Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ருதுராஜ் கெய்க்வாட்: சிஎஸ்கே கேப்டனாக தோனியின் இடத்தை அவரால் நிரப்ப முடியுமா?

Sinoj
வியாழன், 21 மார்ச் 2024 (23:25 IST)
சிஎஸ்கே அணிக்காக 5 முறை (2010, 2011, 2018, 2021, 2023) சாம்பியன்ஷிப் பட்டம், 5 முறை 2வது இடம் என பெற்றுக் கொடுத்த ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி, கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
 
2024ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரை சிஎஸ்கே அணி 27வயதான ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சந்திக்க இருக்கிறது.
 
42 வயதாகும் தோனி, வயது மூப்பு காரணமாகவும், கடந்த ஆண்டு முழங்காலில் செய்துகொண்ட அறுவை சிகிச்சையாலும், களமிறங்குவாரா, பேட் செய்வாரா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
 
ஐபிஎல் டி20 தொடரில் வெற்றிகரமான கேப்டன் என்றாலே அது சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி, மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா என்று விமர்சகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
 
இருவருமே தாங்கள் சார்ந்த அணிக்கு 5 முறை சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுக் கொடுத்தாலும் இந்த ஐபிஎல் தொடரில் இருவருமே அணிக்கு தலைமை ஏற்கவில்லை என்பது சற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்திதான்.
 
எதிர்காலம் இளைஞர்களுக்கே என்பதால் எதிர்கால கேப்டன்களை உருவாக்கும் முயற்சியில், தலைமுறை மாற்றத்துக்கு சிஎஸ்கே அணியும் தயாராகிவிட்டது. தோனியை தவிர சிஎஸ்கே அணியை வழிநடத்த தகுதியான வீரர் யார் இருக்கிறார் என்று ரசிகர்களால் சமூக ஊடகங்களில் பெரிய விவாதமே, ஜடேஜா நியமனத்தின்போது நடந்தது.
 
சிஎஸ்கே அணியும் தலைமுறை மாற்றத்துக்குத் தயாராகி, ரெய்னா, ஜடேஜாவை கேப்டனாக நியமித்து கையைச் சுட்டுக்கொண்டது. சிஎஸ்கே அணிக்கு தோனி தலைமை ஏற்கும் வரை அணியின் வெற்றிப் பயணம் சீராக இருந்தது.
 
ருதுராஜ் மீது எதிர்பார்ப்பு
 
இந்த முறை புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிஎஸ்கே அணி நிர்வாகம் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த முடிவை எடுத்துள்ளது எனக் கூறப்பட்டாலும், தோனி அளவுக்கு கெய்க்வாட்டால் அழுத்தம் தரும் கேப்டன் பதவியை சீராகச் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
 
ஐபிஎல் டி20 தொடர் என்பது வெறும் விளையாட்டாக இருந்தால் பரவாயில்லை. இது அணிகளுக்கு இடையே கோடிக்கணக்கில் பணம் புழங்கும் விளையாட்டு என்பதால் ஒவ்வொரு போட்டிக்கும் வெற்றி பெறும் வரை கேப்டன் பெரிய அழுத்தத்தை தாங்கித்தான் விளையாட வேண்டியதிருக்கும்.
 
இதுபோன்ற ஹைபிரஷர் தொடர்களில் ருதுராஜ் சாதாரண பேட்டராக விளையாடி இருக்கலாம். ஆனால், கேப்டனாக இப்போதுதான் முதல் முறையாகக் களம் காண்கிறார். இதுகுறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகையில், “கெய்க்வாட் கேப்டனாக பெயரளவுக்கு இருந்தாலும், பேக்சீட் டிரைவராக இருந்து அணியை நடத்தப்போவது தோனியாகத்தான் இருக்கும். களத்தில் இருந்து கொண்டு கெய்க்வாட்டுக்கு சாரதியாக தோனி செயல்படுவார்,” என்று தெரிவித்தனர்.
 
புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்ட பின் சிஎஸ்கே அணியின் வெற்றிகளில் திடீரென சறுக்கல் ஏற்பட்டது, புள்ளிப் பட்டியலிலும் பின்தங்கியது.
 
