Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

"நவால்னி சிறையில் இறந்தால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்" - அமெரிக்கா எச்சரிக்கை

, திங்கள், 19 ஏப்ரல் 2021 (08:14 IST)
அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வரும் எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னி சிறையில் உயிரிழந்தால், கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ரஷ்யாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
 
பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளும் அலெக்ஸே நவால்னியின் நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கவலை தெரிவித்துள்ளன.
 
வலது கால் மரத்துப்போய், முதுகுவலியால் அவதிப்படும் நவால்னிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் சில நாள்களில் அவர் இறக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
 
ஆனால் ரஷ்யா இதை மறுக்கிறது. கவனம் பெறுவதற்காக நவால்னி இப்படி நடந்து கொள்வதாகக் கூறும் பிரிட்டனுக்கான ரஷ்ய தூதர், "அவரை சிறையில் சாக விடமாட்டோம்" என்றார்.
 
பழைய பணமோசடிக் குற்றச்சாட்டின்கீழ் கடந்த பிப்ரவரி மாதம் அலெக்ஸே நவால்னி சிறையில் அடைக்கப்பட்டார். அதிபர் விளாதிமிர் புதினைக் கடுமையாக விமர்சிக்கும் நவால்னி, தன்மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறுகிறார்.
 
நவால்னி அடைக்கப்பட்டிருக்கும் சிறை தலைநகர் மாஸ்கோவில் இருந்து கிழக்கில் சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொக்ரோவ் என்ற பகுதியில் அமைந்திருக்கிறது.
 
தனது மருத்துவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறி கடந்த மாரச் 31-ஆம் தேதி முதல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் நவால்னி. அவரது சிறுநீரகம் செயலிழக்கக்கூடும் எனவும், எந்நேரமும் மாரடைப்பு ஏற்படலாம் எனவும் சமீபத்திய ரத்தப் பரிசோதனை முடிவுகள் காட்டுவதாக அவரது மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
 
நவால்னி நடத்தப்படும் விதம் குறித்து பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
 
"நவால்னிக்கு அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சை நியாயமற்றது, முற்றிலும் பொருத்தமற்றது" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார்.
 
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சுல்லிவன் சிஎன்என்-க்கு பேசும்போது, "நவால்னி இறந்தால் கடும் விளைவுகள் ஏற்படும். சர்வதேச சமூகம் ரஷ்யாவைப் பொறுப்பாக்கும்" என்று கூறினார்.
 
அலெக்ஸி நவால்னிக்கு கடந்த ஆண்டில் நோவிசோக் என்று ரசாயன நஞ்சு அளிக்கப்பட்டதால் கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்குச் சென்றார். இது ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அரசுமுறை மோதலை ஏற்கெனவே உருவாக்கியிருக்கிறது.
 
நவால்னிக்கு நோவிசோக் நஞ்சைச் செலுத்துவதற்கு அதிபர் புதின் உத்தரவிட்டார் என்ற குற்றச்சாட்டை ரஷ்ய அதிபர் மாளிகை மறுக்கிறது. ஆனால் நஞ்சு செலுத்தப்பட்டற்குப் பின்னணியில் ரஷ்ய அரசாங்கம் இருப்பதாக அமெரிக்க உளவுப் பிரிவு ஆய்வு செய்து முடிவுக்கு வந்தது. இதன் பிறகு மூத்த ரஷ்ய அரசு அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்தது.
 
நவால்னி விவகாரம் குறித்து கவலை தெரிவித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த பிரதிநித ஜோசப் போர்ரல், நவால்னியின் மருத்துவர்கள் அவரைச் சந்திக்க உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளது. நிலைமை பற்றி விவாதிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் இன்று கூடவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
"நவால்னி சுதந்திரமான மருத்துவச் சிகிச்சை பெற உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டும். அரசியல் காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்" என பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருக்கிறது.
 
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் படித்துக் கொண்டிருக்கும் நவால்னியின் 20 வயது மகள் டேரியா நவால்னயா, "என் தந்தையைப் பார்க்க மருத்துவரை அனுமதியுங்கள்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
 
உண்ணாவிரதத்தைத் தொடங்கிய பிறகு நவால்னி 9 கிலோ வரை எடை குறைந்திருப்பதாக அவரது மனைவி யூலி கூறியதாக ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
 
நவால்னியின் ஆதரவாளர்கள் வரும் புதன்கிழமை நாடு தழுவிய போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். "உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சரிசெய்ய முடியாத விளைவுகள் ஏற்படும்" என்று அவர்கள் கூறுகிறார்கள்
 
நவால்னியின் உடலில் பொட்டாசியம் அளவு மோசமான நிலையை அடைந்திருப்பதாகவும் அவரைப் பார்க்க உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் எனவும் சிறை அதிகாரிகளுக்கு 4 மருத்துவர்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று கடிதம் எழுதினர்.
 
நோவிசோக் நஞ்சுக்காக நவால்னிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அலெக்ஸாண்டர் போலுபன், "அவருக்கு உடனடி சிகிச்சை தேவை என்பதை அவரது ரத்தப் பரிசோதனை முடிவுகள் காட்டுகின்றன. சிகிச்சை அளிக்காவிட்டால் அடுத்த சில நாள்களில் அவர் சாக நேரிடும்" என்று எச்சரித்துள்ளார்.
 
நவால்னியைப் பார்க்க வேண்டும் என்று தானும் 3 மருத்துவர்களும் சிறை அதிகாரிகளிடம் 2 மணி நேரம் கெஞ்சியதாக அவரது தனிப்பட்ட மருத்துவர் அனஸ்தேசியா வசில்யேவா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
நவால்னிக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரி பிரபலமான எழுத்தாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட 70 பேர் கையெழுத்திட்டு புதினுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
 
ஆனால் நவால்னியின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பிபிசியின் ஆண்ட்ரூ மாருக்கு அளித்த பேட்டியில் பிரிட்டனுக்கான ரஷ்யத் தூதர் ஆண்ட்ரே கெலின் கூறினார்.
 
"நவால்னி சிறையில் சாக விட்டுவிட மாட்டோம். அவர் ஒரு ரவுடி போல நடந்து கொள்கிறார். ஒவ்வொரு விதியையும் மீறுவதற்கு முயற்சி செய்கிறார். பிறது கவனத்தைப் பெற விரும்புகிறார்" என்றார் ஆண்ட்ரே

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரவுநேர ஊரடங்கின்போது ரயில்கள் இயங்குமா? தென்னக ரயில்வே அறிவிப்பு!