Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

எழுத்தாளர் கோணங்கி மீது பாலியல் குற்றச்சாட்டு: மீண்டும் எழுந்த 'மீ டூ' விவாதம்

Konangi
, வெள்ளி, 3 மார்ச் 2023 (14:28 IST)
தான் கல்லூரி மாணவராக இருந்தபோது தனக்கு கலை மீது இருந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி எழுத்தாளர் கோணங்கி தன்னை பாலியல் சீண்டல் செய்ததாக, கார்த்திக் ராமச்சந்திரன் என்பவர் இரு தினங்களுக்கு முன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டது, இலக்கிய உலகில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டில் 'மீ டூ' குறித்த விவாதங்களையும் மீண்டும் எழுப்பியுள்ளது. 

'மதினிமார்கள் கதை' சிறுகதை தொகுப்பு, 'பாழி', 'பிதிரா' உள்ளிட்ட நாவல்களுக்காக அறியப்படுபவர் எழுத்தாளர் கோணங்கி. கார்த்திக் ராமச்சந்திரன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் எழுத்தாளர் கோணங்கி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தார்.

அதில், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த தனக்கு கோணங்கியின் புத்தகங்கள் மற்றும் அவருடைய தம்பி முருகபூபதியின் 'மணல்மகுடி' நாடகக் குழு மீது ஆர்வம் ஏற்பட்டதாகவும், அதனை பயன்படுத்தி தட்டச்சு செய்வதற்காக என தன்னுடைய இடத்திற்கு வரவழைத்து கோணங்கி தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். 

இதனால், தனக்கு மனநல பிரச்னைகளும் தற்கொலை எண்ணங்களும் எழுந்ததாக குறிப்பிட்டுள்ள கார்த்திக், பாலியல் சீண்டல்கள் குறித்த போதிய விழிப்புணர்வு அச்சமயத்தில் தனக்கு இல்லை என தெரிவித்துள்ளார். 

2021ஆம் ஆண்டில் இளம் நாடக  கலைஞர்கள், வாசகர்கள் பலரும் கோணங்கியால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டதும் அவை இயல்பானதுதான் என்ற சூழல் உருவாக்கப்பட்டதும் குறித்து தான் அறிந்ததாக தெரிவித்துள்ள கார்த்திக், "வெளியே சொன்னால் நாடக கலை அழிந்துவிடும்" என்ற காரணத்திற்காக பாலியல் வன்முறைகளை சகித்துக் கொள்ளுமாறு நாடகக் குழுவினர் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

"மன உளைச்சலில் இருக்கிறேன்"

இதையடுத்து, ஷ்யாம் சுந்தர் வேல் என்பவரும் தன் முகநூல் பக்கத்தில், "வெவ்வேறு சூழ்நிலைகளில் கோணங்கியின் பாலியல் சீண்டல்களுக்கு தான் ஆளானதாகவும்" அவை அனைத்தும் "ஆள் பார்த்து கோணங்கியால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்கள்" என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

கார்த்திக் ராமச்சந்திரனின் பதிவையடுத்து, ஆண்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் குறித்தும், இலக்கிய உலகில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்கள் குறித்தும் கவனம் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, கார்த்திக் ராமச்சந்திரனிடம் 'பிபிசி தமிழ்' பேச முயன்றது. அப்போது, தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக தெரிவித்த கார்த்திக் ராமச்சந்திரன், இதுகுறித்து பேசும் நிலையில் தான் இல்லை என தெரிவித்தார்.

"திட்டமிட்டு நடத்தப்படும் சதி"

கார்த்திக் ராமச்சந்திரனின் புகார்கள் குறித்து சில ஊடகங்களுக்கு கோணங்கி அளித்துள்ள பேட்டியில், "என் மீது ஒரு குழு திட்டமிட்டு பொய்யான புகாரைத் தெரிவித்து வருகிறது.

இந்தப் புகாரால் நான் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன். அதனை வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. இது திட்டமிட்டு நடத்தப்படும் சதி'' என தெரிவித்துள்ளார்.

சக எழுத்தாளர்களின் கண்டனங்கள்

இதனிடையே, எழுத்தாளர் கோணங்கிக்கு சக எழுத்தாளர்கள் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, கோணங்கியின் அண்ணனும் எழுத்தாளருமான ச. தமிழ்ச்செல்வன், "பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்கிறேன்" எனவும் "மணல்மகுடியின் வெள்ளிவிழா நேரத்தில் இக்குற்றச்சாட்டுகள் என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீண்டெழுவது எப்படி என்றும் தெரியவில்லை" என தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

