Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாஹோ - சினிமா விமர்சனம்

Webdunia
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (16:49 IST)
திரைப்படம் சாஹோ
நடிகர்கள் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப், லால், மந்திரா பேடி, டினு ஆனந்த்
பின்னணி இசை கிப்ரான்
இயக்கம் சுஜீத்

பாகுபலி வரிசை படங்களுக்குப் பிறகு பிரபாஸ் நடித்திருக்கும் படம், இந்திய சினிமாவிலேயே மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரைப்படம் என பல காரணங்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் சாஹோ. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகியிருக்கிறது இந்தப் படம்.
 
ஒரு மிகப் பெரிய க்ரைம் சிண்டிகேட்டைச் சேர்ந்தவர்கள், தங்கள் தலைவரைப் போட்டுத்தள்ளிவிட்டு, சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் பணத்தை எடுக்க முயற்சிக்கிறார்கள். அதற்கு ஒரு 'ப்ளாக் பாக்ஸ்' தேவைப்படுகிறது. அந்த ப்ளாக் பாக்ஸை வைத்து பணத்தை எடுக்க, பலரும் முயற்சிக்கிறார்கள். கொல்லப்பட்ட தலைவரின் மகன் ப்ளாக் பாக்ஸை மீட்பதோடு, தன் தந்தையின் மரணத்திற்கு எப்படி பழிவாங்குகிறான் என்பது மீதிக் கதை.
 
படத்தைப் பார்த்து மேலே சொன்னவாறு கதையைப் புரிந்துகொண்டால், படத்தை ரொம்பவும் கவனமாகப் பார்த்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஏனென்றால், திரைக்கதை அவ்வளவு குழப்பமானது.
 
முதல் பாதியில் சில கொள்ளைகள் நடக்கின்றன. அந்தக் கொள்ளைகளை விசாரிக்க அசோக் சக்கரவர்த்தி என்ற காவல்துறை அதிகாரி வருகிறார். கடைசியில் பார்த்தால், அவர்தான் கொள்ளைக்காரராம். அவ்வளவு நேரம் கொள்ளைக்காரராக வந்தவர், போலீஸ்காரராம். இப்படி ஒரு பயங்கரத் திருப்பம். இதுபோல படம் நெடுக ஏகப்பட்ட திருப்பங்கள் இருப்பதால், திரும்பித் திரும்பி நமக்கு கழுத்தே வலிக்கிறது.


 
முதல் பாதி இவ்வளவு மோசமாக இருக்கிறதே என்று பார்த்தால், இரண்டாவது பாதி அதைவிட பயங்கரம். என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது என்றே புரியாத அளவுக்கு துப்பாக்கிச் சண்டைகளும் வாகன மோதல்களும் நடந்துகொண்டே இருக்கின்றன. கடைசியில் படம் முடிவதற்கு அரை மணி நேரம் முன்பாக, Mad Max: Fury Road பாணியில் ஒரு மிகப் பெரிய சண்டை. அதில் வரும் ஆட்களும் Mad Max படத்திலிருந்து தப்பிவந்தவர்களைப் போலவே இருக்கிறார்கள். அந்தச் சண்டை கொடூரமாக நடந்துகொண்டிருக்கம்போதே, ஒரு பகுதியினர், இன்னொரு பகுதியினரை அடித்து வீழ்த்திவிடுகிறார்கள். உடனே ஹீரோ, வில்லனைப் பார்த்து சிரிக்கிறார். முடியலை.
 
இந்தப் படத்தில் துவக்கத்தில் நல்லவர்களாகக் காட்டப்படுபவர்கள் எல்லோரும் படம் நகர நகர கெட்டவர்களாக, வில்லன் ஆட்களாக மாறிவிடுகிறார்கள். பிறகு படம் முழுக்கவே வில்லன்கள்தான். இதிலிருந்தெல்லாம் தப்பி, உன்னதமான ஒரே ஜீவனாக இருப்பவர் கதாநாயகி மட்டும்தான். தவிர, இந்தப் படத்தில் கதாநாயகன் பிரபாஸ் பறவைகளைப் போல பறக்க வேறு செய்கிறார். இதெல்லாம் ஃபேன்டஸி படங்களுக்கு ஓகே. ஆக்ஷன் படங்களில் இம்மாதிரி காட்சிகள் வந்தால், ரசிகர்கள் சிரிக்கிறார்கள்.


 
நடிகர் விஜயின் 'பிகில்' திரைப்படம் முன்கூட்டியே ரிலீஸ் ஆகிறதா?
பாகுபலி படத்திற்குப் பிறகு, சிறிய பட்ஜெட் படமாக இருந்திருந்தால்கூட நல்ல திரைக்கதையைக் கொண்ட படத்தைத் தேர்வுசெய்திருக்கலாம். படத்தின் துவக்கத்தில் அவரது நடிப்பு, அவரது பாத்திரத்தோடு சுத்தமாகப் பொருந்தவில்லை.
 
அம்ருதா நாயர் என்ற காவல்துறை அதிகாரியாக வரும் ஷ்ரத்தா கபூரை படத்தில் பலரும் ஏமாற்றுவதால், எப்போதும் குழப்பமான முகத்தோடேயே வந்து போகிறார். அருண் விஜய்யின் பாத்திரம் எதற்காக வருகிறது, கதையில் என்ன வேலை என்பதெல்லாம் தெளிவாக இல்லை.
 
இந்தப் படத்தின் மற்றொரு பிரச்சனை, ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். யாருடைய பாத்திரமும் வலுவாக இல்லை. பிரபாசுக்கும் ஷ்ரத்தா கபூருக்கும் இடையில் இரண்டு மூன்று பாடல்கள் இருப்பதால், பிரபாஸ்தான் கதாநாயகன் என்று புரிந்துகொள்ள முடிகிறது. இல்லாவிட்டால் அவரும் ஒரு வில்லன் என்று நினைத்திருப்போம்.


 
படத்தில் பாராட்டத்தக்க அம்சம், மதியின் ஒளிப்பதிவுதான். கிப்ரான் சிறந்த இசையமைப்பாளர். ஆனால், இந்தப் படத்தில் காதைப் பதம்பார்த்து விடுகிறார்.
 
பல இடங்களில் ஆக்ஷன் காட்சிகளும் கிராஃபிக்ஸ் காட்சிகளும் அட்டகாசமாக வந்திருக்கின்றன. இதில் கவனம் செலுத்தியவர்கள் திரைக்கதையைக் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments