கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் (மஜத) கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில், இந்த விஷயத்தில் குறிப்பிட்ட கால அளவுக்குள் முடிவெடுக்க சட்டப்பேரவை தலைவருக்கு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காங்கிரஸ் மற்றும் மஜத அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா விவகாரத்தில் முடிவெடுக்க பொருத்தமானதாக தான் கருதும் காலவரையறைக்குள் சட்டப்பேரவைத் தலைவர் முடிவெடுப்பார் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
மேலும், ராஜிநாமா கடிதம் வழங்கிய எம்எல்ஏக்களை நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்த முடியாது என்றும் தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றத்த்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக சட்டப்பேரவை தலைவர் ரமேஷ்குமார், ''நான் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். அரசியலமைப்பு விதிகளின்படி நான் பணியாற்றுவேன்'' என்று கூறினார்.
முன்னதாக, கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் பாஜக-வுக்கு சாதகம் அளிக்கும் வகையில் பதவி விலகல் கடிதங்களை சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமாருக்கு அனுப்பினர். இவர்களது விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் எண்ணிக்கை குறைந்த சட்டப் பேரவையில் பாஜக-வுக்கு பெரும்பான்மை கிடைக்கும்.
இந்நிலையில், பதவி விலகல் கடிதங்களின் மீது பேரவைத் தலைவர் முடிவெடுக்காமல் தவிர்த்து வந்தார். பிறகு சிலரை நேரில் ஆஜராகவேண்டும் என்றும், சிலரது கடிதம் சரியான முறையில் அமைந்திருக்கவில்லை என்றும் கூறினார்.
அரசின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர பாஜக நோட்டீஸ் அளித்த நிலையில், அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதென்ற முடிவு அவை நடவடிக்கை ஆலோசனைக் குழுவில் எடுக்கப்பட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக அவையில் முதல்வர் குமாரசாமி கடந்த வெள்ளிக்கிழமை வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.