webdunia


எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், "கோணங்கியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நான் அவர்கள் பக்கம் நிற்கிறேன். கோணங்கி மற்றும் மணல்மகுடி நாடகக்குழுவை நடத்தும் முருகபூபதிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்" என தன் இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் சாரு நிவேதிதா குற்றச்சாட்டை முன்வைப்பவர் ஓர் ஆண் என்பதால் "தமிழ்ச் சமூகம் அமைதியாகிவிட்டதாக" தெரிவித்துள்ளார். அவர் தன் இணையதளத்தில், "இந்தப் பிரச்னையில் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், இதுவே அந்த எழுத்தாளர் பெண்கள் மேல் “கை” வைத்திருந்தால் தமிழ்ச் சமூகமே கொழுந்து விட்டு எரிந்திருக்கும். ஆண் உடம்பு என்றால் அத்தனை இழிவாக, கேவலமாகப் போய் விட்டது போலும்" என தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில், "குற்றச்சாட்டுகளுக்கு மணல்மகுடி பொறுப்பாளர் முருகபூபதியும் கோணங்கியும் உரிய விளக்கத்தைத் தர வேண்டும்" எனவும், "பாதிப்புக்கு ஆளாகியுள்ள கலைஞர்கள் தமக்கு நீதி வேண்டி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமுஎகச உறுதுணையாக இருக்கும்" என்றும் தெரிவித்துள்ளது. 

'மீ டூ' தருணம்

கார்த்திக் ராமச்சந்திரன் பதிவுக்குப் பின்னர், இலக்கிய உலகில் இம்மாதிரியான பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து நடப்பதாக பலரும் பொதுவெளியில் பேசத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் கவிஞர் - பாடலாசிரியர் வைரமுத்து மீது, பாடகி சின்மயி எழுப்பிய 'மீ டூ' புகாரைத் தொடர்ந்து மீண்டும் எழுந்துள்ள 'மீ டூ' (MeToo - தாங்கள் சந்தித்த பாலியல் சீண்டல்களை பொதுவெளியில் தெரிவிப்பது) தருணமாக இது அமைந்திருக்கிறது.

webdunia


கவிஞரும் பாடலாசிரியருமான இளங்கோ கிருஷ்ணன், தன் முகநூல் பக்கத்தில், "தமிழ் இலக்கியச் சூழலில் கணிசமான ஒரு பால் ஈர்ப்பாளர்கள் உண்டு. என்னால் ஒரு பட்டியலே சொல்ல முடியும். இருபது வருடங்களுக்கு முன்பு என்னிடமும் ஒரு சீனியர் அத்துமீற முயன்றார். நான் உதறிவிட்டு வந்துவிட்டேன். கோணங்கி விவகாரம் எனக்கு அதிர்ச்சி எதுவும் அளிக்கவில்லை. அது முன்பே தெரியும் என்பதுதான் காரணம். ஆனால், 'அப்யூஸ்' என்பது அதிர்ச்சியாகத்தான் உள்ளது. கோணங்கிக்கு எனது கண்டனங்கள்" என பதிவிட்டுள்ளார். 

'மீ டூ' புகார்களின் போது குற்றச்சாட்டுகளை முன்வைப்போரை நோக்கி வைக்கப்படும் கேள்விகளை இந்த விவகாரத்திலும் பார்க்க முடிகிறது. "இத்தனை ஆண்டுகள் கழித்து பொது வெளியில் சொல்வது ஏன்?", "பாலியல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் என்ன?" என்பன போன்ற கேள்விகளையும் பலர் எழுப்பி வருகின்றனர். 

இதற்கு எதிர்வினையாக, இளங்கோ கிருஷ்ணன், எழுத்தாளர் பெருந்தேவி  உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் குரலெழுப்பி வருகின்றனர். "பாலியல் புகார்களில் பொதுவாக ஆதாரத்தை வைத்துக்கொண்டு யாரும் செயல்படுவதில்லை. சட்டரீதியான நடவடிக்கைகள் பல சமயம் சாத்தியப்படுவதில்லை" என தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார் எழுத்தாளர் பெருந்தேவி. 

விமர்சிக்கப்படும் ஜெயமோகனின் கருத்து

கோணங்கி மீதான குற்றச்சாட்டுகள் - கண்டனங்கள் ஒருபுறம் இருக்க அவருக்கு ஆதரவான கருத்துகளையும் பார்க்க முடிகிறது. எழுத்தாளர் ஜெயமோகன், தன்னுடைய இணையதளத்தில் கோணங்கி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில், "கோணங்கி பொதுவில் மன்னிப்பு கோரலாம். அல்லது இன்று வந்துள்ள பொதுக்கண்டனமே பெரிய தண்டனைதான். எழுத்தாளனுக்கு அது ஓர் இறப்பு. அவரை நான் அறிந்தவரை மனமுடைந்திருப்பார் என்றே எண்ணுகிறேன். குடும்பத்தைச் சாந்தே செயல்படுபவர் அவர். இப்போது குடும்பச்சூழலில் இருந்து அன்னியமாகிவிடுவார். அவர் இதிலிருந்து மீண்டுவரவேண்டும். மீண்டும் அவருக்கு நண்பர்களின் ஆதரவு இருக்கவேண்டும்" என எழுதியுள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாக்களித்த 6 பேருக்கு நன்றி: 233வது முறையாக தோல்வி அடைந்த வேட்பாளர் அறிவிப்பு..!