Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இலங்கை நெருக்கடி: கோட்டாபய ராஜபக்ஷ பேச்சுக்குப் பின்னால் ரணில் தந்த யோசனைகளா? என்ன திட்டம்?

Ranil Wickramasinghe
, வியாழன், 12 மே 2022 (14:01 IST)
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள இந்த சூழ்நிலையில், ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி போராட்டங்கள், வன்முறைகள் இடம்பெற்று வருகின்ற பின்னணியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட உரையொன்றை நேற்றிரவு (மே 11) நிகழ்த்தியிருந்தார்.

கடந்த சில தினங்களாக இடம்பெற்று வரும் வன்முறைகளை வன்மையாக கண்டித்ததுடன், தனது எதிர்கால திட்டம் குறித்தும் இந்த உரையில் அவர் தெளிவூட்டல்களை வழங்கியிருந்தார்.

இதன்படி, இலங்கையில் 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையான ஆட்சிக் காலத்தில், ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்டு, கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் ரத்து செய்த அரசமைப்புச் சட்டத்தின் 19வது திருத்தத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வர ஜனாதிபதி இதன்போது இணக்கம் வெளியிட்டார்.

19வது திருத்தத்தின் ஊடாக, நாடாளுமன்றத்திற்கு அதிகளவிலான அதிகாரத்தை வழங்குவதற்கு அவர் நேற்றைய உரையில் இணக்கம் வெளியிட்டிருந்தார்.

மேலும், நாடு ஸ்திரத் தன்மை அடைந்ததை அடுத்து, அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்தி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதற்கும் தான் நடவடிக்கை எடுப்பதாக அவர் இந்த உரையில் உறுதி வழங்கியிருந்தார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தீவிர நிலையை அடைந்துள்ள இந்த தருணத்தில், ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை ஏதேனும் மாற்றத்தை கொண்டு வருமா என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

இது தொடர்பில் பிபிசி தமிழ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் ஆய்வாளருமான மயில்வாகனம் திலகராஜிடம் வினவியது.

19வது திருத்தத்தை மீள அமல்படுத்தல் மற்றும் ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்தல் போன்ற விடயங்களை ஏற்றுக்கொண்டு, ஜனாதிபதி ஒரு படி கீழ் இறங்கியுள்ளதாக மயில்வாகனம் திலகராஜ் தெரிவிக்கிறார்.

இந்த கோரிக்கைகளானது, ஏனைய கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் எனவும் அவர் கூறுகிறார்.

19வது திருத்தத்தை மீள கொண்டு வருவதற்கான ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழியானது, முதல் தடவையாக வழங்கப்பட்ட உறுதிமொழி எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

பதவி விலக வேண்டும் என்பதே கோரிக்கை

''கடைசியாக என்னவென்றால், இவர் பதவி விலக வேண்டும் என்பதுதான் இந்த மக்களின் கோரிக்கை. அந்த இடத்திற்கு அவர் இன்னும் வரவில்லை. கடைசி நேரத்தில் ஏனையோர் கேட்கின்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் ஊடாக, தான் தொடர்ந்தும் பதவி வகிக்க முடியுமா என்ற ஒரு முயற்சியை ஜனாதிபதி மேற்கொள்கிறார்.

இதைத்தான் அவர் செய்கின்றார் என்பது தெரிகின்றது. ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்தே, அவர் பதவி விலகுவார் போன்ற தோற்றப்பாடே எழுகிறது. தான் பதவியிலிருந்து வெளியேறும் போது, தான் ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்து விட்டே வெளியேறினேன் என்ற வரலாற்றை பதியவைக்க அவர் முயற்சிக்கிறார்." என அரசியல் ஆய்வாளர் திலகராஜ் தெரிவிக்கின்றார்.

நாடு ஸ்திரத் தன்மை அடைந்ததன் பின்னரே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதாக ஜனாதிபதி கருத்து வெளியிடுகின்றார். இது தொடர்பிலும் மயில்வாகனம் திலகராஜ் தெளிவூட்டினார்.
webdunia

''நாடு ஸ்திரத் தன்மை என்பது, நாடாளுமன்றத்தின் ஸ்திரதன்மை. 19வது திருத்தத்தை கொண்டு வரலாம் அல்லது 21வது திருத்தத்தை கொண்டு வரலாம். நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்வதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை தேவைப்படும். அந்த பெரும்பான்மை கிடைக்கும் வரை இருந்து அதனை செய்து விட்டு செல்லவே ஜனாதிபதி முயற்சிக்கிறார். ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்பதை தவிர்த்து, மற்றவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு அவர் இணக்கப்பாட்டை காண்பிக்கின்றார்.

அதை நான் எப்படி பார்க்கின்றேன் என்றால், பதவி விலகலின் ஆரம்பமாகவே பார்க்கின்றேன். ஜனாதிபதி பக்கத்தில் இருந்து பார்த்தால், தான் இல்லாது போகப் போவது என்பது அவருக்கு விளங்கியுள்ளது. தான் பதவியில் இல்லாமல் போவது மட்டுமல்ல ஜனாதிபதி முறைமையையே இல்லாது செய்ய வேண்டும் என நினைக்கிறார். அவரது இந்த கூற்று சாத்தியப்படும் என நினைக்கவில்லை" என அவர் கூறுகிறார்.

கோட்டாயவுக்கு ரணில் என்ன யோசனை கூறியிருப்பார்?

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவிற்கும் இடையில் நேற்று அவசர சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பு தொடர்பிலும் அரசியல் ஆய்வாளர் மயில்வாகனம் திலகராஜ், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

'நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இல்லாது செய்யப்பட வேண்டும். எனினும், அது இவர் மூலமாக செய்ய முடியாது என கூறுகிறேன். தற்போதைய ஜனாதிபதியினால் 19வது திருத்தத்தை மீண்டும் கொண்டு வர முடியும். ரணில் விக்ரமசிங்க அப்படியான உடன்பாட்டைத்தான் பேசி இருக்கலாம் என நினைக்கின்றேன். 19ஐ கொண்டு வா உன்னுடைய அதிகாரம் குறையும். அதிகாரம் குறைவான ஜனாதிபதியாக இருப்பது பெரிய பிரச்சினையாக வராது என்பது மாதிரியான யோசனையை ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதிக்கு கொடுத்திருப்பார். ஜனாதிபதியின் இந்த விசேட உரையின் பின்னணியில், ரணில் விக்ரமசிங்க இருப்பார் என நான் நினைக்கின்றேன்" என அவர் குறிப்பிடுகிறார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என கோரி கடந்த 34 நாட்களாக காலி முகத்திடலில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதியின் இந்த உரையினால், போராட்டக்காரர்கள் இறுதி வரை கலைந்து செல்ல மாட்டார்கள் என கூறிய அரசியல் ஆய்வாளர் மயில்வாகனம் திலகராஜ், ஜனாதிபதி பதவி விலகும் வரை போராட்டக்காரர்கள் போராட்டத்தை தொடர்ந்தும் நடத்துவார்கள் என குறிப்பிட்டார்.

போராட்டக்காரர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை இந்த போராட்டம் தொடரும் என மயில்வாகனம் திலகராஜ் கருதுகிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆம்பூர் திருவிழாவில் பீப் பிரியாணி.. இல்லைன்னா போராட்டம்! – தலித், இஸ்லாமிய அமைப்புகள்!