ஆனால், தொடரின் பாதியிலேயே 8 போட்டிகளுக்குப் பின் ஜடேஜாவிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு மீண்டும் தோனி கேப்டனாக வந்ததும், சிஎஸ்கே சர்ரென தரவரிசையில் மேலே ஏறியது. ஆதலால், கெய்க்வாட் போன்ற இளம் வீரர்கள் கேப்டன்ஷிப் என்னும் கிரீடத்தின் சுமையை எவ்வாறு சுமந்து பேட் செய்யப் போகிறார்கள் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
 
தோனியின் சாதனை
சிஎஸ்கே அணிக்கு 212 போட்டிகளில் தோனி கேப்டனாக இருந்துள்ளார். அதில் 128 போட்டிகளில் வெற்றியும், 82 ஆட்டங்களில் தோல்வியையும் சிஎஸ்கே அணி சந்தித்துள்ளது. தோனி கேப்டன்ஷிப்பில் 60 சதவீதத்துக்கும் மேலான வெற்றி சதவீதத்தை சிஎஸ்கே வைத்துள்ளது.
 
அதிலும் சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி 64 போட்டிகளில் விளையாடி 45 ஆட்டங்களில் வென்று, 19 தோல்விகளையே சந்தித்துள்ளது. சிஎஸ்கே வெற்றி சதவீதம் சேப்பாக்கம் மைதானத்தில் 70.31%ஆக இருக்கிறது.
 
சிஎஸ்கே அணிக்கு எப்போதுமே தோனி வெற்றிகரமான கேப்டனாகவே வலம் வந்துள்ளார். தோனியின் வயது மூப்பு, அணியின் எதிர்காலம், உடல்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கேப்டன் பொறுப்பை கெய்க்வாட்டிடம் சிஎஸ்கே நிர்வாகம் வழங்கியுள்ளது.
 
கெய்க்வாட்டும் - சிஎஸ்கேவும்
ஐபிஎல் டி20 தொடர் தொடங்கும் முன் அணிகளின் கேப்டன்களை நிற்க வைத்து முறைப்படி புகைப்படம் எடுக்கப்படும். அந்த நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட் நின்ற புகைப்படம் ஐபிஎல் இணையதளத்தில் பதிவிடப்பட்டது வைரலானது.
 
இந்தப் புகைப்படத்தைத் தொடர்ந்து, சிஎஸ்கே நிர்வாகமும், முறைப்படி கேப்டன்சி மாற்றத்தை எக்ஸ் தளத்தில் அறிவித்தது.
 
ருதுராஜ் கெய்க்வாட்டை பொறுத்தவரை 2019ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்குள் வந்த ருதுராஜ் 52 போட்டிகளில் விளையாடி, 1,797 ரன்கள் குவித்துள்ளார்.
 
டி20 போட்டிகளில் சராசரியாக 39 ரன்களும், ஸ்ட்ரைக் ரேட்135 ஆகவும் வைத்துள்ளார். 2021ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன்தான் கெய்க்வாட்டுக்கு சிறப்பாக இருந்தது. அந்த சீசனில் கெய்க்வாட் 16 போட்டிகளில் 635 ரன்கள் குவித்தார்.
 
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள சஸ்வாத் பகுதியில் உள்ள பர்ஹான் மெமானே எனும் சிறிய கிராமத்தில் கடந்த 1997, ஜனவரி 31ஆம் தேதி ருதுராஜ் கெய்க்வாட் பிறந்தார். கெய்க்வாட்டின் தந்தை தசரத் கெய்க்வாட் மத்திய பாதுகாப்புத் துறையின் டிஆர்டிஓ பிரிவில் பணியாற்றி வருகிறார். தாய் சவிதா கெய்க்வாட் நகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
 
புனேவின் காட்கி பகுதியில் புனித ஜோசப் பள்ளியில் படித்த கெய்க்வாட், மாரத்வாடா மித்ரா மண்டல் பாலிடெக்னிக்கில் கல்லூரிப் படிப்பை முடித்தார். கெய்க்வாட் 13 வயதாகும்போதே, திலீப் வெங்கசர்க்கார் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து முறைப்படி கிரிக்கெட் பயிற்சி பெற்றார்.
 
கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த கேடென்ஸ் கோப்பைத் தொடரில் மும்பையின் எம்ஐஜி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கெய்க்வாட் 71 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றார். 2016-17ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் முதல்முறையாக முதல்தரப் போட்டியில் மகாராஷ்டிரா அணிக்காக கெய்க்வாட் களமிறங்கினார். அதே ஆண்டில் டி20 சசீனிலும் கெய்க்வாட் பங்கேற்று விளையாடினார்.
 
