளது.
"இதைப் போல இவ்வளவு பெரிய கல்லை நான் முன்பு பார்த்ததில்லை. இது 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக இருக்கும்," என்று பிபிசியிடம் கூறினார் புகழ்பெற்ற ரத்தினவியலாளர் டாக்டர் காமினி ஜோஸ்சா.
இந்த கல் அதிக காரட் கொண்டதாக இருந்தாலும் தொகுப்பின் உள்ளே இருக்கிற எல்லா கற்களும் உயர் தரத்தில் இல்லாமல்கூட இருக்கலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.
கொரோனா பொது முடக்கம் காரணமாக இலங்கையின் ரத்தின தொழில்துறை மிகப்பெரிய இழப்பை சந்தித்திருக்கும் சூழ்நிலையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தற்செயல் கண்டுபிடிப்பு சர்வதேச வல்லுநர்களையும், வாடிக்கையாளர்களையும் ஈர்க்கும் என்று இந்த தொழிலில் வேலை செய்கிறவர்கள் நம்புகிறார்கள்.
"இது சிறப்பான நட்சத்திர நீலக்கல் தொகுப்பு. உலகத்திலேயே இதுதான் பெரியதாக இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்தக் கல் மீது அருங்காட்சியகங்களுக்கும், ரத்தினங்கள் சேகரிப்போருக்கும் ஆர்வம் ஏற்படும் நினைக்கிறோம்," என்கிறார் இலங்கையின் தேசிய ரத்தினங்கள், நகைகள் ஆணையத்தின் தலைவர் திலக் வீரசிங்கே.