இலங்கை பொருளாதார நெருக்கடி: தடைப்பட்ட காகித இறக்குமதி, வினாத்தாள் அச்சடிப்பதில் சிரமம் - ஒத்திவைக்கப்படும் தேர்வுகள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எதிர்கால சந்ததியை தற்போதே பாதிப்பை நோக்கி நகர்த்த ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைக்கு கடதாசி (பேப்பர்) இறக்குமதி தடைப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாடசாலை மட்டத்தில் நடைபெறும் முதலாம் தவணை தேர்வுகளை நடத்துவதில் அதிகாரிகள் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளனர்.
கடதாசி தட்டுப்பாடு காரணமாக, தேர்வு வினாத் தாள்களை அச்சிட முடியாத நிலைக்கு இலங்கையின் நிலைமை மிக மோசமடைந்துள்ளது.
குறிப்பாக எதிர்வரும் 21ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறவுள்ள தேர்வுகளுக்கான வினாத்தாள்களை அச்சிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வித் திணைக்களம் நேற்று அறிவித்திருந்தது.
இதையடுத்து, 6, 7 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கான தேர்வுகளை உரிய வகையில் நடத்துமாறு மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்தல் பிறப்பித்துள்ளது.
இயலுமான வரை தேர்வு நேர அட்டவணைக்கு அமைய தேர்வுகளை நடத்துமாறும், அவ்வாறு உரிய நேர அட்டவணையின் பிரகாரம் நடத்த முடியாத பாடசாலைகள் தமக்கு இயலுமான நேர அட்டவணையின் பிரகாரம் பரிட்சைகளை நடத்துமாறும் அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 9, 10 மற்றும் 11 ஆகிய வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான முதலாம் தவணை தேர்வுகளை, ஏப்ரல் மாத விடுமுறைக்கு பின்னரான காலத்தில் நடத்த திட்டமிடுமாறு கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரிட்சை வினாத் தாள்களை அச்சிடுவதற்கு முடியாத காரணத்தை முன்னிலைப்படுத்தியே, மேல் மாகாண கல்வித் திணைக்களம் இந்த அறிவித்தலை அனைத்து கல்வி வலய பணிப்பாளர்களுக்கும் விடுத்துள்ளது.
ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு
இதேவேளை, அதிகாரிகளின் நடவடிக்கை காரணமாக தேர்வுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.
தேர்வு வினாத் தாள்களை இறுவெட்டுக்களின் பதிவு செய்து, அவற்றை பாடசாலைகளுக்கு அனுப்பி, அதனை பிரதி எடுத்து தேர்வுகளை நடத்துமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலையில், கடதாசி தட்டுப்பாடு நிலவும் இந்த தருணத்தில், பாடசாலை அதிபர்கள் எவ்வாறு இவற்றை அச்சிட்டுக்கொள்வார்கள் என அவர் கேள்வி எழுப்புகின்றார்.
அதேநேரம், வினாத் தாள்களை அச்சிடுவதற்கான கடதாசியின் விலை பல மடங்களாக அதிகரித்துள்ளமையினால், அதற்கான பணத்தை அதிபர்கள் எங்கிருந்து பெற்றுக்கொள்வார்கள் என அவர் குறிப்பிடுகின்றார்
எதிர்கால சந்ததியின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மின் கட்டண பட்டியலுக்கு பதிலாக வேறு பட்டியல்
நாட்டில் ஏற்பட்டுள்ள கடதாசி தட்டுப்பாட்டை அடுத்து, இலங்கை மின்சார சபை, வழமையாக விநியோகிக்கும் மின்சார கட்டண பட்டியலுக்கு பதிலாக வேறொரு சிறிய மின்சார கட்டண பட்டியலை விநியோகித்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, சில பகுதிகளுக்கு சென்ற மின்சார சபை அதிகாரிகள், மின்சார கட்டண பட்டியலை விநியோகிக்காது, செலுத்த வேண்டிய தொகையை மாத்திரம் அறிவித்து வந்துள்ளதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
கடதாசி தட்டுப்பாடு காரணமாக தமக்கு மின்சார கட்டண பட்டியலை விநியோகிக்க முடியாதுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இலங்கை மின்சார சபைக்கு, மின்சார கட்டண பட்டியலை அச்சிட்டு விநியோகிக்கும் தரப்பினரினால், பட்டியலை விநியோகிப்பதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பாவனையாளர் தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நாலக்கஜீவ பிரசன்ன தெரிவித்துள்ளார்.
மின்சார பட்டியலை பெற்றுக்கொள்ள ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, மேல் மற்றும் வட மாகாணங்களுக்கான மின்சார கட்டண பட்டியல் முடிவடைந்துள்ளதாகவும், அதற்காக பாவனையாளர்களுக்கு மாற்று திட்டங்களின் ஊடாக மின்சார பட்டியலை விநியோகித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, விரைவில் ஏனைய பகுதிகளுக்கும் இந்த நிலைமை ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
இலங்கை எதிர்நோக்கியுள்ள இந்த பிரச்னை குறித்து அரச அச்சகத் திணைக்களத்தின் பிரதானி கங்கா கல்பணி லியனகே பிபிசி தமிழ் வினவியது.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார சிக்கலுக்கு மத்தியில், கடதாசிகளை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் ஏற்றுக்கொண்டார்.
சர்வதேச சந்தையில் கடதாசிக்கான விலை பல மடங்காக அதிகரித்துள்ளமையும், கடதாசிகளை இறக்குமதி செய்ய முடியாதுள்ளமைக்கான காரணம் என அவர் குறிப்பிடுகின்றார்.
கடந்த ஆண்டு ஆரம்ப காலப் பகுதியில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட ஒரு மெற்றிக் தொன் வெள்ளை நிற கடதாசி, தற்போது 3 லட்சம் ரூபாவிற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் கூறுகின்றார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் 6 மாத காலத்திற்கு போதுமான கடதாசி தங்கள் வசம் காணப்படுவதாக கூறிய அவர், தேவைக்கேற்ற விதத்தில் மாத்திரமே அச்சிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
குறிப்பாக ஒன்று முதல் இரண்டு வருடங்களுக்கு தேவையான கடதாசிகளை தாம் கையிருப்பில் வைத்துக் கொள்வதாக கூறிய அவர், இந்த முறை அதனை செய்ய முடியாது போயுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அடுத்த வருடத்திற்காக பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கும் புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான கடதாசிகள் முடிவடைந்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
எனினும், பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான கடதாசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அந்த கடதாசிகள் கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள டாலர் பிரச்னையே, கடதாசி இறக்குமதி தடைப்பட்டமைக்கான காரணம் என அவர் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, மின்சார சபை மின்கட்டண பட்டியல் மற்றும் பாடசாலை பரீட்சை வினாத் தாள்கள் ஆகியவற்றை அச்சிடும் நடவடிக்கைகளை அந்தந்த நிறுவனங்களே மேற்கொள்வதாக கூறிய அவர், அவர்களிடம் கடதாசி நிறைவடைந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், அனைத்து பக்கங்களிலும் தாம் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும், தேவைகேற்ற வகையிலேயே அச்சிடும் நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் அரச அச்சகத் திணைக்களத்தின் பிரதானி கங்கா கல்பணி லியனகே தெரிவிக்கின்றார்.