கடந்த 2019ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பைத் தொடரில் புனேவில் நடந்த சத்தீஸ்கருக்கு எதிரான ஆட்டத்தில் கெய்க்வாட் முதல் இன்னிங்ஸில் சதமும்(108) 2வது இன்னிங்ஸில் 76 ரன்களும் குவித்தார். 2017ஆம் ஆண்டில் லிஸ்ட்-ஏ பிரிவில் விஜய் ஹசாரோ கோப்பையில் கெய்க்வாட் அறிமுகமாகினார். இந்தத் தொடரில் கெய்க்வாட் 444 ரன்கள் குவித்து ரன் குவிப்பில் 3வது இடத்தைப் பிடித்தார்.
 
உள்நாட்டுப் போட்டிகளில் இந்தியா ஏ, பி, இந்தியன் நீலம், மகாராஷ்டிரா, 23 வயதுக்கு உட்பட்டோருக்கான அணி எனப் பல பிரிவுகளில் கெய்க்வாட் விளையாடியுள்ளார். 2018-19ஆம் ஆண்டு நடந்த தியோதர் கோப்பையில் முதல்முறையாக இந்தியா-பி அணியில் கெய்க்வாட் சேர்க்கப்பட்டார். அதன்பின் 2018ஆம் ஆண்டில் நடந்த வளர்ந்து வரும் ஆசிய கோப்பைக்கான அணியில் இந்திய அணியில் கெய்க்வாட் சேர்க்கப்பட்டார்.
 
கடந்த 2021ஆம் ஆண்டில் முஸ்டாக் அலி கோப்பைத் தொடரில் மகாராஷ்டிரா அணிக்கு கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
 
இந்தத் தொடரில் 5 போட்டிகளில் 259 ரன்கள் குவித்து கெய்க்வாட் அசத்தினார். அதே ஆண்டில் நடந்த விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் ஒரே சீசனில் 4 சதங்கள் அடித்து விராட் கோலியின் சாதனையை கெய்க்வாட் சமன் செய்தார்.
 
கெய்க்வாட்டுக்கு ரூ.14 கோடி விலை
தமிழகத்தில் நடக்கும் டிஎன்பிஎல் தொடரைப் போன்று மகாராஷ்டிராவிலும் மகாராஷ்டிரா பிஎல் என்ற டி20 தொடர் நடக்க இருக்கிறது. இந்தத் தொடருக்கான ஏலம் 2023ஆம் ஆண்டு நடந்தது. இதில் புனே அணியால் ரூ.14.80 கோடிக்கு ருதுராஜ் கெய்க்வாட் வாங்கப்பட்டு, அந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
சர்வதேச அறிமுகம்
கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் கெய்க்வாட் இந்திய அணிக்குள் அறிமுகமானார்.
 
ஆனாலும், ஒருநாள் போட்டியில் கெய்க்வாட் விளையாடவில்லை. 2022ஆம் ஆண்டில் லக்னௌவில் நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கெய்க்வாட் அறிமுகமானார். அதே ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரிலும் கெய்க்வாட் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.
 
ஐபிஎல் 2024: தோனியின் சகாப்தம் முடிந்தது! சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்பட மூலாதாரம்,GETTY IMAGES
முதல் தங்கப் பதக்கம்
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கிய கெய்க்வாட் சர்வதேச அரங்கில் தனது முதல் அரைசதத்தை நிறைவு செய்தார். 2022ம் ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக கெய்க்வாட் நியமிக்கப்பட்டு வழிநடத்தினார்.
 
இதில் ஆடவர் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்று கெய்க்வாட் தலைமையில் இந்திய அணி நாடு திரும்பியது. ஆடவர் பிரிவிலும் முதல்முறையாக இந்திய அணி தங்கம் வென்றது.
 
தோனியின் பாதையில் கெய்க்வாட்?
 
சிஎஸ்கே அணியில் தோனியின் மாபெரும் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்த தலைமுறை மாற்றத்துக்கு சிஎஸ்கே தயாராகிவிட்டது.
 
பாதையில் சில சறுக்கல்கள் இருந்தாலும், தோனியின் வழிகாட்டலில் சிஎஸ்கேவின் வெற்றிப் பயணம் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

3.60 கோடி லிட்டர் தண்ணீர் திருடிய தனியார் கல்லூரி: ரூ.2 கோடி அபராதம்!

234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெல்லும்.. திமுக கூட்டணி 2026 வரை நீடிக்காது: பிரேமலதா..!

விவசாயக் கடன் தள்ளுபடி.. பென்சன் வரம்பு உயர்வு.. 25 லட்சம் வேலைவாய்ப்பு! - மகாராஷ்டிரா பாஜக வாக்குறுதிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments